Sunday, December 31, 2006

மாத்திரை எனும் அளவு


தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலும், அமெரிக்காவில் பாராளுமன்ற தேர்தலும் சில மாதங்களுக்கு முன் நடந்து முடிந்திருக்கிறது. வேட்பாளர்கள் போட்டி கடுமை. ஒரு வேட்பாளர் இன்னொருவரை பார்த்து, " அவர் எனக்கு எம்மாத்திரம் ? " என்று சவால் விடுவதை மேடைகளில் பார்க்கிறோம்.

மாத்திரம்/மாத்திரை என்ற சொல் 'அளவு' என்பதை குறிக்கிறது. 'கண் இமை நொடியென அவ்வெ மாத்திரை' என்று தொல்காப்பியம்(எழுத்து அதிகாரம்- 7) கூறுவதை பார்க்கிறோம்.

எழுத்தின் அளவுகளை மாத்திரையால் அளந்த தமிழர்கள், இசையை அளக்கும் குறியீடாக பயன் படுத்தி இருப்பார்களோ? metre(English)- metron(Greek) - metrum(Latin) ஆகிய இசையை அளக்கும் சொற்கள்
http://cnx.org/content/m12405/latest/
மாத்திரை என்பதில் இருந்து வந்ததோ?


உளர் என்னும் மாத்திரையர் அல்லால் பயவாக்
களர் அனையர் கல்லாதவர். [ கல்லாமை 41 : 6 ]

கல்லாதவர், இந்த உலகத்தில் உள்ளார் என்பது மாத்திரம் அல்லால், வேறு பயன் என்ன? அவர் களர்(பயிரிட முடியாத) நிலத்திற்கு ஒப்பாவர்.

கற்றவரை எப்படி அளவிடலாம்? சமுதாய பயன் - எழுதிய நூல்கள் - வழங்கிய உரைகள் - கண்டுபிடிப்புகள் - ஆக்கம் - என்று பல்வேறு அளவீடுகளை வைக்க முடியும். கல்லாதவரை எப்படி அளவிட முடியும்? 'அவர் இருக்கிறார்' என்னும் மாத்திரையால் மட்டும் அளவிட முடியும் அல்லவா?


உடம்பு சரியில்லை. மருத்துவரிடம் செல்கிறோம். அவர் 2 வகையான மாத்திரையை தருகிறார். ஒன்றை அடுத்த ஒரு வாரத்திற்கு காலை சாப்பிட்டபின் சாப்பிட வேண்டும். இன்னொன்றை இரவு சாப்பிட்டபின் அடுத்த இரண்டு வாரங்களுக்கு சாப்பிட வேண்டும். இத்தகைய சரியான அளவுகளை(சாப்பிடும் அளவு, நேரம், காலம்) கொண்டதால் தான் 'மாத்திரை' என்ற சொல் மருந்திற்கு பொருந்துகிறது அன்றோ?

ஆப்பிரிக்காவில் மேலைநாட்டு மருத்துவர் ஒருவர் பல்வேறு நோயாளிகளை சோதித்து மருந்துகள் கொடுத்துக் கொண்டே வந்தார். அப்படி ஒருவர் மருந்தை வாங்கி சென்றார். 3 வாரம் ஆனது. அந்த நோயாளிக்கு எந்த முன்னேற்றமும் இல்லை. மருத்துவரிடம் திரும்பி சென்றார். " நீங்கள் கொடுத்த மாத்திரையை தவறாமல் 3 வாரமாக சாப்பிட்டேன். ஆனால் எந்த முன்னேற்றமும் இல்லை. புதிதாக வயிறும் சரியில்லாமல் போகிவிட்டது" என்றார் கவலையுடன். அந்த மருத்துவர் தான் கொடுத்த மருந்து சீட்டை வாங்கிப் பார்த்தார். மருந்து சீட்டில் எழுதியிருப்பதோ .... முதுகிலும் தொடையிலும் தடவிக் கொள்ளும் களிம்பு !!!!

கடந்த ஓராண்டுக்கு மேல் நான் ஆதரித்து வரும் தொண்டு நிறுவனம் - doctors without borders. சிறப்பாக தொண்டு ஆற்றிவரும் நிறுவனம். 1999 ஆம் ஆண்டிற்கான நோபல் பரிசு பெற்ற நிறுவனம்.

புத்தாண்டில் இந்தத் தொண்டு நிறுவனத்தை பற்றி பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
www.doctorswithoutborders.org


அனைவருக்கும் 2007 புத்தாண்டு வாழ்த்துக்கள்.


அன்புடன்,
கரு.மலர்ச் செல்வன்


Monday, December 04, 2006

பொன் முட்டையிடும் வாத்து


நீங்கள் வாத்தை பார்த்திருப்பீர்கள். ஆனால் பொன் முட்டையிடும் வாத்தை பார்த்திருக்கிறீர்களா? முருகேசன் வீட்டுக்கு சென்றால், சுவரில் பொன் நிறமான, பொன் முட்டையிடும் வாத்தின் போட்டோ ஒன்றை பார்க்கலாம். ஆம் போன மாதம் தான் அந்த வாத்து இறந்து போனது.

ஒரு வருடத்துக்கு முன்னெல்லாம் முருகேசனுக்கு அன்றாட வாழ்க்கையே சிரமம்தான். அவன் துயரங்களை பார்த்த கடவுள் அழகிய பொன் நிற வாத்து ஒன்றை பரிசாக அளித்தார். அந்த வாத்து தினமும் ஒரே ஒரு தங்க முட்டையை இடும். தங்க முட்டைகளை விற்று முருகேசன் செல்வமும் செழிப்பும் பெறலானான். தினமும் ஒவ்வொன்றாக, வாத்து பொன் முட்டையை இட்டு, அதை விற்று வாழ பொறுமை இல்லாதவனான் முருகேசன். ஒரு சிந்தனை தோன்றியது. தினமும் ஒரு முட்டையிடும் வாத்தை கொன்று விட்டால், அனைத்து முட்டைகளும் நமக்கு கிடைக்குமல்லவா? அடுத்த நிமிடமே அந்த வாத்து சதக்...வயிற்றின் உள்ளே பார்த்தால் ஒன்றும் இல்லை. அடடா! உடனடி தேவைகளுக்கு ஆசைப்பட்டு முதலையே இழந்தான் முருகேசன்.

ஆக்கம் கருதி முதல்இழக்கும் செய்வினை
ஊக்கார் அறிவு உடையார். [ தெரிந்து செயல்வகை 47 : 3 ]
Saturday, November 11, 2006

அறிவு என்னும் தெய்வம் - 2


இரண்டு வருடங்களுக்கு முன் சுனாமியால் ஆயிரக் கணக்கானோர் அழிந்து போன துயரம் இன்னும் நம்மில் உள்ளது. ஆனால் அத்தருணத்தில் அந்த அழிவுப் பகுதிகளில் இருந்த பறவைகளும்,விலங்குகளும் ஒன்றுகூட இறக்கவில்லை என்ற செய்தி வியப்பூட்டுகிறது.

http://www.naturesync.org/tsunami2.htm

யாருக்கு ஆறாவது அறிவு என்பது சிந்திக்க தகுந்தது. நாம் அனைவரும் அளவற்ற வால் அறிவுடன் பிறக்கிறோம் என்பதை சென்ற கட்டுரையில் பார்த்தோம் . ஆனால் 'நான் என்ற நினைப்பால் ( ego) ' , அத்தகைய அறிவுடன் உள்ளத் தொடர்பை இழந்து விடுகிறோம். பறவைகளும் விலங்குகளும் நமக்குள்ள வால் அறிவை பெற்றுள்ளன. ஆனால் அவை வளரும்போது நம்மை போல் தன்முனைப்பு(ego) இல்லாததால், பேரறிவுடனான தொடர்பு எப்போதும் உள்ளது.

அறிவுடையார் ஆவது அறிவார் ; அறிவிலார்
அஃதறி கல்லா தவர் [ அறிவுடைமை 43 : 7 ]
அறிவுடையார் நடக்கப் போவதை அறிவர் ; அறிவிலாதவர் அவ்வாறு அறியாத கல்லாதவர் ஆவர்.


அத்தகைய அறிவுள்ள விலங்குகளை பற்றி வேறு சில தகவல்கள்.....
கிராமங்களில் பறவைகளின் பறக்கும் திசையை வைத்தும், விலங்குகளின் சத்தத்தை வைத்தும் - பெரியவர்கள் சில அனுமானங்கள் கூறுவது இயற்கையோடு இயந்த வாழ்க்கையை காட்டுகின்றது அல்லவா?


எங்கள் வீட்டு தொட்டியில் உள்ள மீன்களுக்கு அன்றாடம் உணவளிப்பது என் வேலை. அன்று அவ்வாறு உணவு போட்டபின், ஓர் மீன் மட்டும் உணவருந்தாமல் அசையாமல் இருந்தது. இதற்கு பசியில்லையோ என்று நினைத்தேன். அடுத்த நாளும் அப்படித்தான்... மீன் இப்படி இருக்கிறதே என்ற கவலையில், பராபரிப்பு நிறுவனத்தை தொடர்பு கொண்டபோது, அவர்கள் சொன்ன தகவல் எனக்கு வியப்பை தந்தது. சாப்பிடாத அந்த மீன் நோயுற்றதென்றும், ஆதலால் அந்த நோய் நீங்கும் வரை எத்தகைய உணவையும் உண்ணாதென்றும் கூறினர். எத்தகைய பேருண்மையை இந்த மீன் அறிந்திருக்கிறது.

கண்டம் விட்டு கண்டம் செல்லும் பறவைகளின் அறிவு இன்னும் வியப்பூட்டுவதாக அமைகிறது.

விலங்கினமே, பறவையினமே! உன்னில் உள்ள இத்தகைய பேரறிவு எனக்கும் கிட்டாதா?

Saturday, November 04, 2006

அறிவு என்னும் தெய்வம்

யாராவது தவறு செய்துவிட்டால் 'அறிவு இருக்கா?' என்று கேட்கிறோம். எதிரே உள்ளவர் "அறிவு இல்லாததால் தான் உங்களை மாதிரி மனிதர்களுடன் பழகிக் கொண்டிருக்கிறேன்" என்று சொன்னால் நம் வாய் அமைதியாகிறது.

வகுப்பில் உள்ள மாணவர்களை பார்த்து ஆசிரியர் கண்களை மூடி இறைவனிடம் வேண்ட சொல்கிறார். ஆசிரியரும் மாணவர்களும் இரண்டு நிமிடம் அமைதியாக இறைவணக்கம் செய்கின்றனர். முடிந்தவுடன் ஆசிரியர் மாணவர்களை பார்த்து,
" நீங்கள் கடவுளிடம் என்னென்ன கேட்டீர்கள்" என்றார்.
' உயர்ந்த வேலை' , 'மகிழ்ச்சி' , 'செல்வம்' , 'வசதியான பெரிய வீடு', 'அழகான மனைவி' .. என்று ஒவ்வொருவராக பதில் சொல்ல ஆரம்பித்தனர். இதையெல்லாம் கேட்ட ஆசிரியர்,
" என்னப்பா, உங்களில் ஒருத்தர் கூட 'அறிவைக் கொடு' என்று வேண்டவில்லையே? நான் எவ்வளவு படித்திருந்தாலும் ' இறைவா, எனக்கு மேலும் நல்ல அறிவைக் கொடு' என்று வேண்டினேன்" என்றார்.

கடைசி வரிசையில் இருந்து ஒரு மாணவன்,
" அய்யா, நாங்கள் எல்லாம் எங்களிடம் இல்லாததை கேட்டோம். நீங்கள் உங்களிடம் இல்லாததை கேட்டீர்கள்" என்றானே பார்க்கலாம் !


நாங்கள் அட்லாண்டாவில் இருந்தபோது பக்கத்து ஊருக்கு சென்று வண்டியில் திரும்பி வந்துகொண்டிருக்கிறோம். அதிக போக்குவரத்து இல்லாத சாலை. சாலையில் இருந்த குப்பை பை ஒன்றில் வண்டி ஏறி கிரீச் என்ற சத்தம் கேட்டது. குப்பைத்தானே என்ற அலட்சியத்தில் தொடர்ந்து செல்கிறோம். 2-3 நிமிடங்கள் கழித்து எங்கள் வண்டியை கடப்பது போல வந்த வண்டியில் இருந்து இளைஞர் ஒருவர் 'வண்டியை ஓரங்கட்டவும்' என்று சைகை செய்கிறார். ஓரங்கட்டியதும், அவரும் வண்டியை நிறுத்தி ஓடிவந்து,

" அடிப்பாகத்தில் தீ, உடனே வெளியேறுங்கள்(Your cartank is on fire! Get out immediately) " என்று சொன்னவுடன் குப்பென்றது எனக்கும் என் மனைவிக்கும். பின்னால் 2 வருட குழந்தை. 3-4 மணித்துளிகளில் நாங்கள் அனைவரும் வெளியேறி தூர வந்து காரின் கீழே பார்க்கிறேன். தீச்சுவாலைகளுடன் டேங்க்கு முழுவது பற்றி எரிகிறது. ஆ! இன்னும் சில நிமிடங்கள் தாமதித்திருந்தால்?? இன்னும் எங்களை காப்பாற்றிய அந்த இளைஞரின் முகம் நினைவில் உள்ளது. அன்றாட வாழ்க்கையில் பார்த்திராத சாந்தமான தோற்றம். கிருத்துவ கலாச்சாரங்களில் ஏஞ்சல் என்றும் இந்து சமய மரபினில் புண்ணியம் என்றும் சீன வழக்கங்களில் முன்னோர் என்றும் இருந்து வரும் நம்பிக்கை. இது எப்படி செயல்படுகிறது?

உலகிலுள்ள உயிர்கள் அனைத்திலும் நுண்பொருளாக இருப்பது ' தூய இடைவெளி என்னும் இறைவெளி' . இந்த இறைவெளி தூய்மையானது; வால் அறிவானது ; ஒழுங்கான இயக்கம் உடையது; உவமை இல்லாதது . இப்பண்புகளையே 'கடவுள் வாழ்த்து' அதிகாரத்தில் வள்ளுவர் சொல்வதை பார்க்கிறோம்.
http://valluvam.blogspot.com/2005_07_10_valluvam_archive.html


இவற்றில் 'வால் அறிவு'(குறள் 1: 2) என்பதின் பொருள் வால் ஆட்டும் அறிவு அல்ல! வால் போல் நீ...ள....மா.....ன அறிவு. Infinite Intelligence என்று பெயர்க்கலாம். நம்மில் இருக்கும் இத்தகைய வால் அறிவே நம்மை ஆபத்திலிருந்து காப்பாற்றுகிறது. நிறைய ஆராய்ச்சிகள் செய்து முயன்றும் முடியாத விஞ்ஞானிக்கு 'சம்பந்தமே' இல்லாத ஒரு தீர்வை அளிக்கின்றது; பத்தாயிரம் மைல்களுக்கு அப்பால் தன் குழந்தை இருந்தாலும், அக்குழந்தைக்கு ஒரு துன்பம் நிகழும்போது, தாயின் மூளை அலைகளை(brain wave) அதிர வைப்பதும் இந்த வால் அறிவு செய்யும் அற்புதங்கள். இந்த வால் அறிவையே,

அறிவு அற்றம் காக்கும் கருவி; செருவார்க்கும்
உள் அழிக்கல் ஆகா அரண். [ அறிவு 43 :1]
அறிவு பெரும் துயரங்களில்(அற்றம்) இருந்து காக்கும் கருவி; பகைவரும்(செருவாரும்) அழிக்கவல்லா அரண் உடையது.


நாம் அனைவரும் இந்த வால் அறிவை உணர்ந்தாலே பயன் கிட்டும். வீட்டுக்கு விருந்தினர் ஒருவர் வருகிறார் என்றால் வீட்டை ஒப்புரவு செய்து, நல்ல உணைவை சமைப்போம். அந்த விருந்தினரும் மகிழ்ச்சியுடன் திரும்பி வரவே ஆசைப்படுவார் அல்லவா? அதுபோல் வால் அறிவை வரவேற்று, உபசரித்தால் நமக்கு உதவிட எப்போதும் தயார். ஆபத்திலிருந்து நம்மை காக்கும். புதுமையான தீர்வுகளுக்கு வழிவகுக்கும். இன்னும் பல நல்லதும் செய்யும். அவை....


அன்புடன்,
கரு.மலர்ச் செல்வன்


Saturday, October 21, 2006

விதியை எளிதாக வெல்ல....


குடும்பம், வேலை என்று எங்கும் அழகேசனுக்கு கடினமான நேரம்தான். எதை எடுத்தாலும் பிரச்சனைதான். உதாரணமாக வேலை செய்யும் அலுவலகத்தில் சென்ற வாரம் அழகேசன், அங்குள்ள ஒரு மேலாளருக்கு வணக்கம் செலுத்தினார். நமக்கெல்லாம் நமது மேலாளர்களுக்கு வணக்கம் செலுத்தினால் நல்லதுதானே நடக்கும்? ஆனால் அழகேசனுக்கு அவர் செய்த வணக்கமே அவருக்கு கிடைக்கவேண்டிய தீபாவளி ஊக்கத்தொகை பாதியாக கிடைக்க வழிசெய்தது. வியப்பாக இருக்கிறதா? இதுதான் காரணம். அழகேசன் வணக்கம் சொல்லி அந்த மேலாளரிடம் இனிமையாக பேசிக் கொண்டிருப்பதை பார்த்தார் இன்னொரு மேலாளர். இரண்டு மேலாளருக்கும் ஏழாம் பொருத்தம். கேட்கவா வேண்டும். அழகேசனின் தீபாவளி ஊக்கத் தொகை பாதியானதின் கதை இதுதான்!. தொடர்கதையாக வீட்டில் துணைவியார் அவரை என்ன பாடுபடுத்தியிருப்பார் என்று நீங்களே ஊகித்து கொள்ளுங்கள்!!


சிலர் இதை 'விதி' என்றனர். வேறு சிலர் 'கோள்கள் நிலை' சரியில்லை என்றனர். உறவினர் ஒருவர் அழகேசனை அந்த ஊரில் உள்ள துறவியிடம் அழைத்து சென்றார் - 'பரிகாரம்' ஏதேனும் கிடைக்குமா என்ற ஆவலில்.


அழகேசனின் துன்பங்களை கேட்டறிந்த அந்த துறவி,

" உன் துயரங்கள் அனைத்திற்கும் ஒரு எளிய வழி ஒன்று சொல்கிறேன். நாளையில் இருந்து 21 நாட்களுக்கு, காலை 4 மணிக்கு எழுந்து குளித்து, 20 நிமிடம் ஏதேனும் நல்ல நூல் ஒன்றை படி. 21 நாட்கள் கழித்து வா" என்றார்.

அழகேசனுக்கோ ஒரே குழப்பம். நம்முடைய துன்பங்களுக்கும் இந்த துறவி சொல்லும் தீர்வுக்கும் என்ன தொடர்பு என்று தெரியவில்லை. இருந்தாலும் செய்வதாக சொல்லி விடைபெற்றார் அழகேசன்.


அடுத்த நாள் காலை 4 மணிக்கு ஒலிஎழுப்பி(wakeup alarm) வைத்து தூங்கச் சென்றார். காலை 4 மணி... ஒலி எழுப்புகிறது.. எழுந்திரு என்று மனம் சொல்கிறது...உடல் மறுக்கிறது..... இன்னும் 30 நிமிடம் கழித்து எழுந்திருக்கலாம் என்றொரு சாக்கு சொல்லி மனதை அமைதிப் படுத்தி உடல் உறக்கத்தில் தொடர்கிறது.... அழகேசன் எழுந்திருக்கும் போது காலை 7.30. தினமும் இதே நிலைதான்.


21 நாட்கள் கழித்து துறவியிடம் சென்றார் அழகேசன். பிடுங்கும் வெட்கத்துடன் நடந்ததை கூறினார். துறவி புன்னகைத்து,

துறப்பார்மன் துப்புரவு இல்லார் - உறற்பால
ஊட்டா கழியும் எனின். [ ஊழ் 38 : 8 ]

புலன் இன்பங்களிலிருந்து துறவு என்னும் உறுதி இல்லாதவர்கள், அடைய வேண்டிய துன்பங்களில் இருந்து விதி(ஊழ்) நீங்கிவிடும் என்று நினைப்பது ஏன்?

புலனடக்கம் என்னும் உறுதி இருந்தால் விதியை வெல்லலாம் அன்றோ?


அன்புடன்,

கரு.மலர்ச் செல்வன்

Wednesday, October 11, 2006

யாதும் ஊரே

பணி நிமித்தமாக நியூ ஆர்க் சென்றிருக்கும் போது நான் தங்கியிருந்த விடுதியில் ஒரிசாவில் இருந்து வந்திருந்த ஒரு இளைஞரை சந்தித்தேன். 2 மாத வேலைக்காக வந்திருந்தார். இதற்கு முன் ஐரோப்பாவில் சில நாடுகளிலும், ஜப்பான், கொரியா போன்ற நாடுகளிலும் வேலை செய்த அனுபவங்களையும் கூறினார். இந்தப் பணி முடிந்தவுடன் சிங்கப்பூர் செல்வதாகவும் கூறினார்.

தகவல் தொழில்நுட்பம் மற்றுமல்லாமல் மருத்துவம், உயர்கல்வி துறைகளிலும் இந்தியர்கள் பலநாடுகளில் பணியாற்றுகிறார்கள். உயர்ந்த கல்வி பெற்றவர்களை பல நாடுகள் 'வருக, வருக' என்று வரவேற்கின்றன.

இப்படிப்பட்ட நிலையை பார்த்தபின்னும், பலர் கற்காமல் இருப்பது ஏன்?

யாதானும் நாடாமல் ஊராமால் என்னொருவன்
சாந்துணையும் கல்லா தவாறு. [ கல்வி 40 : 7 ]
எந்த நாடும் தன் நாடாம்; எந்த ஊரும் தன் ஊராம் ; இப்படி இருக்கையில், ஒருவன் சாகும் வரையில் கற்காது இருப்பது ஏன்?


'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்பதும் ' கற்றோர்க்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு' என்பதும் இதை ஒத்தது அன்றோ?


அன்புடன்,
கரு.மலர்ச் செல்வன்

Tuesday, September 05, 2006

ஆ !

பயம் - இது நம் அனைவருக்கும் இருப்பது. என்னுடைய பள்ளி, கல்லூரி காலங்களில் விடுமுறைக்கு ஊருக்கு செல்லும் போது இரவு 10, 11 ஆகிவிடும். ஆற்றைக் கடந்து செல்லவேண்டும். அடர்ந்த இருட்டில் நடந்து செல்லும் போது பயம் கவ்விக் கொள்ளும். வேலை, குடும்ப வாழ்க்கை என்று பயம் இல்லாத ஒன்று சொல்லுங்கள் பார்க்கலாம்.

குழந்தை பிறந்தவுடன் அழுகிறது. 9+ மாதங்கள் தாயுடன் இணைந்து இருக்கும் போது அவ்வளவு பாதுகாப்பு உணர்வுடன் இருக்கிறது. அதேபோல் இறையில் இருந்து நாம் பிரிந்திருக்கிறோம் என்ற நிலையில் பயம் வருகிறது.

இறை ஒன்றே. அதுவே மெய்ப்பொருள் என்றுணர்ந்தால் பயம் காணாமல் போய்விடும் அன்றோ?

ஐயுணர்வு எய்தியக் கண்ணும் பயமின்றே
மெய்யுணர்வு இல்லா தவர்க்கு [ மெய்யுணர்தல் 36: 4 ]

ஐந்து புலன்களால் எய்திய நிலை நம் பயத்தை போக்காது. மெய்யுணர்வே பயத்தை நீக்கும்.

ஹாலோவின்(Haloween) அக்டோபர் மாதத்தில் பயத்தை மையப்பொருளாக கொண்ட 'விழா'. அறுவடை விழாவாக ஆரம்பித்திருக்கும் என்று நினைக்கிறேன். இன்றும் விவசாயத்தை ஆதாரமாக கொண்ட கான்சாஸ்(Kansas) போன்ற மாநிலங்களில் இன்றும் ஹாலோவினை அறுவடை விழாவாக கொண்டாடுகிறார்கள். இந்த ஹாலோவின் சமயத்தில் வெளிவரும் திரைப்படங்கள், சந்தைப்பொருட்கள் என்று எல்லாமே 'பயம்' என்பதை மையமாக கொண்டிருக்கும். ஆனால் பயத்தை கொண்டாடுவதாலா பயத்தை நீக்க முடியும்??

மெய் உணர்வால் மட்டுமே முடியும்.

பேரன்புடன்,
கரு.மலர்ச் செல்வன்

Sunday, August 27, 2006

பெரிய தொப்பிக்காரன்; மாடே இல்லாதவன்

டெக்சாஸில் விவசாய சமூகத்தினரிடம் ஒரு பழமொழி உண்டு. 'Big Hat; No Cattle'.

"அங்கே போகின்றவனைப் பார்! எவ்வளவு பகட்டாக இருக்கின்றான். அவனிடம் ஆடு மாடு உண்டா?"

மற்ற பல கலாச்சாரங்களில் கூட மாட்டை செல்வமாக மதிக்கும் பழக்கம் இருப்பதை அறிகிறோம். அந்த காலத்தில், அரசர்கள் வேற்று நாட்டை படையெடுக்கும் போது முதலில் பிடித்து செல்வது அங்குள்ள மாடுகளைதான் என்று வரலாற்றில் படிக்கின்றோம்.

மாடு என்றாலே சிறந்த செல்வம் அல்லவா?

செல்வம் அழியக்கூடியது. ஒருவர் பெற்ற கல்விச் செல்வம் அவர் வாழ்நாள் முழுவதும் துணை வருவது; அழியாதது. அதுவே மாடு போன்ற சிறந்த செல்வமாகும்.

கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவர்க்கு
மாடு அல்ல மற்றையவை. [ கல்வி 40 : 10 ]

Monday, July 31, 2006

தம்பிக்கு எந்த ஊர்?

கடந்த 3 வாரங்களாக எழுதாமைக்கு காரணம் – நான் தமிழகம் சென்று வந்ததால் ஏற்பட்ட இடைவெளி. 5-6 மாதங்களுக்கு ஒருமுறை சென்று வருகிறேன். பெற்றோரை பார்க்கவேண்டும், மற்றும் அங்குள்ள தொழிலை கவனிக்க வேண்டும் என்பவை பயணத்தின் நோக்கமாக இருந்தாலும், இதுமாதிரி பயணங்களால் நல்லது என்னவென்றால் நான் பிறந்த ஊருக்கு சென்றால் யாரும் ‘தம்பிக்கு எந்த ஊர்’ என்று கேட்பதில்லை. அனைவருக்கும் நம்மை தெரியும்!

இந்த பயணத்தின் மூலம் நெஞ்சில் நீங்கா இரண்டு சந்திப்புக்கள். திருச்சி அருகில் (அல்லூர்- திருச்சியில் இருந்து கரூர் செல்லும் சாலையில்- காவிரி கரையில் அமைந்துள்ள அழகிய ஊர்) ‘திருவள்ளுவர் தவச்சாலை’ தமிழ் அறிஞர் திரு.இளங்குமரனார் அவர்களையும் , சென்னையில் இசைக்கலைஞர் டி.கே.எஸ்.கலைவாணன் அவர்களையும் சந்தித்தது.

ஜூலை 18ம் தேதி காலையிலேயே நாம் தங்கியிருக்கும் திருவானைக்காவலில் இருந்து அல்லூருக்கு 20 நிமிடங்களிலேயே சென்றடைந்தோம். இளங்குமரனார் திருவள்ளுவர் கோவிலையும், பாவாணர் நூலகத்தையும் காட்டி விளக்கினார். இவர் 65க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். திருக்குறள் ஓதி திருமணங்களையும் நடத்தி வருகிறார். அவரிடம் பேசும்போது நிறைய திருக்குறள்களில் வரும் ‘ஆறு’(நல்லாறு, அறத்தாறு, ஆற்றின் ஒழுக்கி… ) இதன் பொருள் கேட்டேன். அழகான விளக்கம் கொடுத்தார். “ மண்ணை அறுத்து கொண்டு போவதால் ஆறு. ஆற்றை ஒட்டியே மனித நாகரிகங்கள் தோன்றியுள்ளன. ஆதலால் செல்வது – வாழ்வது என்ற பொருள்களை ‘ஆறு’ குறிக்கும்” என்றார். ‘ஆற்றுப்படை’ என்ற சொல்லும் ஆறு என்ற வேர்ச்சொல்லை கொண்டது என்று விளக்கினார். பழனியில் திருமுருகனை காண நான் செல்ல வேண்டும். எனக்கு வழி தெரியாது. கூகுள், மேப்கொஸ்ட் போன்ற சேவைகளும் கிடையாது. எதிரே வரும் பெரியவர் ஒருவரை கேட்கிறேன். பழனிக்கு போவதற்கு வழியை(ஆறு) சொல்கிறார். பயணக்களைப்பு இல்லாமல் இருக்கவும், பயமின்றி செல்லவும் பாடல்களை நமக்கு பாதுகாப்பிற்கு(படை) அனுப்புகிறார். திருமுருகாற்றுப்படை என்ன சூழலில் பாடப்பெற்றது என்பதையும் அறிய முடிந்தது.

ஜூலை 20ம் தேதி மதியம் சென்னையில் கலைமாமணி திரு டி.கே.எஸ் கலைவாணன் அவர்களை என் குடும்பத்தினருடன் சென்று சந்தித்தோம். இவர் இன்றைய தமிழ் நாடகங்களின் முன்னோடி திரு. டி.கே.சண்முகத்தின் தவப்புதல்வர். 2002ஆம் ஆண்டில் சிகாகோவில் நடைபெற்ற வட அமெரிக்கத் தமிழ்ச் சங்க மாநாட்டில் திருக்குறள் கடவுள் வாழ்த்து பாடிய இனிய குரலால் தெரியும். பின்னர் நண்பர் அட்லாண்டா சந்திரசேகரன் இவர் பாடிய 13 திருக்குறள் குறுந்தகடு கொடுத்தபின் , எம் குடும்பத்தினர் அனைவருக்கும் இவர் அறிமுகமானார். சந்தித்தபோது, இவர் பாடிய திருக்குறள் குறுந்தகடுகளை(25 பிரதிகள்) வாங்கி வந்தோம். 4 கு.த(சீடி) இல் 1330 பாடல்களையும் அழகாக பாடியுள்ளார். என் குடும்பத்தினரின் திருக்குறள் மனப்பாட முயற்சிக்கு வெகுவாக உதவிடும்.

எனது தம்பிக்கும், தங்கைக்கும் இந்த இசைத் தொகுப்பை கொடுக்கும்போது, இவை 1 கோடி ரூபாய்க்கு சமம் என்று சொல்லிக் கொடுத்தேன். உண்மையாக.

Friday, June 30, 2006

நான் யார் - 2

தன்னை அறியும் சிந்தனையில் அறிவழகன் ஆற்றோரமாக நடந்து செல்கிறார். நான் 'உடலும் இல்லை' ; 'மனமும் இல்லை' என்றால் உயிராக இருக்க முடியுமா? இந்த சிந்தனையில் நடந்து செல்லும்போது ஆற்றங்கரையில் இருந்த ஓர் வீட்டில் குழந்தையின் சத்தம் கேட்கிறது. இப்பிறப்புதானே உயிரின் வித்தாக அமைகிறது. அப்பிறப்பின் காரணம் என்ன?

பொருள் அல்லவற்றைப் பொருள் என்றுணரும்
மருள்ஆனாம் மாணாப் பிறப்பு.
[ மெய்யுணர்தல் 36:1]
( மருள் - மயக்கம்)


அவாஎன்ப எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும்
தவாஆ பிறப்பீனும் வித்து .
[ அவா அறுத்தல் 37 : 1 ]
(அவா - ஆசை ; தவா - தவறாது )

இந்த இரண்டு குறள்களும் பிறப்பின் மூலத்தை எப்படி படம்பிடித்துள்ளது என்று சிந்திக்கலானார் அறிவழகன்.

மயக்கம் x ஆசை --> பிறப்பு ---> உயிர்

ஆணும் பெண்ணும் கூடுவதால் பிறப்பு என்று மேலோட்டமாக பார்க்கும்போது புலப்படுகிறது. ஆனால் உண்மையில் மயக்கமும் ஆசையும் கூடியே பிறப்பு உண்டாகிறது என்று தெளிவு பிறக்கிறது.

இந்த உயிர், பிறந்த சுமார் 2 ஆண்டுகள் வரை உடலை மட்டுமே இயக்கும் ஒரு சக்தியாக விளங்குகிறது. ஆனால் வளர வளர, நம் ஐந்து புலன்கள் மூலம் உணர தொடங்கும்போது, உயிரே மனமாக படர்கிறது. எப்படி? ஒரு வயது குழந்தை பாம்பின் படத்தை (அல்லது) உண்மையான பாம்பினை பார்க்கிறது. எந்தவொரு எண்ணமும் அக்குழந்தையின் மனதில் இருக்குமா? ஆனால் வளர்ந்தவுடன் பாம்பை பார்த்தால் பயமோ அல்லது கருணையோ தோன்றுவது இயற்கைதானே? இது எப்படி நடக்கிறது? புலன் மூலம் பாம்பை பற்றிய முதல் அனுபவம் அல்லது அறிவு 'நினைவாக' நம்மில் பதிந்துவிடுகிறது. அடுத்த முறை படத்தில் பாம்பைப் பார்த்தால் கூட, நம்மில் பதிந்துள்ள நினைவு மனமாக(எண்ணமாக) படர்கிறது. ஆக நாம் வளர வளர உயிர் உடலை மட்டும் இயக்காமல், மனத்தையும் இயக்கும் சக்தியாக அமைகிறது.

இந்த உயிரை பார்க்க முடியுமா? முடியாது. உணரத்தான் முடியும். ஓரளவு விவரிக்கவும் முடியும். நம் உடல் பஞ்சபூதங்களால் ஆனது என்பதை ஏற்கனவே பார்த்தோம். நிலம், நீர், நெருப்பு, காற்று, வான். இவற்றிலும் 99.99% நம் உடல் வானாக(ஆகாயமாக) அமைந்துள்ளது என்று அறிவியலார் சொல்கிறார்கள். இங்குதான் வான் துகள்கள் அதிவேகத்தில் சுழன்று(பிரபஞ்ச கோள்கள் போல்) ஒரு வித காந்தசக்தியை(bio-magnetism) உருவாக்கிறது. மின்சார கம்பியில் பாயும் எலெக்ரான்கள் போல், இந்த காந்த சக்தியும் நம் உடல் முழுக்கப் பாய்ந்து சுற்றி வருகிறது. இதைத் தான் நாம் உடலின் இயக்கங்களாகவும், மனத்தின் எண்ணங்களாகவும் உணர்கிறோம்.

உடலையும், மனத்தையும் இயக்குவதால் உயிர் நிலையானதா? என்ற எண்ணத்துடன் அறிவழகன் ஆற்றைக் கடக்கும்போது இறந்துபோன ஒருவரை தூக்கிச் செல்வதை பார்க்கிறார்.

நெருநல் உளன்ஒருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்து இவ்வுலகு. [ நிலையாமை 34:6]
('நேற்று நன்றாக இருந்தார். இன்றில்லை' என்னும் பெருமை உடையது இவ்வுலகு)

மேலும் உயிரின் நிலையாமையை திருவள்ளுவர் கூறும்போது,

நாள்என ஒன்றுபோல் காட்டி - உயிர் ஈரும்
வாள் அது உணர்வார்ப் பெறின் [ நிலையாமை 34: 4 ]
( வாழ்நாள் நிலையானது போன்ற தோற்றத்தை காட்டினாலும், ஒவ்வொரு நாளும் கீழே இறங்கும் வாள் போன்றது)

குடம்பை தனித்துஒழிய புள் பறந்தற்றே
உடம்பொடு உயிரிடை நட்பு [ நிலையாமை 34 : 8 ]
( குடம்பு - கூடு ; புள் - பறவை - கூடை விட்டு பறந்துவிடும் பறவையை போன்றது உடம்பை விட்டு பறந்திடும் உயிர் )


உடல், மனம், உயிர் என்று நாம் அறியும் அனைத்தும் நிலையற்றது என்று உணர்ந்தால், 'நான் யார்' என்ற கேள்வி இன்னும் ஆழமாகிறது.


அறிவழகன் இந்த ஆழ்ந்த சிந்தனையுடன் அந்த ஆற்றங்கரையில் உள்ள அழகிய ஆலமரத்தின் கீழே அமர்ந்து, கண்களை மூடி மனதை ஒருமுகப் படுத்துகிறார். அமைதி அவர் உள்ளத்தில் பரவி இருப்பதை உணர்கிறார். நேரம் ஆக ஆக அகக்காட்சியாக தெரிகிறது.
>>>>>> உடலில் 99.99% ஆக இருக்கும் வான்வெளி தெரிகிறது.....
>>>>>> அந்த வான்வெளியில் இருக்கும் வான் துகள்கள் தெரிகின்றது
>>>>>>> அந்த வான் துகள்கள் பிரபஞ்ச வேகத்தில் ஓர் ஒழுங்கு முறையாக சுழல்வது தெரிகிறது...
>>>>>>>>> வான் துகள்களின் சுழற்சியின் ஆற்றல், காந்த சக்தியாக -உயிராக - உடலை இயக்கும் ஆற்றலாக - எண்ணங்களைப் படர செய்யும் படக்கருவியாகவும்(projector) தெரிகிறது.......

>>>>>>>>>>>>> அந்த வான் துகள்களை அகக்கண்ணால் பார்க்க பார்க்க அவை எங்கோ மறைவதாக(blackhole) தோன்றுகிறது.....
>>>>>>> அந்த 'மறைபொருளே' - பேரன்பும் அருட்பேராற்றலும் நிறைந்த இறைவெளியாகவும் உணர முடிகிறது.

நான் யார் என்ற கேள்விக்கான விடை அகக்காட்சியாக தெரிகிறது.


அன்புடன்,

கரு.மலர்ச் செல்வன்

Friday, June 09, 2006

நான் யார்?

வாழ்க்கையின் ஏதோவொரு கட்டத்தில் 'நான் யார்' , ' என் வாழ்க்கையின் பயன் என்ன?' போன்ற கேள்விகள் தோன்றுவது இயல்பு.

மனிதர்கள் ஞானிகளாகவும், மாபெரும் சாதனையாளர்களாகவும் ஆவதும் இக்கேள்விகளால் தான்.

மாணிக்கவாசகர் திருவாசகத்தில்...

நான் யார்? என் உள்ளம் யார்? நானங்கள் யார்? என்னை யார் அறிவார்?
வானோர் பிரான் என்னை ஆண்டிலனேல் ?
[ நானங்கள் - ஐந்து புலன்கள் ]
(இளையராஜா இசையில் இப்பாடலை கேட்கும் போது உள்ளம் உருகும் அன்றோ? )

சமீபத்தில் மறைந்த அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி பயிற்றுவித்த குண்டலினி பயிற்சியில் இத்தகைய ஆராய்தல் செய்வதற்கும் பயிற்சி அளிக்கிறார்கள்.

திருக்குறள் அதிகாரங்கள் நிலையாமை(34), துறவு(35), மெய்யுணர்தல்(36), அவாவறுத்தல்(37 ) இந்த அகத்தாய்விற்கு வெகுவாக உதவுகிறது.

நம் கண்களுக்கு தெரிவது இந்த உடல். இந்த உடல்தான் நானா? உடல் கோடானு கோடி திசுக்களால் ஆனது என்பது நமக்கு தெரியும். ஆனால் இந்த உடலில் உள்ள திசுக்கள் சுமார் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை முழுமையாக புதுப்பித்துக் கொள்கிறது. 2001 ஆண்டில் என் உடம்பில் இருந்த திசுக்கள் அனைத்தும் இப்போது இல்லை என்கிறது விஞ்ஞானம். மேலும் திசுக்களில் எதனால் ஆனது? அணுக்களால். அந்த அணு புரோட்டானும், நியூட்ரானும், எலெக்ட்ரானும் ஆனது என்றும் அறிவியல் கூறுகிறது. அணுவை நுண்ணியத் துகள்களாக பிரித்தாலும், 99.99% 'வெற்றிடமாக' இருக்கிறது என்றும் அறிவியல் ஆராய்ச்சி கூறுகிறது.
அப்படியென்றால் நம் உடல் என்பது 99.99% 'வெற்றிடம்' என்றும், அப்படி கொஞ்சம் நஞ்சம் மீதி உள்ள துகள்கள் அனைத்தும் தொடர்ந்து அழிவதும், பிறப்பதுமாக இருக்கிறது. 2 ஆண்டுகள் முன் இருந்த உடல் கூட இப்போது என்னிடம் இல்லை! . அப்படியென்றால் நான் இந்த உடல்தான் என்று சொல்வது சிற்றறிவு தானே?
நில்லா தவற்றை நிலையின என்றுணரும்
புல்லறிவு ஆண்மை கடை. [ நிலையாமை 34: 1]
[ புல்லறிவு - சிற்றறிவு ; கடை - கடைசி]

'காயமே இது பொய்யடா. காற்றடைத்த பையடா'
என்ற பாடல் புரிய ஆரம்பிக்கிறது.

இந்த ஆராய்ச்சியில் தெளிவாக தெரியும் ஒன்று. 99.99% வெற்றிடமாக உள்ளது உண்மையில் வெற்றிடமா? அல்லது வெட்ட வெளி போல் தோன்றும்
பேரண்டமா(Gallaxy)?


நான் இந்த உடல் இல்லையென்றால், உள்ளமாக(~ மனம்,mind) இருக்க முடியுமா? உள்ளம் என்பது என்ன? நம்மை சிந்திக்க வைத்து, உடலின் அனைத்து பாகங்களை இயக்குவதும், உணர்வுகளின் ஊற்றும் அதுதான். உதாரணமாக 'பசி' என்று உடலுக்கு சொல்வது இந்த மனம்தான். 'நினைவு' (~ memory) என்பது இந்த மனத்திற்கு இன்றியமையாத ஒன்றாக உள்ளது. நினைவில்லாமல் பசி தோன்றாது ; நினைவில்லாமல் சூடான இட்டலி, சாம்பாரை பார்த்தவுடன் எச்சில் ஊறவும் செய்யாது. நினைவே மனத்திற்கு ஆதாரம். முதல் முறையாக ஒரு உணவை பார்க்கும்போது எந்த நினைவும் இல்லாமல் சுரப்பிகள் வேலை செய்வது இல்லை. ஆனால் ஒரு முறை சுவைத்துவிட்டால் அந்த 'நினைவு' பதிந்து விடுகிறது. அடுத்த முறை அதை படமாக பார்த்தால் கூட, நினைவு மனத்தின் மூலம் வயிற்றில் சுரக்க வைக்கிறது. ஐந்து புலன்கள்(கண், காது, மூக்கு, நாக்கு, தோல்) நினைவுகளை தோற்றுவிக்கும் கருவிகளாக இருக்கிறது. ஆதலால்தான் மனத்தை அடக்க வேண்டும் என்றால் ஐம்புலன்களை காக்க வேண்டும்.
ஒருமையில் ஆமைபோல் ஐந்து அடக்கல் ஆற்றின்
எழுமையும் ஏமாப்பு உடைத்து [ அடக்கமுடைமை 13 : 6 ]

அப்படி ஐம்புலன்களில் தம் கட்டுக்குள் வைத்தவர்கள் பெரியோர் என்கின்றார்.
சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் என்றுஐந்தின்
வகை தெரிவான் கட்டே உலகு. [ நீத்தார் பெருமை 3 : 7 ]

நம் மனதின் இன்னொரு வெளிப்பாடு எண்ணம். எண்ணங்கள் பெரும்பான்மையானவை புலன்கள் தயாரிப்பவை. சாலையில் செல்லும்போது பெரிய தாடி வைத்த ஒருவர் என்னைக் கடக்கிறார். உடனே 'தாடி வேலை இல்லாதவராக இருப்பாரோ?', 'இவர் போலவே ஒருவரை போனவாராம் பார்த்தேன். அவர் அழுக்குச் சட்டையுடன், கையில் பை ஒன்று வைத்திருந்தார்' ..... என்று ஒன்றை அடுத்து ஒன்றாக எண்ணங்கள் வந்துகொண்டிருக்கின்றன. இதற்கும் நினைவு வெகுவாக உதவுகிறது.

மனத்தில் தோன்றும் எண்ணங்கள் உடலுக்கு தெரியாமல் மறைந்திருக்க முடியுமா? வீட்டில் நுழைகிறோம். மேசையில் சிகப்பு நிறம் தோய்ந்த கத்தியை பார்க்கிறோம். புலன் தெரிவிக்கும் இந்த செய்தி, எண்ணமாக('நம் வீட்டில் ஏதோ விபரீதம்') மாறுகிறது. நினைவையும்( 'சினிமாவில் இதுபோன்ற கத்தியை பார்த்திருக்கிறேன்') துணைக்கு அழைக்கிறது. விளைவு : அட்ரினலின் சுரந்து உடலில் மாற்றங்கள் உண்டாகின்றன. உண்மையிலேயே காய்கறி வெட்டும் கத்தியில் குங்குமப் பொட்டு சிதறி சிகப்பாகி உள்ளது.

நினைவு மனத்திற்கு ஆதாரம் என்றால், எண்ணம் ? எண்ணமே மனம். மனத்தை உடைத்து உடைத்து பகுத்தாய்ந்தால் நாம் சென்றடைவது 'எண்ணம்'. அதிலும் தொடர்ந்து எண்ணங்களையா நம் கொடுக்கிறது. ஒரு அமைதியான இடத்தில் அமர்ந்து கண்களை மூடுங்கள் . முதல் எண்ணம்: ' நாளை விடுமுறை' , அடுத்த எண்ணம் ' இரவு என்ன சாப்பிடலாம்' ... என்று இரயில் வண்டிபோல் வந்துகொண்டிருக்கும். ஆனால் கூர்ந்து கவனித்தால் ஒரு எண்ணத்திற்கும் இன்னொரு எண்ணத்திற்கும் இடையே ஒரு 'வெட்டவெளியை' காணலாம். இந்த வெட்ட வெளியில் தங்கியிருந்தால் ஒருவித அமைதி தெரிகிறது. ஆனால் அதிகநேரம் இந்த எண்ண இடைவெளியில் அமர்ந்திருக்க முடியவில்லை. ...

மனம் எண்ணங்கள், நினைவுகள் ஆனது என்று பார்த்தோம். அந்த எண்ணங்களும், நினைவுகளுமே மாறிக் கொண்டே செல்வதையும் பார்த்தோம். ஆதலால் 'நான்' மனமும் அல்ல என்பதை உணர முடிகிறது.

உடலை ஆய்ந்துப் பார்த்தால் அங்கும் 'வெட்ட வெளி' யால் நிரம்பி இருப்பதை அறிகிறோம். மனத்தை ஆராய்ந்து பார்த்தால், எண்ணங்களுக்கு இடையே 'வெட்ட வெளி' நிறைந்திருப்பதை பார்க்கிறோம்.

மேலும் 'நான்' உடலும் உல்லை; மனமும் இல்லை என்பதை காண முடிகிறது.

அப்படியென்றால் 'நான்' உயிராக இருக்க முடியுமா?

[ தொடரும்]


அன்புடன்,
கரு.மலர்ச் செல்வன்

Wednesday, May 31, 2006


விமானத்தில் ஓர் பெரியவரை சந்தித்தேன்
வணக்கம் என்றேன்
வணிக அட்டை ஒன்று கொடுத்தார்
பற்பல கோடிகளுக்கு சொந்தக்காரர் என்றது
அவர் அட்டை
வீடு எங்கே என்றேன்?
சென்னை
லாஸ் ஏஞ்சல்
சூரிக்
சிங்கப்பூர்
இங்கெல்லாம் சொந்தத்தில் வீடு உண்டென்றார்
எனினும்..
வருடத்தில்
பாதி நாட்கள் நட்சத்திர ஓட்டல்களில்
மீதி நாட்கள் விமானங்களில்
என்றார்.


ஒரு இனிப்புக் கடை
முதலாளிக்கு
சக்கரை நோய்.
துண்டு பால்கோவை கூட
மற்றவர் சாப்பிட்டுதான் பார்க்க முடியும்.


வகுத்தவன் வகுத்தவகை அல்லால் - கோடி
தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது.

[ஊழ் 38 : 7]
எவ்வளவு கோடி சேர்த்தாலும், இயற்கை(இறை) வகுத்தது அல்லாமல் மற்றவற்றை அனுபவிப்பது கடினமாகும்.அன்புடன்,
கரு.மலர்ச் செல்வன்

Friday, May 19, 2006

ஆசை.. அறம்... பழி


அமுதா நாம் அன்றாடம் சந்தித்திருக்கும் பக்கத்து வீட்டுப் பெண். கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கிறாள். அவளுக்கு 3 தோழிகள்- நெருங்கிய நண்பர்கள். முதலாமவர் பிரியா. பெயருக்கு ஏற்றார் போல் சினிமா, ஓட்டல், கடை, கேளிக்கை என்று அந்த நகரத்தில் அனைத்தும் அத்துபடி. அமுதாவிற்கும் ஆசைக்காட்டி அனைத்து இடங்களுக்கும் அழைத்து செல்வாள். "அனுபவிக்க வேண்டும்" என்ற கொள்கை பிரியாவிற்கு.

அமுதாவின் இரண்டாம் தோழி இனியா. அறமே உருவான அழகி அவர். அமுதா எப்போதெல்லாம் ஊர்சுற்ற கிளம்பினாலும், " அமுதா, கல்வி கற்பதே நமது கடமை. மற்றும் கல்லூரியில் நடக்கும் கலை, இலக்கிய கூட்டங்களிலும் பங்கேற்பது நல்லதொரு பொழுதுபோக்கு. பிரியாவுடன் சேர்ந்து உன்னை பாழாக்கி கொள்ளாதே" என்று எச்சரிப்பாள். நல்ல நட்பிற்கு இலக்கணமாக கடிந்துரைப்பாள். பிரியாவுடன் ஊர் சுற்றினாலும், இனியாவிற்கு பயந்து அமுதா, ஒழுக்கமாகவும், தேர்வில் ஓரளவு தேர்ச்சிப் பெற்று வருகிறாள்.

அமுதாவின் அப்பா குறைவான மதிப்பெண்களை பார்க்கும் போதெல்லாம் காரணம் என்னவென்று கேட்டால், அமுதா கைக்காட்டுவது தாமரையை ! தாமரை அமுதாவின் அம்மா. ஆம், அமுதாவின் மூன்றாம் தோழி அவள் அம்மாதான். "அம்மா, என்னை படிக்க விடுவதே இல்லை. எதாவது ஒரு வேலை கொடுத்துக் கொண்டே இருப்பார்". கடைசியில் பழி அம்மாவிடம்.


நம் ஒவ்வொருவரிடமும் அமுதா இருக்கிறார். நம்முடன் இருக்கும் மூவர் யார்? ஐந்து புலன்களின் மயக்கத்தில், ஆசையுட்பட்டு, துன்பப் படுகிறோம்(பிரியா). அதே நேரத்தில் நம்முடைய அறத் தொடர்பு(இனியா) ஆசை-துன்பத்தை கண்டு அஞ்ச வைக்கிறது. அதனால் நல்ல செயல்களை செய்ய வைக்கிறது. அப்படி நல்ல செயல்களை செய்யாத போது பழி வந்து சேர்கிறது.

அஞ்சுவது ஓரும் அறனே - ஒருவனை
வஞ்சிப்பது ஓரும் அவா. [ அவா அறுத்தல் 37 : 6 ]
( ஒருவனை வஞ்சனை செய்வது ஆசை. அதே நேரம் ஆசையை கண்டு அஞ்சச் செய்வது அறன் )

செயற்பாலது ஓரும் அறனே - ஒருவர்க்கு
உயற்பாலது ஓரும் பழி. [ அறன் 4 : 10]
( செய்யவேண்டிய அறன் ஒன்றே. அப்படி செய்யாமல் விட்டால் வருவது பழி)
அன்புடன்,

கரு.மலர்ச் செல்வன்

Tuesday, May 02, 2006

வேண்டியது கிடைக்க... துறக்க வேண்டும்

விவசாயி அறவாழிக்கு அந்த வட்டாரத்திலேயே நல்ல பெயர். வறட்சியானாலும், வெள்ளமாக இருந்தாலும் அவர் நிலத்தில் மட்டும் ஆண்டு தோறும் நல்ல விளைச்சல் என்றால் அவர் புகழுக்கு வேறு காரணமா வேண்டும். ஒருநாள் அந்த ஊரின் பள்ளி ஆண்டுவிழாவில் அறவாழியை பேச அழைத்திருந்தனர்.

" மாணவர்களே, உங்களுக்கெல்லாம் என் அனுபவத்தில் இருந்து ஒரு இரகசியம் சொல்லப் போகிறேன். வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்று உங்களில் பலருக்கு ஆசை இருக்கும். அவர்களுக்கு இந்த இரகசியம்" என்றார். அனைவரும் நிமிர்ந்து உட்கார்ந்து அவரின் பேச்சை கூர்ந்து கேட்க ஆரம்பித்தனர்.

" விதை எவ்வளவு சிறியதாக இருக்கிறது. ஆனால் அந்த விதைக்குள் அனைத்தும் அடங்கியுள்ளது. நாம் ஒன்றுமே செய்ய வேண்டியதில்லை. என்ன வியப்பாக உள்ளதா? " என்று புரியாத புதிராக பேச ஆரம்பித்தார்.

ஒரு சிலர் வித்திடும் போதே , நிறைய சந்தேகங்கள்!
* இது முளைக்குமா?
* களை, மற்றும் பூச்சிகளில் இருந்து எப்படி காப்பது?
* சரியான நீர் கிடைக்குமா?
* நல்ல தானியங்களையும், காய்களையும், பழங்களையும் தருமா?
அதன் விளைவாக அச்சம்/கவலை வருவதும், கடைசியில் பயந்தபடியே விளைச்சல் பொய்த்து போவதும் பார்க்கிறோம். இத்தகைய மக்கள் பெரும்பாலும் தோல்வி அடைவதை பார்க்கிறோம்."

அதற்கு மாறாக சிலர், விதைக்கும் போதே வண்ணக் கனவுகளுடன், எதிர்காலத்தில் விளைச்சலில் பயன் குறித்து கற்பனைகளிலும் இருப்பதை பார்க்கிறோம். விரிவான திட்டங்கள் வகுப்பதையும் பார்க்கிறோம். இவர்கள் ஓரளவு வெற்றி பெறுவதையும் பார்க்கிறோம்." என்று அறவாழி பேசலானார்.

கூட்டத்திலிருந்த ஒரு மாணவன் எழுந்து, " ஐயா, அப்படியானால் நீங்கள் இரண்டாம் வகைதானே? நல்ல கனவுகள், திட்டங்கள் இவைகளுடன் உங்கள் உழைப்பு சேர்ந்திருப்பதால் தானே வெற்றி பெருகிறீர்கள்?" என்றான்.

அறவாழி புன்னகையுடன், "நான் இரண்டுமே செய்வதில்லை. ஒவ்வொரு விதையின் உள்ளேயும், அதன் வளர்ச்சியும் அதை சார்ந்த திட்டங்களும் மாபெரும் சக்தியாக உறங்கிக் கொண்டிருக்கிறது. அந்த இயற்கையை முழுமையாக நம்பி வித்திடுவேன். முழுமையான நம்பிக்கை என்றால் துறவறம் போல். அந்த விதை எப்படி விளைய வேண்டும் என்று திட்டத்திலும் மூழ்க மாட்டேன். மாறாக அவநம்பிக்கையினால் உண்டாகும் செயலற்ற தன்மையும் இல்லை. இதைதான் துறவறம் என்று கூறினேன். அந்த விதை வளரும்போது தன்னுடைய தேவைகளை வெளிப்படுத்தும். அதை கவனித்து பணி செய்வேன். அவ்வளவே!. பிறகென்ன அமோக விளைச்சல்தான்! " என்று கூறினார் அறவாழி.

கடைசியில், " இந்த உண்மை தாவர விதைகளுக்கு மட்டுமா பொருந்தும்? நம் மனதில் இடும் எண்ணங்களுக்கும் இந்த இயற்கை விதி பொருந்து அல்லவா? நம் ஒவ்வொரு எண்ணமும் விதை தானே.
வாழ்க்கையில் ஒன்றை அடைய வேண்டும் என்றால் நாம் என்ன செய்யலாம் ?
(1) எந்த ஒரு கனவையும் தன்னலமற்ற வித்தாக நம் மனதில் விதைத்திட வேண்டும். '2010 ஆண்டில் 5 மில்லியன் டாலர்கள் வங்கிக் கணக்கில் இருக்கவேண்டும்' என்பது தன்னலம் நிறைந்த குறிக்கோள். அதே குறிக்கோளை ' பல மில்லியன்கள் ஈட்டி, 3 கல்வி நிலையங்களையும் ஓர் மருத்துவமனையையும் நிறுவி உதவிட வேண்டும்' என்பது தன்னலமற்ற உன்னத எண்ணமாக வித்திடலாம். தன்னலம் அற்ற எண்ணத்துள் தன்னைத் தானே வெளிப்படுத்தும் அளவற்ற பேராற்றல் நிறைந்திருக்கும்.
(2) விதை எப்படி செடி, பூ, மகரந்தம், காய், கனி, சுவையான கனிக்குள்ளே விதை என்று தன்னை அழகாக வெளிப்படுத்துகிறதோ அதுபோல தன்னலமற்ற எண்ணம் அழகிய சூழலாக உருவாகி, தேவையான வளங்களை ஈர்த்து, திறன் மிகுந்த செயல்களாக வெளிப்படுத்தும். ஆனால் இவையெல்லாம் நடக்க வேண்டுமென்றால் எண்ணமென்ற விதையின் இயற்கை சக்தியின் மீது முழுமையான நம்பிக்கை வைக்க வேண்டும். பற்று அற்ற துறவு வேண்டும்.

வேண்டின், உண்டாகத் துறக்க - துறந்தபின்
ஈண்டின் இயற்பால பல. [ துறவு 35 : 2]

நாம் ஒன்றை விரும்பினால், அதன் எண்ண நிலையிலேயே(வித்திலேயே) அதனை துறக்க வேண்டும். அப்படி துறந்தபின் எண்ணமெனும் வித்து பற்பல நன்மைகளை இயற்கையாகவே விளைவிக்கும்.

அன்புடன்,
கரு.மலர்ச் செல்வன்

Wednesday, April 19, 2006

வானோர்க்கு உயர்ந்த உலகம்

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும். [ இல்வாழ்க்கை 5:10]

இல்லறத்தை நல்லறமாக கொள்வார், வானுலகத்தில் உள்ள தெய்வங்களோடு வைக்கப் படுவார். இத்தகைய உலகம் எங்கே உள்ளது?

மனவளக் கலை(www.vethathiri.org) என்ன சொல்கிறது பார்க்கலாம். கண்களை மூடி புருவங்களுக்கு நடுவே கவனம் செலுத்தி தியானம் செய்தால் ஆக்கிணை தவம். அங்கிருந்து எண்ணத்தை மேலே கொண்டு சென்று, மண்டையை வருடுவது போல் வட்டமாக தியானித்தால் துரிய தவம்.

அங்கிருந்து ஒளி(அல்லது தாமரை) மேலே எழும்புவது போல் சுமார் ஒன்றரை அடி மேலே சென்று தியானத்தில் ஈடுபடலாம். இதற்கு துரியாதீத தவம்.

அங்கிருந்து எழும்பி, குளிர்ச்சியான ஒளி வீசும் நிலாவை சுற்றிவந்து, பின்னர் சக்திவாய்ந்த ஒளிவீசும் சூரியனை வலம் வந்து, நமது எண்ணத்தை பரவவிட்டால் நாம் அங்கு பார்ப்பது வானுலகம். அங்கு ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி , பாம்பிரண்டும்(இராகு, கேது) இயங்கிக் கொண்டிருப்பதை உணர்கிறோம். நமது அகக் கண்ணால் பார்க்கிறோம். உயரிய சக்தியை நாம் உணர்கிறோம். இந்த 'இடத்துக்கு' அடையாளத்திற்கு ஒரு பேர் சொல்லவேண்டும் என்றால் 'சக்தி தளம்' என்றழைக்கலாம். இங்கு எண்ணற்ற சக்தி ஒழுங்காக பரவி இருப்பதை பார்க்கலாம். திருவள்ளுவர், 'வான் உறையும் தெய்வம்' என்று சொல்லும் இடம் இந்த 'சக்தி களம்' என்று நான் நினைக்கின்றேன்.

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும். [ இல்வாழ்க்கை 5:10]

சக்தி தளத்தில் தியானித்தபின், மேலே சென்றால் அமைதி உணர்வில் மூழ்கலாம். இங்கு எங்கு பார்த்தாலும் ஒரே அமைதி. வெற்றிடம் போல் தோன்றும் 'சிவ களம்' . இந்த சுத்த வெளியியை கூர்ந்து கவனித்தால் பேரருள் அங்கு பரவியிருப்பதை பார்க்க முடியும். சிவனே என்று 'சும்மா' இருக்கும் இடமும் இதுதான். இவ்விடத்தை சுத்த வெளி, சிவ தளம் என்று மனவளக் கலை கூறுகின்றது. இந்த இடத்தை திருவள்ளுவர் எப்படி அடையமுடியும் என்றும் கூறும் போது,

'யான்', 'எனது' என்னும் செருக்கு அறுப்பான் - வானோர்க்கு
உயர்ந்த உலகம் புகும். [ துறவு 35 : 6 ]

நான், எனது என்னும் தன்முனைப்பு(செருக்கு, ego) இல்லாதவர் இந்த வானோர்க்கு உயர்ந்த உலகத்தை(சிவ தளம், சுத்த வெளி) எளிதாக அடைய முடியும்.

அன்பர்களே முயன்று பாருங்கள்.

Tuesday, April 11, 2006

உதவியின் அளவு

ஒருவர் செய்யும் உதவியை எப்படி அளப்பது? நகுலன் என்ற இளைஞர் ஒருவர் தொழில் தொடங்க எண்ணினார். $ 25,000 முதலாக தேவைப் பட்டது. அவர் ஓரளவு அறிந்த பெரிய செல்வந்தரிடம் சென்றார். அந்த செல்வந்தரும் நகுலனின் தொழில் திட்டத்தை கேட்டறிந்தார். நகுலனிடம் இருந்த ஊக்கத்தையும் திறமையையும் கண்டறிந்தார். நகுலன் கேட்ட பணத்தை மனமுவந்து கொடுத்தார். நகுலனும் நன்றியுடன் பெற்றுக் கொண்டு திரும்பினார்.

வியாபாரத்தை ஆரம்பித்து, கருத்துடன் உழைத்தார் நகுலன். 20 ஆண்டுகளில், பல மில்லியன்கள் இலாபம் ஈட்டும் நிறுவனமாக வளர்ந்தது. நூற்றுக் கணக்கான பேர் அங்கு பணிபுரிந்து பயன் பெறுகிறார்கள். இப்போது சொல்லுங்கள் நகுலன் பெற்ற உதவியை எப்படி அளப்பது? உதவி  $25,000 தான் என்று சொல்வதா? அதன் பயனாக அமைந்த பல மில்லியன்கள், பலருக்கு வேலை வாய்ப்பு, உலகிற்கு பயன் என்று அளப்பதுதானே சரியானது.

உதவி வரைத்தன்று உதவி – உதவி
செயப்பட்டார் சால்பின் வரைத்து.    
[ செய்நன்றி அறிதல் 11: 5 ]
{சால்பு – திறன்}

உதவியின் அளவை வைத்து அந்த உதவியை அளக்க முடியாது. அந்த உதவியைப் பெற்றவரின் திறனை பொருத்தே அந்த உதவியை அளவிட முடியும்.

Friday, March 31, 2006

தேநீர் குடிக்கலாம் வாங்க...

ஓட்டல் கடை வைத்திருந்த ஓர் செல்வந்தர் நீண்ட நாட்களாக நல்லதோர் குரு தமக்கு அமைய வேண்டும் என்று நினைத்திருந்தார். ஆனால் எங்கும் தேடி அலைய நேரமும் இல்லை. நல்ல வியாபாரம் வேறு. ஓட்டலுக்கு வருவோரை ஒவ்வொருவராக கவனிக்கலானார். திடீர் என்று ஒருநாள் தனது ஓட்டலுக்கு வந்த ஒரு பெரியவரின் காலில் விழுந்து,
"ஐயா, நான் நீண்டநாட்களாக தேடிக் கொண்டிருந்த குரு நீங்கள்தான். என்னை தங்கள் மாணவனாக ஏற்றுக் கொள்ளுங்கள்" என்றார் பணிவுடன்.

ஓட்டலில் வேலை செய்வபர்களுக்கு ஆச்சரியம். தன்னுடைய முதலாளியிடம் சென்று, " முதலாளி, எப்படி அவர்தான் நல்ல குரு என்று கண்டுபிடித்தீர்கள்? " கேட்டார்கள்.

அதற்கு அந்த ஓட்டல் அதிபர், " ஓட்டலுக்கு நிறையபேர் வருகிறார்கள். அவர் தேநீர் அருந்தும் விதத்தை பார்த்துக் கொண்டிருந்தேன். தேநீர் அருந்திக் கொண்டே செல்போனில் பேசுவதும், அங்கும் இங்கும் பார்ப்பதும் அல்லது பத்திரிக்கை படிப்பதுமாக இருந்ததைதான் இதுவரை கண்டு வந்தேன். ஆனால் இவரோ தேநீரை நிதானித்து இரசித்து குடித்துக் கொண்டிருந்தார். இவரே என் குரு என்று முடிவு செய்தேன்" என்றார்.

ஒரு நாளில் சுமார் 60,000 - 80,000 எண்ணங்கள் நம் மனதில் தோன்றுவதாக கூறுகிறார்கள். சுமாராக ஒரு நொடிக்கு ஓர் எண்ணம் என்று கணக்கு வருகிறது. இப்படி அலைபாயும் மனத்தை கட்டுக்குள் கொண்டுவந்து 'இங்கே, இப்போது வாழ்' என்பதைத்தான் ஞானிகள் சொல்லி வந்துள்ளார்கள்.

அப்படி வாழாதவர்களை திருவள்ளுவர்...

ஒருபொழுதும் வாழ்வது அறியார் கருதுப
கோடியும் அல்ல பல. [ நிலையாமை 34 : 7]

வள்ளுவனுக்கு என்ன கிண்டல் பாருங்கள்!. ஒரு பொழுதில் வாழத் தெரியாமல் அலைபாயும் நம்மிடம் கோடி(ஒன்றல்ல, பல) எண்ணங்கள் என்கிறார்.

Friday, March 24, 2006

நிலையாமை -3


[குறிப்பு: நிலையாமை பற்றி விளக்க ஆ.கு.அ என்று ஏன் தலைப்பிட்டீர்கள் என்று சிலர் எனக்கு எழுதியிருந்தார்கள். எனக்கு இரண்டும் ஒரே பொருள் கொண்டதாகவே படுகிறது. எனினும் தலைப்பை குழந்தைகளும் படிக்கும்படி மாற்றி அமைத்துள்ளேன்]

அடுத்த நமது நண்பரை கோவிலுக்கு சென்றபோது சந்தித்தேன். அவர் சற்று சோகத்தில் இருந்தார். விசாரித்தேன். “ உங்களுக்கு அவரைத் தெரியுமா?” என்று எனக்கும் ஓரளவு தெரிந்த  ஒருவர் நேற்று மாரடைப்பால் இறந்துபோனதாக வருந்தினார். எனக்கும் அந்த செய்தி துன்பம் தந்தது.
“ அடடா!. போன மாதம் கூட அவரை ஓர் விழாவில் பார்த்தேன். நன்றாக இருந்தாரே. நல்ல மனிதன்”. எனக்கு வியப்பு மேலிட்டது.

நெருநல் உளன்ஒருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்து இவ்வுலகு.  [ நிலையாமை 34: 6]

( “நேற்று நன்றாக இருந்தார். ஆனால் இன்றில்லை. “ என்னும் பெருமை உடையது இவ்வுலகம் )

உண்மைதானே?


Thursday, March 16, 2006

நிலையாமை-2

தேநீர் குடித்துக் கொண்டே நண்பரிடம், “ பொருட்செல்வமாவது பரவாயில்லை. நடுவு நிலையுடனவாக இருந்தால்(செப்பம் உடையவர்) அவர்களின் செல்வம் சிதைவின்றி அவரின் சந்ததிகளுக்கு போய் சேரும்[நடுவு நிலைமை 12: 2]. ஆனால் உயிர் அப்படியா? “ என்றேன்.

உலகத்தில் பெரிய பயம், மரண பயம் அல்லவா? ஆனால் நாம் அன்றாடம் என்ன நினைக்கிறோம்? ‘நேற்று போல் இன்று இருக்கும் ; இன்றுபோல் நாளை இருக்கும்’ என்ற மாயை நமக்கு ‘நாள்’ என்பதை ஒன்று போல் காட்டுகிறது. சமீப காலம் வரை காலம் நிலையானது(Time is absolute) என்றுதானே அறிவியல் நம்பி வந்தது?  காலம் கற்பனையான ஒன்று என்பதை காலத்தின் வரலாறு பற்றி ஹாக்கிங் எழுதிய புத்தகத்தை படித்துப் பார்த்தால் தெரியும்.
http://www.amazon.com/gp/product/0553109537/sr=8-7/qid=1142437229/ref=pd_bbs_7/104-2864453-1548752?%5Fencoding=UTF8
தமிழிலும் இப்புத்தகம் வந்துள்ளது. காலம் ஒரு வரலாற்று சரித்திரம் - A Tamil translation of an English original '''' A Brief History of Time'''' authored by Stephen Hawking -  மொழிபெயர்ப்பு : நலங்கிள்ளி, தியாகு . [www.kural.org – உலகத் தமிழ்மொழி அறக்கட்டளை இதை வெளியிட்டுள்ளது.]

வள்ளுவர் நேர மாயத்தைப் பற்றி என்ன சொல்கிறார் என்று கேட்கலாம்.
நாள் என்று ஒன்றுபோல் காட்டி – உயிர் ஈறும்
வாள்அது உணர்வார்ப் பெறின் [ நிலையாமை 34 : 4]

நண்பர், “ நாள் ஒரு மாயை என்று புரிகிறது. ஆனால் அது எப்படி உயிரை ஈர்க்கும் வாள் ஆகும்? மொட்டைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுவது போல் அல்லவா இருக்கிறது!“ என்றார் குழப்பமாக.

“ நம் உடலில் உள்ள உயிர் மேலிருந்து கீழே விழும் பந்துபோல். நாம் பிறக்கும் போது மேலே எறிந்தது, ஒவ்வொரு நாளும் கீழே விழுந்துக் கொண்டிருக்கிறது. நன்றாக  உடலை பாதுகாப்பதாலும், தியானத்தாலும் , காயகல்பம் போன்ற பயிற்சிகளாலும், வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருப்பதாலும் கீழே விழும் பந்தை மெல்லமாக விழ வைக்கலாம். ஆனால் காலம் என்ற சக்கரமும் , உயிர் வீழ்வதும் ஒன்றுக்கொன்று தொடர்புள்ளவை”

நண்பர், “ கேட்பதற்கே பயமாக இருக்கிறதே. மரணத்தை நெருங்கும் போது நமக்கு எப்படி இருக்கும்?” என்றார் அச்சத்துடன்.

“மரணம் நெருங்கும் போது எப்படி இருக்குமா? புலன்கள் முதலில் ஒன்று ஒன்றாக செயலிழக்கும். கடைசியாக நாக்கு செத்துப் போகும். விக்குள்(hiccups) எடுத்தால் அது மேலே கூட வராது!” என்று ஏதோ பார்த்தது போல நான் பேசினேன்.

நண்பர் இதை கேட்டவுடன், வியர்த்து விறுவிறுத்து ஏதோ பேய்ப் படத்தை பார்த்தவர் போல் ஆனார்.  
நாச்செற்று விக்குள் மேல்வாராமுன் நல்வினை
மேல்சென்று செய்யப் படும்.  [ நிலையாமை 34: 5 ]
(நாக்கு செத்து, விக்குள் மேலே வாரா முன் , நல்ல செயல்களை நாமே சென்று செய்து முடிக்க வேண்டும்.)

அந்நேரம் பார்த்து எனது துணைவியார் செல்லில் அழைத்தார்.
“ என்னங்க, மாலை ஆறு மணிக்கே வருகிறேன் என்று சொன்னீர்கள். இப்பொழுது மணி என்ன தெரியுமா? 8.30.”  என் மனைவியின் குரலை கேட்டவுடன் மரண பயத்தை விட பெரிய பயம் வந்தவனாய் நண்பரிடம் விடைப் பெற்று, விட்டேன் ஓர் ஓட்டம்!
                         ( தொடரும்..)Friday, March 10, 2006

நிலையாமை - 1

பல மாதங்களுக்கு பிறகு ஒரு நண்பரை சந்தித்தேன். என்னை பார்த்தவுடன், “ஹி..ஹி.. நேற்று ஒரு ஆடை-குறைப்பு அரங்கத்திற்கு (அதாங்க ஸ்டிரிப் கிளப்.. இனி ஆ.கு.அ என்றே அழைப்போம்) சென்றிருந்தேன். அங்கே $1000 பணம் கண்ணு மண்ணு தெரியாத செலவு செய்து விட்டேங்க. இதைப் பற்றி திருவள்ளுவர் ஏதாவது சொல்லியிருக்காரா ? ” என்றார் நொந்து. எப்படி அங்கே கண், மண் போன்றவை அங்கே தெரியும் என்று நொந்து கொண்டு அவரிடம் “ஆமாம். உங்கள் செயலுக்கு மிகவும் பொருத்தமான குறள் ஒன்று உள்ளது” என்றேன்.

கூத்தாட்டு அவைக் குழாத்தற்றே – பெருஞ்செல்வம்
போக்கும் அது விளிந்தற்று.   [ நிலையாமை 34 : 2 ]

“கூத்தாடுகின்ற அவைக்கு வருகின்றவர்கள் கூடுவதும், பிறகு குறைவது போல , பெருஞ்செல்வம் வரும் போகும். அது நிலையானது அல்ல” என்று திருக்குறள் உரையாசிரியர்கள் கூறுகின்றனர்.  பெருஞ்செல்வத்தின் நிலையாமையை குறிப்பிடும் போது கூத்தாடுகின்ற அவையை ஏன் கூற வேண்டும்? கோவலனும் நம் நண்பர் போல் , மாதவி கூத்தாடுகின்ற அவைக்கு சென்று நாட்டியத்தில் மயங்கி மாலை ஒன்றை பரிசலிப்பதாக சிலப்பதிகாரத்தில் படிக்கின்றோன். அந்த மயக்கமே அவன் விதியை நிர்ணயிப்பதாக அமைகிறது.  இன்றும் அது பொருந்தும் தானே?  

நண்பரிடம் தொடர்ந்து கூறினேன். “ இக்குறளை சொல்லும் முன் இன்னொன்றையும் உங்கள் சூழலுக்குப் பொருத்தமாக கூறுகிறார் வள்ளுவர்”

நில்லாதவற்றை நிலையின என்று உணரும்
புல்லறிவு ஆண்மை கடை.  [ நிலையாமை 34:1 ]

நில்லாதவற்றை நிலையானது என்னும் அறிவு கடையானது !.  ஆ.கு.அ வில் ஆடும் பெண்களின் அழகும் வனப்பும் நிலையானதா? அப்படி நிலையானது என்று உணர்ந்தால் அது உண்மையான அறிவா?

இப்படி நிலையில்லாத புறப்பண்புகள் கொண்ட செயல்களில் செல்வத்தை செலவழிக்காமல் வேறு என்ன செய்ய வேண்டும்?

அற்கா இயல்பிற்று செல்வம் – அது பெற்றால்
அற்குப ஆங்கே செயல்.  [ நிலையாமை 34 : 3 ]

செல்வம் நிலையற்ற வழிகளில் செலவழித்தால் அழிந்து போகும் தன்மை உள்ளது. ஆதலால் செல்வத்தை பெற்றோம் என்றால் , நல்ல செயல்களில் செலவழிக்க வேண்டும்.

நண்பரும் ஏதோ புரிந்ததுபோல் தலையாட்டினார்.

பேசிக்கொண்டே தேநீர் அருந்த அருகில் உள்ள கடைக்கு சென்றோம்….நிலையில்லாத இன்னொன்றை பற்றிப் பேச.
                         [ தொடரும்]

Wednesday, March 08, 2006

பகுத்துண்டு...

உணவு நம் வாழ்விற்கு அவசியமான ஒன்று. அவசியம் என்பதால் அளவுக்கு அதிகம் உண்பது எவ்வளவு கெடுதல்.  மேலும் மற்ற உயிர்களை கொன்று அதனால் ஆகும் இறைச்சியை உண்பதை நாம் தவிர்க்க வேண்டும்.  பகுத்து உண்டாலே இவ்வுலகத்தின் பட்டினிகளும், வறுமையும் தொலைந்து போகும்.

பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை.  [ கொல்லாமை 33 : 2 ]

திருக்குறளின் பொதுமை நெறிகளில் எனக்கு பிடித்த ஒன்று இக்குறள்.

Tuesday, March 07, 2006

திருமகளும் அவள் அக்காவும்

ஓர் ஊரில் இரண்டு சகோதரர்கள் இருந்தனர். இருவரையும் அவர்களின் தந்தை அழைத்து ஆளுக்கு $10,000 கொடுத்து, ஒரே மாதத்தில் யார் பணத்தை அதிகமாக பெருக்கி வருகிறார்களோ  அவருக்கு சிறப்பு பரிசு ஒன்றைக் கொடுப்பதாக கூறினார். இரண்டே இரண்டு நிபந்தனைகள் . 1. சூதாட்டம் கூடாது 2. பங்குச் சந்தையில் முதலிட கூடாது.

பத்தாயிரம் பெற்றுக் கொண்ட அண்ணன், உற்சாகமே இல்லாமல், அவனைவிட நிறைய பணமும் வசதியும் உள்ள அவன் நண்பர்களை நினைத்துக் கொண்டான். பொறாமையின் விளைவால் பேராசை கொண்டான். அவனுக்கு தெரிந்தவன் $10,000 கொடுத்தால் ஒரே மாதத்தில் இரண்டு மடங்கு பணம் கொடுப்பதாக ஆசை காட்டினான்.
ஒரு மாதத்தில் என்ன நடந்தது என்று நீங்கள் ஊகித்திருப்பீர்கள் அல்லவா? கொடுத்த பணத்தை அண்ணன் தொலைத்து விட்டான்.

அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள்
தவ்வையைக் காட்டி விடும்  [ அழுக்காறாமை 17 : 7 ]
பொறாமை என்று தீக்கொழுந்தை மனத்தில் கொண்டவனை, செய்யவள்(திருமகள்) தன்னுடைய அக்கா மூதேவிக்கு காட்டி விடுவாள். அழுக்காறு வறுமையில்(மூதேவி – வறுமையின் அடையாளம்) கொண்டு போய் விடும் அன்றோ?

தம்பி தனக்கு கொடுக்கப்பட்ட பத்தாயிரத்தை வைத்து என்ன செய்தான் என்று பார்ப்போம். தம்மிடம் இந்த பணத்தை வைத்து நாலு பேருக்கு நன்மை செய்தால் என்ன என்று யோசித்தான். தன் வீடு தேடி வந்த விருந்தினரின் தேவை அறிந்து அவர்களுக்கு உதவி செய்தான். ஒரு விருந்தினருக்கு வியாபாரம் ஆரம்பிக்க $5,000 தேவைப் பட்டது. அவரை உபசரித்து அவருக்கு தேவைப் பட்ட பணத்தை கொடுத்தனுப்பினான். இன்னொரு நாள் வந்த விருந்தினர் தனது பெண்ணின் கல்விச் செலவிற்கு $ 5,000 தேவை என்றார். இன்முகத்துடன் அப்பணத்தை கொடுத்தனுப்பினான். இரண்டு விருந்தினர்களுக்கான  தேவைகளை பூர்த்தி செய்ததில் அளவில்லா மகிழ்ச்சி அடைந்தான் இளையவன்.

இரு சகோதரர்களும் தன்னுடைய பணத்தை செலவு செய்துவிட்டனர். கையில் பணம் இல்லை. அப்பாவிடம் வந்தனர். நடந்ததை அறிந்த தந்தை இளையவனை அழைத்து, “ நீ விருந்தினருக்கு முகமலர்ச்சியுடன் உதவி செய்துள்ளாய். ஆதலால் அப்பணம் நல்ல விதைகளைப் போன்றது. தொழிலுக்கு கொடுத்த பணம் சில ஆண்டுகளில் பன்மடங்கு பெருகி, உன்னிடம் உதவியை பெற்றவருக்கும், அவரை சார்ந்தோர்க்கும் பயன் தரும். ஒரு பெண்ணின் கல்விக்கு கொடுத்த பணம் பிற்காலத்தில் அப்பெண்ணின் குடும்பத்திலும் சமூகத்திலும் செல்வத்தை பற்பல மடங்கு பெருக்கும். ஆதலால் பணத்தை ஒரே மாதத்தில் பன்மடங்கு பெருக்கிய உனக்கே என் சொத்தின் பெரும்பங்கை தரப்போகிறேன்” என்றார்.

அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து
நல்விருந்து ஓம்புவான் இல்.   [ விருந்தோம்பல் 9 : 4 ]
முகமலர்ச்சியுடன் விருந்தினரை பார்த்துக் கொள்பவர்களின் வீட்டில், நிரந்தரமாக(உறைதல்) திருமகள்(செல்வத்தின் அடையாளம்) வந்து அமர்ந்துக் கொள்வாள்.

Monday, March 06, 2006

சொர்க்கத்தின் கதவுகள் - 8

ஓர் ஊர் வழியே மூன்று துறவிகள் நடந்து சென்றார்கள். மூவரும் ஒரே மடத்தை சேர்ந்தவர்கள்.  அந்த மூவரையும் அந்த ஊரின் பெரியவர்கள் சந்தித்து வணங்கினார்கள். மாலையிட வேண்டும். யாருக்கு முதல் மரியாதை செய்ய வேண்டும் என்ற கேள்வி வந்தது. முதல் துறவி  “மடத்தின் தலைவன் நான். செல்வந்தர்களும், பெரிய மனிதர்களும் மணிக்கணக்காக காத்திருந்தே என்னை பார்க்க முடியும். நான் நினைத்தால்  முடியாதது இல்லை!” இவ்வாறு தன் பெருமைகளை சொல்ல ஆரம்பித்தார்.
இரண்டாம் துறவி நிறைய நூல்களை கற்றவர். அம்மடத்தின் சொத்துக்களை நிர்வகிக்கும் பொறுப்பில் இருப்பவர்.  அவர் “ இந்த மடத்தின் சொத்துக்கள், நிறுவனங்கள் அனைத்தும் என்னால் உண்டானதே . கடந்த 10 ஆண்டுகளில் மடத்தின் புகழை வளர்க்க என்னவெல்லாம் செய்துள்ளேன்” என்றார். யார் பெரியவர் என்ற விவாதம் பெரிதானது.

வந்த ஊர் பெரியவர்களுக்கு என்ன செய்வதென்று ஒரே குழப்பம். மூன்றாம் துறவியை எங்கே காணோம் என்று பார்த்தபோது,  சிவனே என்று மரத்தடியில் ஆனந்த உறக்கத்தில் இருந்தார்.

யான், எனது என்னும் செறுக்கறுப்பான் வானோர்க்கு
உயர்ந்த உலகம் புகும்.  [ துறவு 35: 6]
[செறுக்கு – ஆணவம் ]

யான், எனது என்கின்ற ஆணவத்தை ஒழித்தவர்கள், வானோர்க்கும் கிட்டாத புகழுலத்திற்கு உரியவர்கள்.

Wednesday, February 22, 2006

சொர்க்கத்தின் கதவுகள் - 7

வெஃகுதல்(அதிகாரம் 18) என்பது பிறன் பொருள் மீது ஆசைப்படுதல். இது தீய எண்ணம். இந்த எண்ணமே முற்றி செயலாக வடிவெடுத்தால் திருட்டுத்தனம். இதை பற்றி கள்ளாமை என்ற அதிகாரத்தில்(29) விரிவாக அறிகிறோம்.

அமுதன் நிறைய கல்வி பெற்று இளம் வயதிலேயே அரசின் உயர் பொறுப்பிற்கு வந்தார். பதவியும் புகழும் தந்த போதை அவருக்கு நியாமற்ற  ஆசைகளை கொடுத்தது.
நடுவின்றி நன்பொருள் வெஃகின் குடிபொன்றி
குற்றமும் ஆங்கே தரும். [ வெஃகாமை 18 : 1 ]

நியாமற்ற ஆசை ஒரு எண்ணம், விதை.  இலஞ்சம் வாங்க ஆரம்பித்தான் அமுதன். அவனுடைய செயல்களை பார்த்து நண்பர்கள் எச்சரித்தனர்.
வேண்டற்க வெஃகியான் ஆக்கம்- விளைவயின்
மாண்டற்க அரிதாம் பயன்.  [ வெஃகாமை 18 : 7]

எச்சரிக்கைகளை அமுதன் ஏளனத்துடன் ஒதுக்கித் தள்ளினான்.  அவனின் சொத்து 5 -6 ஆண்டுகளிலேயே ரூ 30 கோடிகளை தாண்டியது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.  ஒருநாள் அமுதன் வீட்டில் சிபிஐ சோதனை நடத்தி அனைத்து சொத்து ஆவணங்களையும் கைப்பற்றியது.
களவினால் ஆகிய ஆக்கம் அளவிறந்து
ஆவது போல கெடும்.   [ கள்ளாமை 29 : 3 ]
அமுதன் 1 ஆண்டு தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டான்.

கள்ளத்தனம் ஒரு போதை.  ஓராண்டுக்கு பின் வேலைக்கு சேர்ந்த அமுதன், தன்னுடைய பழைய பழக்கத்தை மறக்கவில்லை. முன்பை விட அதிகமாகவும் நவீனமாகவும் தன்னுடைய பொருள் ‘ஈட்டலை’ தொடர்ந்தான்.
களவின்கண் கன்றிய காதல் – விளைவின்கண்
வீயா விழுமம் தரும்.  [ கள்ளாமை 29 : 4]

ஆம்! விழுமம்(பழி) அமுதனின் வாழ்க்கையில் சீக்கிரமே வந்தது. நிரந்தர பணி நீக்கம் செய்யப்பட்டார். அனைத்து செல்வங்களையும் அரசு எடுத்துக் கொண்டது. செல்வ செழிப்பில் வாழ்ந்து வந்த அவரின் குடும்பம் சில மாதங்களிலேயே கடன் தொல்லையில் தள்ளப்பட்டது. சுற்றம் பழித்தது. அமுதனின் குழந்தைகளே அவரை வெறுத்து ஒதுக்க ஆரம்பித்தனர்.  45 வயதில் அமுதனுக்கு மாரடைப்பால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அளவுஅல்ல செய்தாங்கு வீவர் – களவு அல்ல
மற்றைய தேற்றா தவர்.  [ கள்ளாமை 29 : 9 ]
ஆம். தனது உழைப்பிற்கு ஏற்ற அளவு என்ன என்று அறிந்தும் களவினால் வீழ்ந்தார் அமுதன். அவர் களவை தவிர வேறு ஏதும் அறியாதவர் அல்லவா ?

மாரடைப்பாலும் மன உளைச்சலாலும் நோய்வாய் பட்டு படுத்த படுக்கையானார் அமுதன்.  இன்றோ நாளையோ என்று இருக்கிறார் என்று கேள்வி.
கள்வார்க்குத் தள்ளும் உயிர்நிலை; கள்ளார்க்குத்
தள்ளாது புத்தேள் உலகு.   [ கள்ளாமை 29 : 10 ]
பிறன் பொருளை திருடுவார்க்கு உயிர் நிலைபெறாது. உடம்பை விட்டு தவறிப்போகும். களவை செய்யாதவர்களுக்கு சொர்க்கத்தில் நிச்சயம் இடம் உண்டு.

Monday, February 20, 2006

விரல் நுனியில் திருக்குறள்

இன்று கதம்பம் சௌந்தர் ஒரு இணைப்பு அனுப்பியிருந்தார்.
http://s92430071.onlinehome.us/suvadik.htm

அற்புதம். அற்புதம். திருக்குறள்களை நினைவில் கொள்ள உதவும் பயனுள்ள செயலி இது. இளங்கோ சம்பந்தம் என்ற அன்பர் வடிவமைத்துள்ளார். வாழ்க வளமுடன்.

Tuesday, February 14, 2006

சொர்க்கத்தின் கதவுகள் - 6

வானுலகில் இருந்து ஒருநாள் தேவர் ஒருவர் பூமிக்கு அனுப்பப் பட்டார். எதற்காக என்றா கேட்கிறீர்கள் ? சிவனே என்று இருக்காமல் கொஞ்சம் வம்பு தும்பு செய்தாராம். மேலும் தன்னை தேவர்களின் தலைவனாக தேர்வு செய்யவில்லை என்ற புலம்பல் வேறு.

அவர் பூமியில் வந்து சேர்ந்த ஊரில் முத்து என்ற அறவழி வாழும் ஓர் செல்வந்தர் இருந்தார். ஊருக்கு பெரியவரும் கூட. அந்த ஊரில் முத்துவுக்கு பேரும் புகழும் இருந்தது. தன்னுடைய உழைப்பால் ஈட்டிய செல்வத்தின் பெரும்பகுதியை வறியோர்க்கும், செலவிட்டு வந்தார். இல்லறத்தை நல்லறமாக நடத்தி வந்தார். வழிபோக்கனாக வந்த அந்த (முன்னால்) தேவருக்கும் இருக்க இடம் கொடுத்து, தனது பண்ணையில் வேலையும் கொடுத்தார் முத்து . சென்ற இடத்திலாவது ஒழுங்காக இருக்ககூடாதா அந்த தேவர்? அங்கும் தனது வேலையை காண்பிக்க ஆரம்பித்தார். வேலை செய்யும் மற்ற தொழிலாளர்களை தூண்டிவிட்டு சதிசெய்ததில் முத்து கொலை செய்யப்பட்டார். முத்து வானுலகம் சென்றபோது அங்கு அவருக்காக சிவப்பு கம்பளம் விரிக்கப் பட்டிருந்தது. வானுலகம் வந்த முன்னால் தேவர் சிறையில் கலி சாப்பிட்டுக் கொண்டிருப்பதாக செய்தி.

நிலவரை நீள்புகழ் ஆற்றின் - புலவரைப்
போற்றாது புத்தேள் உலகு. [ புகழ் 24 : 4 ]
{ புலவர் - தேவர்.}
இவ்வுலகத்தில் சிறந்த புகழ் ஆற்றினால், வானுலகம் அத்தகையோரை போற்றும். தேவர்களை போற்றாது.

Friday, February 10, 2006

சொர்க்கத்தின் கதவுகள் - 5

சாவடி, சத்திரம் ஆகியவற்றை சிறுவயதில் பார்த்திருக்கிறேன். ஆனால் அதில் வழிபோக்கர்களுக்கு உணவு படைத்தெல்லாம் பார்த்த நினைவில்லை. எங்கள் கிராம வீட்டில் அப்போது(சிறிய வயதில்) திண்ணை இருந்தது. அந்த தெரு வழியாக செல்வோர் அதில் அமர்ந்து இளைப்பாறிச் செல்வதை பார்த்திருக்கிறேன் . பிறகு எனது பெற்றோர் வீட்டை மாற்றி அமைக்கும்போது, திண்ணை காணாமல் போனது ! விருந்தோம்பலுடன் மிகவும் தொடர்புடையது திண்ணை. முன்பின் தெரியாதவர்கள் கூட திண்ணையில் இளைப்பாறுவதுடன் அந்த வீட்டில் உணவும் உண்டு தங்குவார்கள். அவசர உலகில் நாம் தொலைத்த ஒன்று விருந்தோம்பல். பெற்றோர்களே சுமைகளாக தெரியும்போது விருந்து எம்மாத்திரம் ?

இக்காலக் கட்டத்திலும் நம்மால் செய்யக் கூடியது:
(1) வரும் விருந்தினர்களை குடும்பமாக உபசரித்து, மீண்டும் வாருங்கள் என்று வழி அனுப்பி வைப்பது.
(2) நமது குழந்தைகளை வரும் விருந்தினர்களிடம் அன்பாக பழக செய்தல். நாம் விருந்தினர்களை உபசரிக்கும்போது நம் குழந்தைகளையும் ஈடுபடுத்தல்.
(3) நம் வீட்டிற்கு விருந்தினர் வருகின்றார் என்றால், அவரை மகிழ்ச்சியுடன் எதிர்நோக்கல்.
(4) முன்பின் தெரியாதவர்களை வீட்டிற்கு வரவேற்று, விருந்தோம்பல். புலம் பெயர்ந்தவர்களுக்கு இது மிகவும் முக்கியம்.

விருந்தோம்பலை நம் வாழ்க்கை நெறியாக கொண்டிருந்தால், இவ்வுலகை விட்டு செல்லும் போது, நமக்கு சொர்க்க வாசல் திறந்திருக்கும். அந்த சொர்க்கத்தில் உள்ள வானத்தவர்க்கு(தேவர்களுக்கு) நாம் விருந்தாக அமைவோம்.

செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
நல்விருந்து வானத் தவர்க்கு.
[ விருந்தோம்பல் 9 : 6 ]

Thursday, February 09, 2006

சொர்க்கத்தின் கதவுகள் - 4


சொர்க்கத்தில் அன்று தணிக்கை(ஆடிட்) நடந்து கொண்டிருந்தது. ஆதலால் அன்று சொர்க்கத்துக்கு வந்திருந்த 3 நபர்களை தேர்ந்தெடுத்து மறு ஆய்வு செய்து கொண்டிருந்தார்கள். முதலாமவர் திருமணத்துக்கு முன் ஒரு பெண்ணை காதலித்து ஏமாற்றியவர். திருமணத்திற்கு பின் மனம் திருந்தி இல்லறமே நல்லறமாக வாழ்ந்தவர். அவருடைய கோப்பை பார்த்த தணிக்கையாளர் " பெண்ணை காதலித்து ஏமாற்றிய பாவத்திற்காக ஓராண்டு நரகத்தில் இருப்பார். பின்னர் இவரை சொர்க்கத்தில் அனுமதிக்கலாம். " என்று குறிப்பு எழுதினார். இரண்டாமவர் தனது பெரும்செல்வத்தை யாருக்கும் கொடுத்து உதவாமல் நேர்மையாக வாழ்ந்தவர். அவருடைய கோப்பில் " 5 ஆண்டுகள் நரகம். பிறகு சொர்க்கம்" என்று எழுதப்பட்டது. மூன்றாமவர் தனது வாழ்நாளில் கருணையே யாரிடமும் காட்டாதவர். வேலை செய்த இடத்தில் 'கொடுங்கோலன்' என்றும், சுற்றத்தாரால் 'கல்நெஞ்சன்' என்றும் அழைக்கப்பெற்றவர். கரும வினையோ அல்லது வேறோ, சொர்க்கத்துக்கு வந்துவிட்டார் அவர். இவரின் கோப்பை பார்த்த தணிக்கையாளர் " உடனடியாக இவனை பூமியில் கொடுங்கோலாட்சி நடக்கும் நாட்டிற்கு அடிமையாக அனுப்புங்கள் ". சொர்க்கத்தின் பக்கமே வராதபடி தடை உத்தரவே போட்டார் தணிக்கையாளர்.

அருள் இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை - பொருள் இல்லார்க்கு
இவ்வுலகம் இல்லாகி யாங்கு. [ அருளுடைமை 25 : 7 ]


பொருள் இல்லாதவர்க்கு இவ்வுலகில் நலமிக்க வாழ்வில்லை; அருள்(கருணை) இல்லாதவர்க்கு சொர்க்கத்திற்கு செல்ல வாய்ப்பே இல்லை!

Monday, February 06, 2006


சொர்க்கத்தின் கதவுகள் - 3

பெற்றாற் பெறின் பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்
புத்தேளிர் வாழும் உலகு.
[ வாழ்க்கைத் துணைநலம் 6 : 8 ]

தன்னை அடைந்த கணவர் மகிழ்ச்சி பெற்றால், அத்தகைய மனைவியார் தேவர்கள் வாழும் உலகத்திலும் பெருஞ்சிறப்பு பெறுவார்.

நவீன உலகில் இக்கருத்து பொருந்துமா என்ற ஐயம் எனக்கு ஏற்பட்டதுண்டு. மேலோட்டமாக பார்க்கும் அனைவருக்கும் அப்படிதான் இருக்கும். மனைமாட்சி(குறள் 6 : 2 ) என்றும் , மாண்பு(6 : 3 ) என்றும் மனையாளை குறிப்பிட்டுவிட்டு, இங்கே எப்படி சொல்லலாமா ?

மனைவியான பெண் தன்னை மட்டும் நிலைநிறுத்தி வாழ்ந்தால் அத்தகைய குடும்பங்கள் என்ன ஆகும் என்பதை பார்க்கிறோம். அதேபோல் கணவனும் சுயநலத்துடன் செயல்பட்டால் அதே விளைவுதான். ஆனால் மனைவியை ஆதாரமாக கொண்டு தன் வாழ்க்கையை அமைக்கும் கணவன் தொட்டதெல்லாம் பொன்னாகும். வாழ்க்கை நிறைவு பெறும். அத்தகைய மனையாள் தேவர்கள் வாழும் ( புத்தேள் ) உலகத்திலும் பெருஞ்சிறப்பு பெறுவது உறுதி. மகாத்மா காந்தியின் வாழ்க்கை வரலாற்றை படிக்கும்போது இந்த உண்மை புரியும். காந்தி திரைப்படத்தை பலமுறை பார்த்திருந்தாலும், சமீபத்தில் டிவிடி வாங்கி குடும்பத்துடன் பார்த்தேன். அன்னை கஸ்தூரிபாவின் துணையும் ஆதாரமும் இல்லாமல், காந்தி உலகம் வியக்கும் பணிகளை செய்திருக்க முடியுமா ? ஆப்பிரிக்காவிலும் இந்தியாவிலும் காந்தி நிகழ்த்திய போராட்டங்களிலும், சமுதாய பணிகளிலும் அன்னை கஸ்தூரிபா காந்தி உற்றதுணையாக நின்றதை பார்க்கிறோம். வியக்கிறோம்.

அகத்தில்(வீட்டில்) வெற்றி பெறாதவன், புறத்தில்(உலகில்) வெற்றி பெற முடியாது அல்லவா ?

Friday, February 03, 2006

சொர்க்கத்தின் கதவுகள் - 2

இல்வாழ்க்கை அதிகாரத்திலேயே, நாம் ஏற்கனவே சொன்ன கருத்தை வள்ளுவர் வலியுறுத்துகிறார். வீடுபேறு அடைய 'தனியாக' எந்த முயற்சியும் தேவையில்லை.

கோதண்டம் எளியவர். ஏழை. அவர் ஊருக்கும் பக்கத்து ஊருக்கும் இடையே உள்ள பெரிய ஆற்றில் படகு ஓட்டி பிழைப்பு நடத்துபவர். விவசாயம் வேறு தனியாக உண்டு. ஒரு நாள் அவரின் படகில் வேதங்களை கற்ற ஒரு வேதியர் ஏறினார். படகு நகர்ந்தது.
வேதியர் கோதண்டத்தை பார்த்து "படகு ஓட்டுபவரே, தினமும் மந்திரங்கள் ஓதும் பழக்கம் உண்டா" என்றார்.
"இல்லை சாமி" என்றார் படகு ஓட்டி.
" அப்படியா!. உன் வாழ்க்கையின் கால்பகுதியை வீணாக்கி விட்டாயே. கோவிலுக்காவது தினமும் போகும் பழக்கம் உண்டா ? கேட்டார் வேதியர்.

" இல்லை சாமி. எப்போதாவது கோவில் விசேசம் என்றால் போவேன்" படகு ஓட்டி பதில் சொன்னார்.

" அடடா, வாழ்க்கையின் பாதியை வீணாக்கிவிட்டாயே" என்று கவலை கொண்டார் வேதியர்.

படகு பாதி ஆற்றை கடந்தது. காற்றும் பலமாக வீச, படகு வேகமாக
அசைந்து நீரில் மூழ்க ஆரம்பித்தது. பதற்றத்துடன் படகு ஓட்டி, வேதியரை பார்த்து, " சாமி, உங்களுக்கு நீந்த தெரியுமா ? " என்றார் . " இல்லை" என்று வந்தது பதில்.

" அப்படியா சாமி, வாழ்க்கையை முழுவதும் வீணாக்கிவிட்டீர்களே " என்றார் படகு ஓட்டி கோதண்டம் அப்பாவியாக . இருப்பினும் படகு ஓட்டி மனமிறங்கி ஒருவழியாக வேதியரை காப்பாற்றி கரையேற்றினார்.

அறத்து ஆற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் - புறத்து ஆற்றில்
போய் பெறுவது எவன் ? [ இல்வாழ்க்கை 5 : 6 ]


அறம் கலந்த இல்வாழ்க்கையை ஒருவர் மேற்கொண்டால் , பிரம்மசாரியம் முதலான புற முயற்சிகளால் என்ன பயன் ?

அறம் கலந்த இல்வாழ்க்கை மேற்கொள்பவர்கள் மோட்சம் அடைய முடியுமா? முடியும். அந்த நம்பிக்கையை- உறுதியை இல்வாழ்க்கை அதிகாரத்தின் கடைசி குறளில் காணலாம்.

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும். [ இல்வாழ்க்கை 5 : 10 ]

இறந்தால் எங்கே செல்வீர்கள் என்று கேட்டால், வானத்தை காட்டி அங்கே செல்வோம் என்று பலர் சொல்வதை பார்க்கிறோம். வான் உறையும் அத்தகைய இடத்துக்கு செல்ல மற்ற பல கதவுகளும் உள்ளன. அவற்றையும் பார்ப்போம்....

அன்புடன்,
கரு.மலர்ச் செல்வன்


Monday, January 30, 2006

சொர்க்கத்தின் கதவுகள் - 1

அறம், பொருள், இன்பம் ஆகிய முப்பால்களை விளக்கும் திருக்குறளில், நான்காவதான 'வீடுபேறு' விடுப்பட்டு போய்விட்டது ஏன் என்று சிலர் கேட்பர். வீடுபேறை தனியான தொகுதியாக வைக்காவிடினும் , நிறைய அதிகாரங்களில் அத்தகைய வீடுபேற்றை எப்படி பெறுவது என்று அழகாக சொல்லுகிறார் வள்ளுவர்.

ஒரு $20 பில்லியன் நிறுவனம் உள்ளது. அதில் பலதுறைகள் உள்ளன. மார்க்கெட்டிங், மனித ஆற்றல், நிதி... திருமுருகன் எம்.பி.ஏ படித்து இந்த நிறுவனத்தில் புதிதாக வேலைக்கு சேர்கிறார். முதலில் அவருக்கு நிதித் துறையில் வேலைத் தருகிறார்கள். அங்கு 2 வருடங்கள் வேலை செய்து நிதி நிர்வாகத்தின் நுட்பங்களை திறமையாக கற்றுக்கொள்கிறார் . பிறகு மார்க்கெட்டிங்கில் 3 ஆண்டு.. அதிலும் சிறப்பான பணி. பிறகு மனித ஆற்றல் துறையில் 2 ஆண்டு. இப்படி அனைத்து நிறுவனப் பணிகளையும் அவர் திறம்பட செய்வதை பார்த்த அந்நிறுவன தலைவர் திருமுருகனை தனது நிர்வாக உதவியாளராக(executive asst) நியமிக்கிறார். இந்நிலையில் திருமுருகன் நிறுவனத்தின் வெற்றிகளை தீர்மானம் செய்யும் வீயூகங்கள் வகுப்பதில் பங்குபெறுகிறார். இந்த நிலையில் 6 ஆண்டுகள் பணியாற்றியபின், நிறுவனத்தின் 12 துணைத் தலைவர்களில் ஒருவராக அவரை நியமனம் செய்கிறார்கள். நிறுவனத் தலைவர் ஓய்வு பெரும் காலம் வந்த போது அவரின் வாரிசாக கடும்போட்டிக்கு இடையே திருமுருகனை தலைவராக, அந்நிறுவனத்தின் போர்டு தேர்ந்தெடுத்ததில் நமக்கெல்லாம் வியப்பு இல்லைதானே ?

வீடுபேறும் அப்படித்தான். அதற்கென்று படிப்பு ஒன்று இல்லை. அதற்கு நேரடியாக அனுபவம் இல்லாமல் விண்ணப்பிக்க முடியாது. ஆனால் அறம், பொருள் என்ற நிலைகளில் சிறந்து பணியாற்றினால் அத்தகுதியே வீடுபேறை நமக்கு தரும். வள்ளுவம் சொல்லும் செய்தியும் இதுவே.

நான் இதுவரை ஆழமாக படித்து மனப்பாடம் செய்துள்ள 31 அதிகாரங்களில் மீண்டும் மீண்டும் எழு பிறப்பு என்றும், புத்தேள் என்றும், மறுமை என்றும் கூறுவதை பார்க்கின்றேன். அறம், பொருள் அதிகாரங்களில் வீடுபேறு நிலைக்கு ' உள்ளே செல்ல' நிறைய கதவுகளை வைத்துள்ளதை பார்க்கிறோம்.
அவற்றை பற்றி எழுதுகிறேன்...


அன்புடன்,
கரு.மலர்ச் செல்வன்

Friday, January 27, 2006

சான்றோர் - ஐந்தாம் பகுதி

சான்றோர் என்று மற்றோரால் அங்கீகரிக்கப்படும் போது 'நமக்கு எல்லாம் தெரியும்' என்ற எண்ணம் வரும். அப்போது பொது மேடைகளிலோ அல்லது தனியாக பேசும்போதோ, சான்றோர் பயனில்லாதவற்றை பேசுவதுண்டு.


ஆடலரசன் சொல்லாற்றலும், அறிவாற்றலும் நிறைந்த அரசியல்வாதி. பொதுமக்களுக்கு இடைவிடாது தொண்டாற்றி வருபவர். நல்லவர். கட்சி தலைமையிடமும் நல்ல பெயரும் இருந்ததால் பாரளுமன்ற தேர்தலில் எளிதாக வெற்றிபெற்று டெல்லி சென்றார். பொதுவாக நேரம் வரம்பு இல்லையென்றால் திறம்பட பேசும் வல்லமையுள்ளவர் அவர். பாராளுமன்றத்தில் தனக்கு கொடுக்க பட்ட குறைவான நேரத்தில் பேசுவதற்கு பழக்கப்படாததால் அவரின் பேச்சுக்கள் பயனில்லாத பேச்சுக்களாகவே அமைந்தது. இதை கவனித்த அக்கட்சியின் தலைவர் ஆடலரசனை தனியாக அழைத்தார்.

" ஆடலரசா, உன்னைப் போன்ற அரசியலார்க்கு நயம் உடைய இனிய சொற்களை பேசும் ஆர்வம் மேலோங்கி இருக்கும். அது அவசியம். ஆனால் நயமில்லாத கசக்கும் சொற்களை பேசினாலும் , எக்காரணத்தை கொண்டும் பயன் இல்லாத சொற்களை பேசாதே ! நயம் உடைய சொல் கேட்பவருக்கு அப்போதுமட்டும் இனிக்கும். ஆனால் பயன் உடைய சொல் கேட்டவருக்கு, பின்னர் கூட அது இனிக்கும். இதை புரிந்துகொண்டால் பாராளுமன்றத்தில் நீ தடம் பதிப்பாய். " என்று வாழ்த்தி வழி அனுப்பி வைத்தார்.

நயனில சொல்லினும் சொல்லுக ! சான்றோர்
பயனில சொல்லாமை நன்று. [ பயனில சொல்லாமை 20 : 7 ]

சான்றோர் நயமில்லாத சொற்களை சொன்னாலும் சொல்லலாம். ஆனால் பயனில்லாத சொற்களை அவர்கள் சொல்லாமல் இருப்பது நலன்.

Tuesday, January 24, 2006

சான்றோர்- 4

சான்றோரின் அணிகலனையும், வழிகாட்டும் விளக்கையும் பார்த்தோம். சான்றோரின் ஒழுக்கம் எப்படி இருக்க வேண்டும் ?


சாமிநாதன் கல்வியும் புகழும் பெற்றவர் . இவரை போல் அல்லவா நாம் வாழ வேண்டும் என்றும் சொல்லும் அளவிற்கு சான்றோன் என்று அனைவராலும் புகழப்பட்டவர். வயது சுமார் 45 இருக்கும். ஒருமுறை அவருடைய மனைவியும் குழந்தைகளும் ஊருக்கு சென்றிருந்த நேரம். அவர் வீட்டில் வேலை செய்யும் பத்மா, என்றும் போல் அன்று வீட்டை துடைத்துக் கொண்டிருந்தார். பத்மா திருமணமான பெண். தன் வீட்டின் பொருளாதார தேவைகளுக்காக சில வீடுகளில் வேலை செய்து வருபவர். அழகிய பெண் கூட. தனிமையான அந்த சூழலில் பத்மாவை பார்த்த சாமிநாதனின் மனம் தடுமாற பார்த்தது. அடுத்த கணம் சற்றே கண்களை மூடி, தன் மனைவியையும் குழந்தைகளையும் நினைத்து பார்த்தார். ஆசைக்கு அடிமைப்பட்டு இன்னொருவர் மனைவியை அடைய நினைப்பது எவ்வளவு கேவலம் என்று எண்ணியவாறு வீட்டுக்கு வெளியே செல்லலானார். பேராண்மைக்கு இலக்கணம் அல்லவா அது ?

பிறன்மனை நோக்காத பேராண்மை; சான்றோர்க்கு
அறன் ஒன்றோ? ஆன்ற ஒழுக்கு. [ பிறனில் விழையாமை 15 : 8 ]

சான்றோர்க்கு பிறன்மனைவியை பார்க்காத பண்பை போன்று சிறந்த அறமும் ஒழுக்கமும் இல்லை.

Monday, January 23, 2006

சான்றோர் - 3

சான்றோர்க்கு அணி என்ன என்பதை பார்த்தோம். அவருக்கு வழிகாட்டும் விளக்கு ஒன்று உள்ளது. அதை இங்கே பார்ப்போம்..

வாழ்க்கை என்பது ஒரு அழகிய பயணம். அப்பாதையில் ஒளி, இருள் என்று இரண்டும் உண்டு. அதிலும் இருட்டில் நடக்கவேண்டுமானால் நல்ல விளக்கு ஒன்று இருந்தால் நல்ல துணையாக இருக்குமல்லவா ? சான்றோருக்கு அப்படித்தான். நல்ல வழிகாட்டும் விளக்காக அமைவது அவரின் வாய்மை மட்டுமே ஆகும். மற்றவை(எ-கா: நண்பர்கள், புத்தகங்கள் ... ) வழிகாட்டும் விளக்குகள் போன்று தோன்றினாலும் பொய்யாமையே உண்மையான விளக்காகும்.

எல்லா விளக்கும் விளக்கல்ல - சான்றோர்க்கு
பொய்யா விளக்கே விளக்கு. [ வாய்மை 30 : 9 ]


வாய்மையை உண்மை, மெய் என்றும் அழைக்கலாம். " உள்ளத்தில் இருந்து வருவது உண்மை . வாயினால் சொல்வது வாய்மை. உடலில்(மெய்) ஒன்றர கலந்திருப்பது மெய் " என்று அழகிய பொருளை திருக்குறள் மரபுரையில் தேவநேய பாவாணர் குறிப்பிட்டுள்ளார்.

Friday, January 20, 2006

சான்றோர் - 2

சான்றோர் எவ்வளவு பொருள் பொதிந்த சொல் என்பதை ஏற்கனவே பார்த்தோம். அத்தகைய சான்றோரின் பண்புகளை வள்ளுவர் பல அதிகாரங்களில் சொல்வதை பார்க்கிறோம்.

ஒருவர் செல்வந்தராக இருக்கும்போது மற்றோருக்கு கொடுப்பது கடினம் அல்ல. நாம் சாதாரண பொருளாதர நிலையில் இருக்கும்போது கொடுப்பது அரிது.

ஒருவன் நல்ல மனைவி, குழந்தைகள் பெற்று இல்லறம் நடத்துவது கடினமன்று. ஆனால் பிறன் மனைவியை அடைய மனதாலும் நினைக்காமல் இருப்பது அரிது.

இன்னும் நடைமுறை வாழ்க்கையில் சொல்வதானால் , ஆச்சாரமான சூழ்நிலையில் ஒருவன் குடிக்கும் பழக்கம் இல்லாமல் இருப்பது கடினமன்று. ஆனால் மதுபான கடையில் வேலை செய்யும் ஒருவன் குடிக்காமல் இருப்பது சிறப்பு. அரிது.

சான்றோருக்கான இலக்கணமும் அப்படிதான். இதோ அப்படி ஒன்று பார்ப்போம்....

வாழ்க்கையில் உயர்வும் தாழ்வும் நிலையானது அல்ல. ஆனால் அத்தகைய உயர்விலும், தாழ்விலும் மனம் மாறாதிருப்பது சான்றோர்க்கு அணியாகும். சின்னசாமி கிராமத்தில் சாதாரண நிலையில் இருந்தபோது அவருக்கு ஆசைத்தம்பி என்ற ஒரு நண்பர் இருந்தார். சின்னசாமிக்கு ஒரு மகன். ஆசைத்தம்பிக்கு ஒரு அழகிய மகள். பள்ளிப்பருவத்திலேயே அவர்கள் நட்புடன் பழகி வந்தார்கள். ஒரு பொங்கல் பண்டிகையின் போது இருவரின் குடும்பத்தினரும் இருக்கும்போது, சின்னசாமி தனது மகனை ஆசைத்தம்பியின் பெண்ணுக்கே மணமுடிப்பதாக வாக்கு கொடுத்தார். சின்னசாமி தனது கடுமையான உழைப்பாலும் மதி நுட்பத்தாலும் தொழில் தொடங்கி கோடீஸ்வரானார். புலம் பெயர்ந்து வெளிநாட்டிற்கு குடும்பத்துடன் சென்றார். அவர் மகனும் கல்வியும் ஒழுக்கமும் நிறைந்து திருமண வயதை எய்தினார். ஆசைத்தம்பியின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் இல்லை. ஆண்டுகள் பல ஓடினாலும் சின்னசாமி தன் நண்பர் ஆசைத்தம்பிக்கு கொடுத்த வாக்கை மறக்கவில்லை. சின்னசாமி தனது குடும்பத்தினருடன் ஆசைத்தம்பியின் வீட்டுற்கு சென்றார். மங்கல பொருட்கள் நிறைந்த தாம்பூல தட்டை கொடுத்து தன் மகனுக்கு பெண் கேட்டார் சின்னசாமி. அங்கிருந்த பெரியோர்களுக்கு ஆச்சரியம். செல்வ செழிப்புடன் வாழும் சின்னசாமி எங்கே ? ஏழை ஆசைத்தம்பி எங்கே ? இருப்பினும் சொன்ன சொல்லை காப்பாற்றி, இளம் உள்ளங்களை இணைத்து வைத்த சின்னசாமியை அனைவரும் வாழ்த்தினர்.

கேடும் பெருக்கமும் இல் அல்ல ; நெஞ்சத்துக்
கோடாமை சான்றோர்க்கு அணி.


[ திருக்குறள் – நடுவு நிலைமை 12 : 5 ]
[இல் – இருப்பது ; கோடாமை – மாறாமை ]

Tuesday, January 10, 2006

நாம் அஞ்சும் இரண்டு..

நம்மில் பலருக்கு உள்ள பயங்களில் தலையானது மரணம். அடுத்தது 'இப்போது உள்ள நிலையில் இருந்து கெட்டுவிட கூடாது' என்ற அச்சம். செல்வந்தாராக உள்ளவர் தான் ஏழையாகிட கூடாதே என்ற பயம். அதிகாரம் உள்ளவர்களுக்கு அது போய்விடுமோ என்று பயம்.

ஆனால் இவ்வுலகில் வறியோர்க்கு கொடுத்து கொடுத்து, அறவாழ்க்கை வாழும் மக்களுக்கு இந்த இரண்டு அச்சங்களும் இருக்காது.

நத்தம்போல் கேடும், உளதாகும் சாக்காடும்
வித்தகர்க்கு அல்லால் அரிது. [ புகழ் 24 : 5 ]

வாழ்க்கையில் கேடு வரும்போது அதை தாங்கிட ஒரு மெத்தை உண்டென்று கற்பனை செய்துபாருங்கள். மேலும் 'என்றும் வாழ்கிறோம்' என்ற எண்ணம் இருந்தால் மரண பயமும் போகும் அல்லவா ? இவ்விரண்டும் புகழ்புரிந்த வித்தகர்க்கு மட்டுமே முடியும்.

வித்தகர் - ஈகை செயற்களால் புகழுக்கு வித்திட்டவர் .
நத்தம் - நத்தை போன்ற மெத்தை - குஷன்
சாக்காடு - இறப்பு.


அன்புடன்,

கரு.மலர்ச் செல்வன்

Friday, January 06, 2006

சான்றோர் என்பார்...(1)

சான்றோர் என்றால் பெரியோர் என்று பொருள் கொள்ளலாம் எனினும், அதை விட ஆழமான பொருள் உள்ளதாகவே தோன்றுகிறது.

சான்றோர் , நீத்தார் , பெரியோர் என்பவை வெவ்வேறு பொருள் உடையவை என்பது என் கருத்து.

நீத்தார் என்போர் தன்னை உணர்ந்த ஞானி என கொள்ளலாம். அவர் ஒழுக்கத்து நீத்தார்(3: 1), துறந்தார்(3 : 2 ), இருமை வகை தெரிந்தவர் ( 3 : 3 ) ,உரன் எனும் தோட்டியான்(3:4 ), ஐந்து அவித்தான்(3: 5), செயற்கரிய செய்வார்(3: 6), சுவைகளின் வகை தெரிவார்(3 : 7) , நிறைமொழி மாந்தர்(3 : 8 ), குணம் எனும் குன்றேறி நின்றார்(3:9 ), அறவோர்(3: 10) என்று அவரின் வடிவத்தினை 'நீத்தார் பெருமை' அதிகாரத்தில் பார்த்தோம். இந் நிலையை துறவற பண்புகளை பின்பற்றியிருந்தால் அடைய முடியும்.

சான்றோர் என்போர் ஒருவரின் வெற்றிக்கு உலகம் கொடுக்கும் சான்று(அங்கீகாரம்). சான்று - உதாரணம் - benchmark - example. ஒரு குடும்பத்தில் தீய பழக்கம் உடைய ஒரு பையன் இருக்கிறான். அவனை அவர் தந்தையும் தாயும் கண்டிக்கிறார். அவனுக்கு ஒரு சிறப்பாக வாழும் ஒருவரை உதாரணமாகக் கொடுக்க வேண்டும். நினைத்துப் பார்க்கிறார்கள்.
" இங்கே பார். பூங்கோதையை உனக்கு தெரியும். அவர் நமக்கு தூரத்து சொந்தம் கூட. அந்த அக்கா எவ்வளவும் பெயரும், புகழுடன் இருக்கிறார். ஒரு வருடத்திற்கு முன்பு கூட அவருக்கு குடியரசு தலைவரின் பரிசு ஒன்று கிடைத்தது தெரியும் உனக்கு. அவரை போல அல்லவா நீ வாழ்க்கையில் உயர வேண்டும்" என்று சொல்கிறார்கள்.

அந்த பையன் நினைத்துப் பார்க்கிறான். அப்பா சொல்லும் பூங்கோதை அக்கா உண்மையிலேயே சிறந்த உதாரணமாக இருந்தால் மட்டும் , அவன் மனதில் அப்பெண் உதாரணமாக அமையப் போகிறார். பூங்கோதை அச்சமூகத்தின் சான்றோர் ஆகிறார். சான்றோர் என்பது சமூக அங்கீகாரம். குடும்ப அளவில் உதாரணமாக காட்டக்கூடிய பண்புகளை கொண்டு வாழ்வது.

மக்கட்பேறு அதிகாரத்திலேயே( # 7 ) தாயின் பூரிப்பில் சான்றோர் என்பதற்கான ஊக்கத்தை அளிப்பதை பார்க்கிறோம்.

ஈன்ற பொழுதின் பெரிது உவக்கும் தன்மகனை
சான்றோன் எனக் கேட்ட தாய். [ மக்கட் பேறு 7 : 9 ]

[ குறிப்பு : இங்கு மகன் என்பது பொதுப் பெயர். மகளுக்கும் பொருந்தும் ]

என் இரண்டாம் பெண் பிறக்கும்போது(மார்ச் 28,2002) மகப்பேறு அறையில் இருந்தேன். அந்த காட்சி என் மனதில் பசுமையாக உள்ளது. பிறந்த உடன் செவிலியர் குழந்தையை என் கையில் கொடுக்கின்றர். அப்போது குழந்தையின் கண்கள் இரண்டும் மூடி உள்ளன. என் மனைவி( நானும் தான்), குழந்தையின் கண்கள் மூடியுள்ளதே என்ற அடைந்த பதற்றத்தையும், பின் செவிலியர், குழந்தை இருட்டிலிருந்து மிகவும் பிரகாச வெளிச்சத்திற்கு வருவதால் அப்படி உள்ளது என்று விளக்கியவுடன் என் மனைவி அடைந்த உவகையை நான் அறிவேன். அந்த நேரத்தில் நான் மகிழ்ச்சியில் இருந்தாலும், தாயின் பரவச உணர்ச்சிகளையும், பெரும் மகிழ்ச்சியும் சொல்லில் அடங்காது. அத்தகைய உவகையையும் விட, ஒரு தாய் தன் மகள்/மகன் 'சான்றோர்' என்று மற்றோரால் அழைக்கப்படும்போது அடையும் மகிழ்ச்சியோ பெரிது !அன்புடன்,

கரு. மலர்ச் செல்வன்

Wednesday, January 04, 2006

பிறன் மனைவியை அடைவான் என்ன ஆவான் ?

கற்பு நெறி ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவானது. மனைத்தக்க மாண்புடையாளாகவும், கற்பு என்னும் உறுதி கொண்டாள், கொழுநன் தொழுதெழுவாள் என்று மனைவிக்கு நெறிகளை காட்டிய(அதிகாரம் 6 - வாழ்க்கைத் துணைநலன் ) திருவள்ளுவர், ஆணுக்கும் அத்தகைய நெறிகளை 'பிறனில் விழையாமை' அதிகாரத்தில் கூறுவதை பார்க்கிறோம்.

கணவன் வெளியூருக்கோ வெளிநாடுக்கோ வேலை செய்யும் நிலையில் பெண்கள் தனியாக வீட்டில் ( அல்லது குழந்தைகளுடன்) வசிப்பதை பார்க்கிறோம். அல்லது ஒன்றாக வாழ்ந்தாலும் கணவன் - மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் வரலாம். இத்தகைய மனநிலையில் மனைவிக்கு ஒரு எதிர்பார்ப்புடன் கூடிய ஏக்கம் வரலாம். இது கற்பு நெறி அல்ல. அத்தகைய நிலையில் வேறோருவன் அப்பெண்ணின் வாழ்க்கையில் புகுவது எளிதாகினும், அப்படி செய்பவனுக்கு எக்காலத்திலும் அழியாத பழி வந்து சேரும்.

எளிதென இல் இறப்பான் எய்தும் எஞ்ஞான்றும்
விளியாது நிற்கும் பழி. [ பிறனில் விழையாமை 15 : 5 ]

அப்படி பிறன் மனைவியை அடைந்தவனுக்கு, பழி தனியாகவா வந்து சேரும் ? இல்லை. பகை, பாவம், அச்சம் ஆகிய மூன்றும் கூடவே வரும்.

பகை பாவம் அச்சம் பழி என நான்கும்
இகவாவாம் இல்இறப்பான் கண். [ பிறனில் விழையாமை 15 : 6 ]

இதை வலியுறுத்தும் கதைகளை நான் படித்திருந்தாலும், சமீபமாக டிவிடியில் 'மெட்டி ஒலி' என்ற திரைதொடரின் ஒருபகுதியில் பார்த்தது....

மாணிக்கம் கடுமையாக உழைக்கும் மனிதர். அதே ஊரில் சரளா என்ற குடும்பப் பெண், கணவர் வெளிநாட்டில் வேலைசெய்ய, தனியாக வசதியாக வாழ்ந்து கொண்டிருப்பார். மாணிக்கதிற்கும் சரளாவிற்கும் கள்ள காதல் . பின்னர் மாணிக்கத்தின் திருமணத்திற்கு பின் , அத்தொடர்பு இல்லாமல் போனாலும் , பழி நிலைத்து மாணிக்கத்திற்கு வேலை போய்விடுகிறது. பின்னர் அவன் வாழ்க்கையில் நடக்கும் சிரமங்களுக்கு அப்பழியோடு வந்த பகை, பாவம், அச்சம் காரணமாகிறது.

அதனால் தான் நம்முன்னோர்கள், ஐம்பெரும் பாதக செயல்களில் ஒன்றாக பிறன் மனைவியை நாடும் குற்றத்தை வைத்துள்ளார்கள்.அன்புடன்,
கரு. மலர்ச் செல்வன்