Tuesday, January 05, 2010

பொருள்கோள் - 2

இசைத்துப் பாடவும்,  மனனம் செய்யவும்  ஏற்புடையது  பாக்கள். குறட்பாவும் அப்படித்தான்.  அனைத்து குறள்களும் ஒன்று அல்லது இரண்டு வாக்கியங்கள் உடையன.

உதாரணமாக

எண்ணித் துணிக கருமம் ; துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு.  [ 47 : 7 ]

இதில் இரண்டு வாக்கியங்கள் இருப்பதைப் காண்கிறோம்.

முதல் வாக்கியத்தை அமைக்கலாம்.  முதலில் பயனிலையைக் காண வேண்டும்.

துணிக(தொடங்கு).

யார் ? எது ? என்ன ? போன்ற கேள்விகளை இந்த பயனிலையைக் கொண்டு  கேட்டால்  'எழுவாய்' கிடைக்கும். 

துணிக !
நீ துணிக !

(இங்கு 'நீ' என் தோன்றா எழுவாய் ஆகும்)

'எண்ணி' என்ற அடைமொழியை சேர்த்தால் முதல் வாக்கியத்தை

'நீ எண்ணித் துணிக !' என்று கொள்ளலாம்.

மேலும் 'கருமத்தை' என்ற செயப்படுப் பொருளையும் சேர்த்தால்

நீ கருமத்தை எண்ணித் துணிக ! என்று முழுப் பொருளைக் கொள்ளலாம்.

'துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கு' என்ற அடுத்த வாக்கியம் எளிதானது.


 'இழுக்கு'  என்பது பயனிலை.

'எது இழுக்கு ?'  என்ற கேள்விக்கு விடையாக,  'துணிந்தபின் எண்ணுவம்' என்ற சொற்றொடரே எழுவாயாக அமைந்துள்ளது.

செயப்படுப் பொருள் இல்லை.


பெயர்ச்சொல்லும் சில குறட்களில் பயனிலையாக வரும். உதாரணமாக

கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய் மற்றாங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை.  [ வான் சிறப்பு 2 : 5 ]

இக்குறள் ஒரே வாக்கியமாக அமைந்துள்ளது.

' மழை' என்ற பெயர்ச்சொல் பயனிலையாகும்.

எத்தகையது மழை ? என்ற கேள்வியை கேட்டால் வரும் பதில் ('கெடுப்பதும், கெட்டார்க்குச் சார்வாய் மற்றாங்கே எடுப்பதும்'  )எழுவாயாகும்.


கடந்த சில மாதங்களாக இத்தகைய பொருள்கோள் முறையில் குறள்களை நேரடியாக படித்துக் கொண்டிருக்கின்றேன்.  வழக்கில் இல்லாத சில சொற்களை(உதாரணம் : நெடுநீர் - நீண்ட தூக்கம்) மட்டும் அகராதியின் துணைக் கொண்டு பொருள் கொள்ளலாம்.

அது சரி, வழக்கில் இல்லாத சொற்களாக இருந்தால் பரவாயில்லை. அகராதி துணை.  சில சொற்கள் இன்று வழக்கில் இருக்கும் பொருளை குறிக்காமல், அக்காலப் பொருள் கொண்டிருக்கும்.

நாறா மலர்(நறுமணம் இல்லா மலர்) -    'துர்நாற்றம்' என்ற பொருளில் நாற்றம் இன்று வழங்குகிறோம்.

'சூழ்' - இன்று சூழ்ந்து கொள்ளுதல் ( gather around) என்ற பொருளில் மட்டும் இன்று வழங்குகிறோம். ஆனால் 'சூழ்' என்ற சொல் பல குறட்களில் ' நினை' என்ற பொருளில் வழங்குவதை பார்க்கிறோம்.

நிலையஞ்சி நீத்தாருள் எல்லாம், கொலையஞ்சி
கொல்லாமை சூழ்வான் தலை. [ கொல்லாமை 33 : 5 ]

[ சூழ்வான் - நினைப்பவன் ]

இதுவாவது பரவாயில்லை. 'புலையர்' என்ற சொல் இன்று சாதி சார்ந்த சொல்லாக வழங்குகிறது.  ஆனால் திருக்குறளில் 'புலை வினையர்' என்ற சொல் கீழ்ச் செயலை செய்பவன் என்ற பொருளை குறிப்பதாக மட்டும் அமைந்திருப்பதைக் காணலாம்.

கொலை வினையராகிய மாக்கள் புலைவினையர்
புன்மை தெரிவார் அகத்து.  [ கொல்லாமை 33 : 9 ]