Thursday, December 29, 2005


பொன்போன்ற மேனி...

எவ்வித அலங்காரமோ அல்லது அணிகலனோ இல்லாமல் சிலர் பொன்போல் ஒளிவிட்டு திகழ்வதை பார்க்கிறோம். உதாரணத்திற்கு இங்குள்ள சில ஞானிகளை பாருங்கள்.
யோகி இராம்சுரத்குமார். அருள்வடிவானவர்.


மனித தொண்டே மகேசன் தொண்டாக கொண்டு வாழ்ந்த அன்னை தெரசா.


பாமர மக்களுக்கும் பயன்படும் வகையில் எளிய வாழ்வியல், இறை உணர்வு ஊட்டி வரும் வேதத்திரி மகரிஷி அவர்கள்.

சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் - துன்பம்

சுடச்சுட நோற்கிற் பவருக்கு. [ தவம் 27 : 7 ]

பொன்னை சுட்டால் வரும் சுடர்போல், துன்பத்தை நோற்பவர்கள்(தவமிருப்பர்கள்) ஒளிவீசும் தன்மை பெறுவார்கள்.

இத்தகைய நிலையை அடைந்தவர்களை உலகத்தின் உயிர்கள் அனைத்தும் தொழும்.

தன்னுயிர் தான் அறப் பெற்றானை- ஏனைய

மன்னுயிர் எல்லாம் தொழும் [ தவம் 27 : 8 ]

நாம் அனைவரும் உயிர் பெற்றுள்ளோம். ஆனால் அவ்வுயிரை 'முழுமையாக' பெற்றுள்ளோமா என்பது சிந்திக்க வேண்டியது. உயிர் என்றால் என்ன ? அவ்வுயிரை நாம் முழுமையாக பெற சில பயிற்சிகளை மனவளக் கலை மன்றத்தினர் தொகுத்துள்ளனர். அதில் உயிரை நாம் முழுமையாக பெறுவதற்கு உதவுவது காய கல்ப பயிற்சி. ஆர்வமுள்ளோர்

www.vethathiri.org

உலகம் முழுவதும் இம்மன்றத்தின் ஆசிரியர்கள் உள்ளனர்.

அன்புடன்,

கரு.மலர்ச் செல்வன்



Tuesday, December 27, 2005

கரும வினையை போக்கும் தவம்

கருமம் என்பது பொருள் பொதிந்த அழகியத் தமிழ்ச் சொல். கருவில் இருக்கும் போதே நம் பாதை(விதி) நிர்ணயிக்கப் படுவதால் கருமம் எனப்பட்டது. அதுவே கர்மா(karma) என்று வடமொழி பேசுபவர்களால் மருவி வழங்கப்படுகிறது. வங்கிக் கணக்கு போல இது. நமது முன்பிறவியில்(முன் பிறவியில் நம்பிக்கை இல்லாதோர் முன்னோர்களின் செயல் என்று எடுத்துக் கொள்ளலாம்) செய்த செயல்களை விளைவே, இப்பிறவியின் ஆரம்ப கணக்கு(opening balance) எனக் கொள்ளலாம். இப்பிறவியில் நாம் செய்யும் செயல்கள்(அறம்) ஆரம்பக் கணக்கை கூட்டுகிறதா(credit) அல்லது குறைக்கிறதா(debit) என்பது அச்செயல்களின் தண்மையை பொருத்தது. புண்ணியம், பாவம் என்பதெல்லாம் இதற்கு நாம் புழங்குகின்ற சொற்கள்.

நம்மின் பழைய தீயவினைகளின் விளைவுகளை குறைத்து, நல் வினைகளின் பாதையில் நம்மை செலுத்த முடியுமா ? விதியின் பாதையை மாற்ற முடியுமா ?

முடியும் !

தவம்செய்வார் தம்கருமம் செய்வார் - மற்றல்லார்
அவம் செய்வார் ஆசை உட்பட்டு. [ தவம் 27 : 6 ]

தவம் செய்வதால்(துன்பம் பொறுத்தல்; உயிர்களுக்கு தீங்கு செய்யாமை - தவம் 27:1) நம் கருமவினைகளை நீக்க முடியும். அப்படி அல்லாமல், புலன்களின் ஆசைக்கு உட்பட்டவர்கள் அவம் செய்பவர்கள்.


அன்புடன்,
கரு.மலர்ச் செல்வன்

Friday, December 23, 2005

எண் என்ப..

எண் என்பது கணித எண்ணையும் குறிக்கும். நமது மனதில் எழும் எண்ணத்தையும் குறிக்கும். இரண்டிற்கும் ஒரே பெயரை வைக்க காரணம் என்ன ? நம் மனதில் ஒரு நாளைக்கு சுமாராக 70,000+ எண்ணங்கள் எழுவதாக படித்திருக்கிறேன். அந்த எண்ணங்களுக்கு நடுவே உள்ள இடைவெளி/அமைதியில் நம்மை உணர்ந்து மெய்ஞானம் பெற முடியும். எண்ணங்கள் தொடர்ச்சியாக வருவதால்தான் எண் என்று காரணப்பெயராக அமைந்துள்ளதாக நினைக்கிறேன். எண்ணங்களை சீராக்க மணிமாலை உபயோகிப்பதும் இதற்குதான்.

அலை அலையாய் எழும் எண்ணங்களின் ‘இடையே’ நாம் அமைதியாக தவமிருப்பதை ‘எண்ணின் தவம்’ என்று கூறலாம். இந்த தவநிலையில்
நான் யார் ?
இந்த பிரபஞ்சத்திற்கும் எனக்கும் என்ன தொடர்பு ?
எனது படைப்பின் காரணம் என்ன ?
ஆகிய கேள்விகளுக்கு விடை கிடைக்கும். அந்நிலையை அடைந்த ஒருவர் ‘இது நடக்க வேண்டும்’ என்று நினைத்தால்(Intent) நடக்கிறது. தீயவற்றை அழிப்பதும், அல்லது புதினங்களை ஆக்குவதும் இந்நிலையில் உள்ள எவராலும் முடியும். மதமோ,மொழியோ, குலப்பிறப்போ, கல்வியோ இதற்கு தடையாக அமைய முடியாது.

ஒன்னார்த் தெறலும், உவந்தாரை ஆக்கலும்
எண்ணின் தவத்தான் வரும். [ தவம் 27 : 4 ]



அன்புடன்,
கரு.மலர்ச் செல்வன்

Thursday, December 22, 2005

தவமும் வெற்றியும்

ஆண்டு இறுதியில்(நவம்பர்-திசம்பர்) உலகம் முழுவதும் நோன்பை கடைபிடிக்கும் மரபை பார்க்கிறோம். முகமதியர்கள் இரமதானும், இந்துக்கள் மார்கழி நோன்பும் கடைபிடிப்பதை பார்க்கிறோம். கிருத்துவர்களின் கிருத்துமஸ் கூட ஒருவகை நோன்புதான். எனக்கு கல்லூரி பருவத்தில் இரமதான் நோன்பு இருந்த அனுபவமும் உண்டு. ஐயப்பனை காண நோன்பிருந்து கல்லும் முல்லும் கடந்த அனுபவமும் உண்டு.

இந்த நோன்பின் தத்துவமே துன்பத்தை பொறுத்தல். துன்பத்தை பொறுத்தலும், எவ்வுயிர்க்கும் தீங்கு செய்யாமலுமே தவம் என்று வள்ளுவம் சொல்லுவதை (27: 1) பார்த்தோம். ஆனால் இத்தகைய தவத்தை எல்லோராலும் செய்யமுடியுமா ? நீரிழிவு நோய் உள்ள ஒருவர் மருத்துவரிடம் சென்றார். “அய்யா, சர்க்கரையை உணவில் சேர்த்துக்கொள்வதை குறைக்க வேண்டும். எப்படி என்று ஆலோசனை கூறுங்கள்” என்றார். அதற்கு மருத்துவர் “ இன்னும் 3 வாரம் கழித்து வா” என்றார்.
அவரும் 3 வாரம் கழித்து வந்தவுடன் மருத்துவர் உணவில் சக்கரையை குறைத்துக் கொள்வது எப்படி என்று விளக்கி கூறினார். விடைபெறும் போது, வந்தவர் மருத்துவரிடம், “ இந்த ஆலோசனையை அன்றே சொல்லாமல், மூன்று வாரம் கழித்து சொல்கிறீர்களே. ஏன்? “ என்றார். அதற்கு மருத்துவர் சிரித்துக்கொண்டே “ சர்க்கரையை குறைப்பது எப்படி என்று முதலில் கேட்டபோது, என் மனதில் தோன்றிய ஆலோசனையை என்னால் உறுதியுடன் பின்பற்ற முடிகிறதா என்று மூன்று வாரம் முயற்சித்தேன். முடிந்தது. இப்போது உங்களை பின்பற்ற சொல்லுகின்றேன் “ என்றார். மனித பழக்கவழக்கங்களை ஆராய்ந்தவர்கள் எந்த ஒரு புது பழக்கமும் 21 நாள் சவாலை( 21 day challenge) வெல்லுகிறதா என்று பார்க்க சொல்லுகிறார்கள். ஆதலால் தான் தவம் ‘கடினம்’. காலையில் 4.30 மணிக்கு எழுந்து உடல்பயிற்சி செய்யவேண்டும் என்று அலாரம் வைப்பேன். ஆனால் 4.30 மணிக்கு எழுந்து அலாரத்தை அமுக்கிவிட்டு திரும்பித் தூங்கி விடுவேன் !!!.

தவமும் தவமுடையாருக்கு ஆகும் - அவம் அதனை
அஃதிலார் மேற் கொள்வது. [ தவம் 27 : 2 ]

தவத்தின் எதிரி அவம். அவையங்களின் ( ஐந்து புலன்களின்) விருப்பபடி நடப்பது அவம். அப்படி நடக்காமல் உறுதியுடன் தவமிருத்தல் , கொடுப்பினையும் உறுதியும் இருந்தால் மட்டுமே முடியும்.

இலர் பலராகிய காரணம், நோற்பார்
சிலர் பலர் நோலாதவர் [ தவம் 27 : 10 ]

இவ்வுலகத்தில் இல்லை என்போரே பெரும்பாலோர் உள்ளனர். என்ன காரணம் ? நோற்பார்( தவம் செய்வோர், உறுதியுடன் நோன்பு கடைபிடிப்போர் ) சிலராகவும், அவையங்களின் கட்டுப்பாடில் பலராகவும் இருப்பதால் தான். வெற்றிக்கு இதைவிட சிறந்த இரகசியம் உளதா ?



அன்புடன்,
கரு.மலர்ச் செல்வன்

Wednesday, December 21, 2005

தவத்தின் உருவம்

இல்லறம், துறவறம் என்று எதில் இருந்தாலும் நம்மால் தவத்தை மேற்கொள்ள முடியும். தவம் என்றாலே கண்ணை மூடி, மனதை ஒருநிலைப்படுத்துதல் மட்டும் அன்று. பெற்றோர்கள் நல்ல உதாரணம். குழந்தைகளுக்காக அவர்கள் செய்யும் தியாகங்கள் ஏராளம். தற்போதைய துன்பங்களை பொறுத்து, எதிர்காலத்தில் குழந்தைகளுக்கு கிடைக்கப்போகும் மகிழ்ச்சிக்காக பெற்றோர்கள் வாழ்வதும் தவம் தான். ஓருயிராகட்டும், ஆறு அறிவு படைத்த சக மனிதர்களாக ஆகட்டும். அனைவரிடத்தும் அன்பு செலுத்தி எவ்வித துன்பம் செய்யாத அரிய மனிதர்களை பார்க்கிறோம்.

உற்றநோய் நோன்றல், உயிர்க்கு உறுகண் செய்யாமை
அற்றே தவத்திற்கு உரு. [ தவம் 27: 1]

ஆதலால் புற உருவத்தில் மயங்காமல், உண்மையான தவத்தை மேற்கொள்வோரை போற்றி , நாமும் தவமிருக்கலாம் வாருங்கள் !

Sunday, December 11, 2005


தவம் - 1

யோகாசனம் கடந்த 10 ஆண்டுகளாக பயின்று வந்தாலும், அதன் அடுத்த நிலையான தியானத்தை முறையாக பயில வேண்டும் என்றும் சமீப காலமாக ஆசை. என் மனைவிக்கும் இது போன்ற அவா. அப்போதுதான் ஹூஸ்டன் பாரதி கலை மன்றத்தினரின் மின்னஞ்சல் ஒன்று வந்தது. வேதத்திரி மகரிஷி(http://www.vethathiri.org/FrontPage/tamil ) வடிவமைத்த எளியமுறை குண்டலினி பயிற்சியை ஏற்பாடு செய்திருந்தார்கள். சென்னையில் இருந்து வந்திருந்த திரு எம்.ஆர்.சுப்ரமணியன்(படத்தில் நடுவில் அமர்ந்திருப்பவர்) அவர்கள் இப்பயிற்சியை கடந்த இரண்டு வாரங்களாக மிக சிறப்பாக வழங்கினார். நானும் என் துணைவியும் இதனால் பெரும்பயன் அடந்தோம்.

எளியமுறை உடற்பயிற்சி, காயகல்பம், தியானம் என்று மூன்றும் கற்றோம். அதிலும் காயகல்பம் பயிற்சி முறையோ மிக எளிது. பயனோ அளவிட முடியாது. நோயற்ற உடல், நீண்ட ஆயுள், ஒளிவீசும் ஆற்றல் ஆகியவற்றை இதனால் பெறலாம்.

கூற்றம் குதித்தலும் கைக்கூடும் ; நோற்றலின்
ஆற்றல் தலைப் பட்டவர்க்கு. [ தவம் 27 : 9 ]

தவத்தால் வரும் ஆற்றலைப் பெற்றவர்க்கு கூற்றுவனை ( யமன் ) வெல்வது கூடுவதாகும். காயகல்ப தொடர்ந்து செய்துவந்தால் இது முடியும்.


அன்புடன்,

கரு.மலர்ச் செல்வன்

Thursday, December 08, 2005

அடக்கமுள்ள மலை

செய்நன்றிக்கு(அதி. 11) உவமையாய் வையகம், வானம், உலகம், கடல் என்று இயற்கையின் முழுமையை நமக்கு படைக்கும் வள்ளுவர், மலையை மட்டும் சொல்லவில்லையே ?

ஒரு பிரமாண்ட தோற்றத்தை பார்க்கிறோம் அல்லது பெரிய சவாலை எதிர்கொள்கிறோம். மலைப்பாக உள்ளது என்கிறோம். மிகப்பெரிய ஒன்றின் பிரமிப்பை குறித்து நம் உணர்வை ‘மலை’ யாக குறிக்கிறோம். அடக்கம் பற்றி சொல்ல வந்த திருவள்ளுவர் , அதற்கு உருவகமாக ஒன்றை குறிப்பிட வேண்டும். அடக்கம் என்றாலே தோற்றத்தில் உள்ளது அல்ல. வேலைசெய்யும் இடத்தில் இதை பார்க்கலாம். ‘பணிவாக’ தோற்றம் அளிக்கும் மனிதரை பார்க்கிறோம். அவர் திரைமறைவில் குழிதோண்டுவதையும் பார்க்கிறோம். ஆனால், செல்வமும் அதிகாரமும் நிரம்பிய ஒருவரை பார்க்கிறோம்.  இந்த இரண்டும் இருந்தும் பணிவான தோற்றம் உடைய பெரியவர்களை நாம் பார்க்கிறோம். அத்தகையத் தோற்றம்..

நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம்
மலையினும் மாணப் பெரிது. [ அடக்கம் 13 : 4]

Wednesday, November 30, 2005

இயற்கை அழகு

இயற்கையின் அழகே அழகு. இயற்கை என்றாலே என் மனதில் தோன்றுவது பரந்த வானமும், அதில் தோன்றும் அழகிய நட்சத்திரங்களும், காலை ஒளியில் மின்னும் அமைதியான கடலும், பிரமிக்க வைக்கின்ற மலைகளும் ஆகும். இவற்றின் அழகை பாடாத கவிஞர்களே இல்லை.

‘செய்நன்றி அறிதல்’ சிறந்த பண்பு. எல்லா சமூகங்களாலும் போற்றப்படும் பண்பு. சிறிய வயதில், என் கையெழுத்து நன்றாக அமைய உதவிய திரு கந்தசாமி ஆசிரியர். நல்ல வாழ்க்கைக்கு வித்திட்டது அக்கையெழுத்து. உயர்நிலைப் பள்ளியில் உணவிட்டு அறிவும் கொடுத்தவர் என் அன்புக்கு உரிய ஆசிரியர் திரு கே.மேகநாதன்.  கல்லூரி பருவத்தில் வெற்றிப்பாதைக்கு வித்திட்ட டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தி, கே. பிரேம்குமார்.  9 ஆண்டுகளுக்கு முன் நான் அமெரிக்கா வர பெரும் உதவியாக இருந்த நண்பர்கள் இரவீந்தரன் , நாகராஜ்.  செவ்விசையின் பேரின்பத்தை உணர்த்திய நண்பர் பெ.சந்திரசேகரன். இப்பட்டியலுக்கு ஒரு முடிவு உண்டோ ?  இவர்களின் உதவியை நினைத்து பார்த்தாலே மனதை உருக வைக்கும். என் பெற்றோரின் தியாகங்களுக்கும், என் மனைவியின் உறுதுணைக்கும் எழேழுப் பிறப்பிற்கும் நன்றியுடன் இருப்பேன்.

இயற்கையின் அழகுக்கும் செய்நன்றிக்கும் என்ன தொடர்பு ? இரண்டையும் போற்றி உணர்ந்தால்தான் நம்மை நாம் உணரமுடியும். இரண்டும் நம்மை மனமுருக வைப்பன.  இரண்டையும் நம் மனத்தில் கொண்டால் அழகான தியான மாக அமையும். இதோ…

வையகம்(Galaxy) நமது அறிவால் உணரமுடியாது. வானகம்(Universe) வையகத்தின் ஓர் அங்கம். அறிவியலால் ஓரளவு உணர முடியும்.
செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது.  [ செய்நன்றி – 11: 1 ]
வையகத்தையும் வானகத்தையும் அகத்தில் காட்சிகளாக கொண்டு , நாம் ஏதும் செய்யாமல்  நமக்கு உதவி செய்த பெருந்தகைகளை நினைவு கொள்ளுங்கள்…


காலம் அறிந்து செய்த உதவி சிறிய அளவாயினும், இவ்வுலகத்தை விட பெரியது.
காலத்தினால் செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது. [ செய்நன்றி 11:2 ]
இவ்வுலகின் செழுமையையும், பசுமையையும், அழகையையும் மனதில் நினைத்து, காலம் அறிந்து(timely help) உதவி செய்த அன்பர்களை நினைத்துக் கொள்ளுங்கள்…

கடல் அலைகளின் ஓசை இனிமை. அந்த இனிய ஓசையிலும், வண்ணங்கள் படைக்கும் அழகிலும் மனத்தை நிறுத்துங்கள். பயனை எதிர்பாராது நமக்கு உதவி செய்தவர்கள் பலர். அந்த உயர்ந்த மனிதர்களை நினைக்கலாமே !
பயன்தூக்கா செய்த உதவி நயன் தூக்கின்
நன்மை கடலின் பெரிது. [ செய்நன்றி 11: 3 ]


வையகத்தில் வானகம். வானகத்தில் உலகம். உலகத்தில் கடல். இயற்கையின் தொடர்ச்சியையும் வள்ளுவம் நன்றிக்கு உவமையாய் அமைந்த சிறப்பினை வியக்கின்றேன்.

உலகத்தில் இன்னொரு அழகான ‘மலை’ எங்கே ?









Saturday, November 26, 2005

சொக்க தங்கம்

நகை என்றாலே பெண்களுக்கு மட்டும் அல்ல ஆண்களுக்கும் ஆசைதான். நகைகளில் தங்கம் தவிர வைரம்,ரோடியம்,வெள்ளி என்று பலப்பல ‘மண்பொருட்கள்’ நம்மை அலங்கரிக்கின்றன. உலகச் சந்தையில் புல்லியன்களாக வர்த்தகம் நடைபெறுகிறது என்பதையும் நாம் அறிவோம். ஆனால் பண முதலீடே இல்லாமல் அணிகலன்களை குவிக்க முடியும். எப்படி ?

நல்லதொரு குடும்பம். அக்குடும்பத்தை திறம்பட நடத்திச் செல்லும் மனையாள் அக்குடும்பத்தின் சிறப்பாகவும் புகழாகவும் விளங்குபவர். கணவரோடு அறச்செயல்கள் பற்பல ஆற்றுபவர். அவர்களின் மக்கட்செல்வம் பண்பும் அறிவும் நிறைந்த மக்கள். அம்மக்கள் குடும்பத்தின் அணிகலன்களாக விளங்குபவர்கள்.

மங்கலம் என்ப மனைமாட்சி – மற்றதன்
நன் கலம் நன்மக்கட்  பேறு. [ இல்வாழ்க்கை 5 : 10 ]
[ மங்கலம் – சிறப்பு/புகழ் ; கலம் – அணிகலன்/நகை ]

நாம் சேர்க்க வேண்டிய சிறந்த ஆபரணங்கள் நல்ல குழந்தைகளே !

மேலே சொன்ன திருக்குறளின் அதிகாரத்தையும்(5) குறளையும்(10) மாற்றி பார்ப்போம்… கிடைப்பது 10 : 5 [ இனியவை கூறல் ( 10: 5 ]


பெரும்பான்மையான நிறுவனங்களில் வரவேற்பாளாராக பெண்கள் பணிபுரிவதை பார்க்கிறோம். அவர்களின் பணிவு கலந்த இன்சொல் வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சி தருகின்றது.

பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு
அணி ; அல்ல மற்றுபிற. [ இனியவை கூறல் 10 : 5 ]

பணிவும் இன்சொல்லும் உடையோர் வேறு நகைகள் அணியத் தேவையில்லை. அவர்களை சார்ந்த குடும்பத்திற்கும் நிறுவனத்திற்கும் ஒளிவீசும் அணிகலனாகவும் அமைவர். நகைகளில் சிறந்தது புன்னகை.

தொடக்கப் பள்ளி(5ம் வகுப்பு வரை) ஆசிரியர்களாக பெண்கள் நியமிக்கப்படுவதற்கும் இதுதான் காரணம் அன்றோ?.







Thursday, November 10, 2005

வேலையும் இதயமும்..

இதயம் எவ்வளவு முக்கியம் என்பது அது ஒழுங்காக பணி செய்யும் போது நமக்கு புரிவதில்லை. மாரடைப்பு இறப்புக்கு ஒரு முன்னனி காரணம் என்பது நாம் அறிந்ததே. ஆனால் இந்த மாரடைப்பு வார நாட்களில் அதிகமாக எந்த நேரங்களில் வருகிறது என்ற ஆராய்ந்ததில் ..

திங்கள் காலை

என்பது தெரிகிறது. போட்டியும், வேகமும் நிரம்பியுள்ள இவ்வுலகில் இந்த ஆய்வின் முடிவு நமக்கு வியப்பு இல்லை தானே ?

நாம் செய்யும் வேலை நமக்கு பிடித்திருக்கிறதா? நம்மை நாமே இக்கேள்வியை கேட்டால் வேலை 'அழுத்தத்தில்' இருந்து விடுபடலாம்.

அன்போடு இயைந்த வழக்கு என்ப ஆருயிர்க்கு
என்போடு இயைந்த தொடர்பு. [அன்புடைமை- 8 : 3 ]

[ வழக்கு - lifestyle, habit ]

அன்போடு செய்யும் செயல்கள், உயிரும் உடலும் போல இணைபிரியாதது. நம் வாழ்வில் அன்பில்லாத செயல்கள் பெருகினால், உயிர் இந்த உடலை விட்டு பிரிந்துவிடும் எச்சரிக்கையாக இக்குறளை நாம் கொள்ளலாம்.

மேலும் எடுத்த வேலையில் உற்சாகமும் ஈடுபாடும் நிறைந்து பணியாற்றும் நண்பர்களை பார்க்கிறோம். அவர்களின் வெற்றியும் சிறப்பும் நம்மை பிரமிக்க வைக்கிறது. அந்நிலையை 'Passion' அல்லது 'ecstasy' என்று அழைக்கிறோம். இந்நிலையை

அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து
இன்புற்றார் எய்தும் சிறப்பு. [ அன்புடைமை 8 : 5 ]


Monday, November 07, 2005

அகமும் புறமும்


அவர் வெள்ளித் திரையில் புகழ்பெற்ற நடிகை.  தனது நடிப்பினாலும் அழகினாலும் இலட்சக் கணக்கான இரசிகர்களின் இதயங்களை கவர்ந்தவர். தமிழ்த் திரை உலகில் உச்சத்தில் இருந்தபோது, அவர் நடித்த திரைப்படம் வெளிவந்து 200 நாட்களை தாண்டி ஓடிக்கொண்டிருந்த நேரம்…

இலண்டன் மாநகரில் 100 பெரிய பணக்காரர்களில் ஒருவர் அந்த தமிழர். அவருடைய பையன், நடிகையின் திரைப்படத்தை பார்த்ததில் இருந்து ‘அடைந்தால் அந்த அழகுதேவதை. இல்லேல் துறவறம்’ என்ற முடிவுக்கு வந்தான். பெற்றோரிடன் தனது ஆசையை கூறியவுடன் , அவர்களும் சரியென்றனர்.
அப்புறம் என்ன கெட்டிமேளம் தான் !. திருமண செலவு மட்டும் சில மில்லியன் பவுண்டுகள் செலவானதாக சொல்கிறார்கள்.

ஓராண்டு கூட நிறைவுராத நிலையில் மணமுறிவு என்று செய்தி. நடிகை தமிழ்த் திரையில் இரண்டாம் சுற்றுக்கு வந்துவிட்டார் என்றும் அந்த பையன் பெங்களூரில் உள்ள மடம் ஒன்றில் சேர்ந்துவிட்டதாகவும் நமக்கு வரும் கடைசித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

புறத்துறுப்பு எல்லாம் எவன்செய்யும்?  யாக்கை
அகத்துறுப்பு அன்பு இலவர்க்கு . [ அன்புடைமை 8 : 9 ]

Saturday, November 05, 2005

சிங்க நடையிட்டு வீரன் ஒருவன் வந்தான்..


ஒருவர் வேலை நிமித்தமாக வெளியூர் சென்றிருந்தார். அப்பயணத்தில் சில நாட்களுக்கு பிறகு இரவு உணவருந்த ஓட்டலுக்கு சென்றார். அங்குள்ள சேவகரை(bearer) அழைத்து “ கருகிப்போன  தோசை ஒன்றை உப்பில்லாச் சட்டினியுடன் கொண்டு வா” என்றார். அந்த சேவகரும் வந்தவருக்கு மரை கழண்டுவிட்டதா என்ற ஓசனையுடன் உள்ளே சென்று அவர் கேட்டதையே கொண்டுவந்தார். மேசையில் அதை வைத்தவுடன் அந்த சேவகரை முன்னே உள்ள நாற்காலியில் உட்காரச் சொன்னார். அமர்ந்தவுடன் சேவகரை பார்த்து, வந்தவர் “ நான் சாப்பிட்டு முடிக்கும் வரை நீ நச்சரித்துக் கொண்டே இரு. எனக்கு வீட்டு ஞாபகம் ! “ என்றாரே பார்க்கலாம். இது நாட்டு நடப்பு.

இத்துணுக்கை படித்தவுடன் உங்களைப் போல் நானும்தான் நம் வீட்டு கதையை கேட்ட மகிழ்ச்சியில் சிரிக்கவும் சிந்திக்கவும் செய்தேன். கூட்டுக் குடும்பம் இல்லாத சூழலில் கணவன் – மனைவி இடையே உள்ள உராசல்கள் எத்தனை எத்தனை !  உரசல்கள் சற்று அதிகமாகும் போது விரிசல்-சண்டை-விவாகரத்து என்று பெருகிக் கொண்டே போவதை பார்க்கிறோம்.

புகழ்புரிந்த இல்இலோர்க்கு இல்லை - இகழ்வார்முன்
ஏறுபோல் பீடு நடை.

வீட்டில் பிரச்சனைகள் இல்லாதவர்கள் மட்டுமே சிங்கம் போல் பீடு நடை போட முடியும். ‘இகழ்வார்முன்’ என்பது வலியுறுத்தல் . அதாவது மற்றவர்கள் நம்மை இகழும்போது கூட நம்மால் சிங்கம் போல் பீடு நடையிட்டு தடைகளை நீக்கி வெற்றி பெற முடியும் ! உண்மைதானே ?

Tuesday, November 01, 2005

ஈகையின் அளவுகோல்

ஓர் வித்தியாசமான செல்வந்தர் இருந்தார். தன்னிடம் உதவி கேட்டு வருவோர்கள் தன்னுடைய துன்பங்களை சொல்லும்போது பொறுமையாக கேட்டுக் கொள்வார்.  கடைசியாக தன் ஆழ்ந்த அனுதாபத்தையும் இரக்கத்தை மட்டும் தெரிவித்து எந்த உதவியும் செய்யாமல் அனுப்பி விடுவார். இப்பழக்கம் அந்த செல்வந்தரின் வாடிக்கை !.

நம்மிடம் இந்த குணம் சிறிதாயினும் இருக்கும். நம்மிடம் கேட்கப் படும் உதவியை நம்மால் செய்ய இயலும். இருப்பினும் இரக்கப்படுதலோடு உதவியை மறுத்தோ அல்லது தேவையை விட சற்று குறைத்தோ கொடுக்கும் சூழ்நிலை வரும். இதற்கு ஒரு அளவுகோல் ஒன்றை வகுக்கலாம். நாம் செய்யும் உதவி முழுமையாக இருந்தால்(100%) இரந்தவரிடம் இன்முகத்தை தோற்றுவிக்கும்(100%). மாறாக இரக்கம்(பரிதாபம்) மட்டுமே கொண்டால் ( 0 % ஈகை ) இரந்தவரிடம் இன்முகம் காண முடியுமா ?

இன்னாது இரக்கப்  படுதல் - இரந்தவர்
இன்முகம் காணும் அளவு.

Friday, October 28, 2005

ஒப்புரவும் ஈகையும்

தமிழர்கள் எப்போதும் இல்லாத அளவிற்கு உலகமெங்கும் சென்று பொருளும் புகழும் சேர்க்கிறார்கள். நமது தேவைக்கு அதிகமான பொருளை சேர்த்தால் என்ன செய்ய வேண்டும் ? திருக்குறள் அதிகாரம் 22 மற்றும் 23 வழிகாட்டுகிறது. ஒப்புரவு – equalizing – equity for justice என்ற பொருளில் வரும்.

கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு
என் ஆற்றும் கொல்லோ உலகு ? ( 22 : 1 )

பிரதிபலன் பாராது தம் செல்வத்தை சமூகத்திற்கு அளித்தலே ஒப்புரவு . இதற்கு உதாரணமாக என்ன சொல்லலாம் ? மாரி(மழை) உலகம் தனக்கு திரும்பி தருமா என்றா பொழிகிறது ? மழை தன்னை உலகத்திற்கு வழங்குவது ஒப்புரவு. உலகும் சும்மா இருப்பதில்லை. தன்னால் இயன்றதை மீண்டும் நீராவியாக மேலே அனுப்புகிறது. இந்த சமச்சீர் தன்மையால் இப்பிரபஞ்சம் இயங்குகிறது என்பதை நாம் உணரல் வேண்டும்.

இந்த சமச்சீர் தன்மையை ஈகையிலும் வலியுறுத்துகிறார் திருவள்ளுவர். “தானமாக தருகிறார்கள், இலவசமாக கிடைக்கிறது “ என்று மற்றோரிடம் சென்று இரத்தல்(வாங்குதல்) தீயது என்று ஒருபாலரிடம் சொல்லுகிறார். ஆனால் செல்வம் உடையார்க்கு சொல்லும்போது “ மேலுலகம் இல்லையென்றாலும் ஈதலே நன்று” என்கிறார்.
நல்லாறு எனினும் கொளல்தீது – மேலுலகம்
இல்லெனினும் ஈதலே நன்று (23 : 2 )


மீண்டும் ஒப்புரவிற்கு வருவோம். ஒப்பிரவின் ஊற்றான செல்வத்திற்கு உதாரணம் சொல்ல வேண்டும்.


ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்
பேரறி வாளன் திரு ( 22 : 5 )

பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம்
நயனுடையான் கண் படின் ( 22 : 6 )

மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம்
பெருந்தடையான் கண் படின் ( 22 : 7 )

இம்மூன்றிலும் உள்ள பொதுமை செல்வம் . இந்த செல்வத்திற்கு உதாரணம் ஊருணி( ஊருக்கு பொதுவான நீர்நிலை) , நன்கு பழுத்த பழங்களை உடைய மரம் , மருத்துவ பயனுடைய மரம் என்று மூன்று உதாரணங்களை சொல்கிறார். இம்மூன்றிலும் உள்ள மையகருத்தில் முழுமையான தயார்நிலையை ( complete readiness ) சுட்ட வேண்டும் . ஒரு குழந்தையை அழைக்கின்றோம். அக்குழந்தையிடம்
“ ஊருக்கு பொதுவாக உள்ள நீர்ச்சுனையினால் என்ன பயன் ? “ என்று கேட்டுபாருங்கள் . “ தாகம் தீர்க்கும் “ என்று யோசிக்காமல் பதில் வரும்.
“ மரத்தில் உள்ள நன்கு பழுத்த பழத்தினால் என்ன பயன் ? “ என்று கேட்டுப் பாருங்கள். “ ஆகா !. சாப்பிடலாம் “ என்று உடனடியாக பதில் வரும்.
“ ஒவ்வொரு பகுதியும் மருந்தாகி விளங்கும் ஒரு மரம் இருக்கிறது . அதனால் என்ன பயன் ?” என்று கேட்டுப் பாருங்கள். “ நோய் தீர்க்கும்” என்று முடிப்பதற்குள் பதில் வரும்.

இதுபோலவே நமது பள்ளி கேள்வி தாள்களும் அமைந்துவிட்டால் அனைவரும் நூற்றுக்கு நூறுதானே ?!

பங்கு சந்தையின் வீழ்ச்சி….
செல்வம் உள்ளவர் முதலீடு செய்வது பங்கு சந்தை. அப்பங்கு சந்தை பலமுறை சரிவதை நாம் பார்க்கிறோம்.

ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் – தாம் உடைமை
வைத்திழக்கும் வன் கணவர். ( 23 : 8 )

வறியர்களுக்கு ஈந்து உவக்கும் இன்பம்( உவகை – மகிழ்ச்சி ; இன்பம் – மகிழ்ச்சி – இரட்டை மகிழ்ச்சி ) அறியாதவர்களே பங்கு சந்தையில் முதலிட்டு பொருளை இழப்பார்கள் !

இக்குறளை கேட்ட ஒரு பெண்மணி என் ‘கணவருக்கு’ தானே இந்த குறள் புத்தி சொல்கிறது . நான் பங்குகள் வாங்க செல்கிறேன் என்றாரே பார்க்கலாம் !!!




Friday, October 14, 2005

இல்லறமே நல்லறம்...


அறன் அனைத்திலும் இல்லறமே முதன்மை என்பதால் 'இல்வாழ்க்கை' 'அறன்' என்ற அதிகாரத்திற்கு பின் அமைத்துள்ளார் என்று கொள்ளலாம்.

இல்லறம் நம்மை 'அறிவதற்கு' சிறந்த வாய்ப்பு. சிறு வயதில் பொறுப்பில்லாமல் நான் வாழ்ந்த காலங்களை நினைத்துப் பார்க்கிறேன். மனப்பக்குவம் திருமணத்திற்கு பின்பும் -குழந்தைகள் வளர்க்கும்போது பெற்று வருகிறேன் என்பதே உண்மை. நம்மை நாம் உணர்ந்து இந்த உலகத்திற்கு எப்படி பயன் தரலாம் என்ற சிந்தனை இல்லறத்தில் நிறைவு கிடைக்கும் போது ஏற்படுகிறது.

இல்லறத்தின் அடிப்படை என்ன ?
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது. [ 5:5]

தமிழர்கள் திருமண அழைப்பிதழ்களில் நிறைந்திருக்கும் உயரியக் குறள் இது.

அன்பும் அறனும் எப்படி இல்லறத்தின் பண்பாகவும் பயனாகவும் அமைய முடியும்? வாழ்வில் நாம் காணும் பொருட்களுக்கு பண்பாக அமைவது பயனாக இருக்காது. உதாரணம் தண்ணீரின் பண்பு குளிர்ச்சி. அதன் பயன் உயிர்களுக்கு உணவாகவும், தாகமும் தீர்க்கும்(மற்ற பயன்களும் உள). பயனில் பண்பையும் ஒன்றே காணுதல் அரிது. பண்பின் வெளிப்பாடு பயன் என்றும் கொள்ளலாம். ஆனால் சிறந்த இல்வாழ்க்கைக்கு அன்பும் அறனும் பண்பாகவும்(அகம்) , பயனாகவும்(புறம்) அமைந்திருப்பதை எண்ணி எண்ணி வியக்கின்றேன்.


இல்வாழ்க்கைக்கு அன்பும் அறனும் போல , பின்வரும் துறவறத்திற்கு( துறவு என்பது மனநிலை - இதைப் பற்றி பிறகு பார்க்கலாம்) அருள், தவம் மற்றும் வாய்மை என்று கொள்ளலாம்.

இல்வாழ்க்கை அதிகாரத்தில் ஆறு, ஆற்று என்ற சொற்கள் அடிக்கடி வருகின்றனவே. எதற்காக ?

Friday, October 07, 2005

அறன் எனப்பட்டது(3)

மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறம்(4 : 4)என்பதில் அறத்திற்கான இலக்கணம் காண்கிறோம். இதில் மாசு என்றால் என்ன ?

அழுக்காறு அவா வெகுளி இன்னாச்சொல் எனநான்குமே மாசு என்று அடுத்த குறளில்(4:5) கூறுகிறார். அழுக்காறு - பொறாமை. அவா - பிறன் பொருளின்மீது ஆசை . வெகுளி - கடும்கோபம் . இன்னாச்சொல் - இனிமையற்ற சொல். இந்த நான்கு கறைகளையும் நமது மனதில் ஏற்படுவதற்கு மூலகாரணம் என்ன ? 'தான் என்ற கருவம்' . கருவத்தின் வெளிப்பாடே பிறன் பொருள் மீதும் ஆசையும், பொறாமையும். நாம் பொறாமைக்கும் ஆசைக்கும் தடைகள் வரும்போது கோபம் வருகிறது. கோபத்தின் வெளிப்பாடு கடுஞ்சொற்கள். விவாகரத்து, கொலை, கொள்ளை, கற்பழிப்பு என்று வாழ்க்கையின் பல அவலங்களுக்கு காரணம் மேலே சொன்ன தொடர் என்பதை நாம் கண்கூடாக காண்கிறோம்.

நாம் ஒவ்வொருவர்க்கும் ஒரு இயற்கை உண்டு. நம் படைப்பிற்கும் காரணம் உண்டு. எல்லோரும் மருத்துவராகவோ, பொறியாளாராகவோ, தொழில் அதிபராகவோ, விஞ்ஞானியாகவோ பணிபுரிய முடியுமா ? வண்டி ஓட்டுநர், ஓவியர், பேச்சாளர், ஆசிரியர், செவிலியர், சுத்தம் செய்பவர் என்று எந்த வேலையாக இருந்தாலும் பிறர்க்கு பயன் அளிக்கும் வண்ணம் நம் வாழ்க்கை அமைந்தால் எவ்வளவு இன்பம் !. அலுவலக கழிவறைகளை சுத்தம் செய்யும் ஒரு அன்பரை நான் அறிவேன். காலை, மாலை எப்போது பார்த்தாலும் சுத்தமாக மடிப்பு கலையாத(உலர்-சலவை செய்த) ஆடைகளை உடுத்தியிருப்பார். அவர் வேலை செய்வதையும் கவனித்திருக்கிறேன். அவ்வளவு நேர்த்தி.

ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே
செல்லும் வாயெல்லாம் செயல். (4: 3)

ஒல்லும் வகை அறவினை - இயன்ற வரையில் அறச்செயல்கள்
செல்லும் வாயெல்லாம் செயல் - நாம் செய்யும் எந்த செயலிலும் சிறப்பாக செயலாக அமைய வேண்டும் .

Tuesday, September 20, 2005

அறன் எனப்பட்டது(2) ...

"அறன் மேலானது. அனைவரும் அறவழியில் நடக்க வேண்டும்" என்று கூவி ஒருவர் சொன்னால் எவ்வளவு பெயர் கேட்பார்கள் ? உலகின் இயல்பு அது. அப்படி இல்லாமல்...

சிறப்பீனும் செல்வமும் ஈனும் அறத்தினூங்கு
ஆக்கம் எவனோ உயிர்க்கு
(4:1)

என்று சொன்னால் பத்துபேராவது ஆர்வத்துடன் திரும்பி பார்ப்பதை நாம் பார்க்கிறோம். இந்த உத்தியையே 'அறன் வலியுறுத்தல்' அதிகாரத்தில் முதல் குறளிலேயே காண்கிறோம். அதில் சிறப்பு ஈனும் என்று சொன்னால் போதாதென்று செல்வமும் அறன் தரும் என்று வலியுறுத்துகிறார்.

இப்போது மக்களின் கவனத்தை ஈர்த்தாயிற்று. அடுத்து அறன்வழி நடக்கவில்லையென்றால் அதன் விளைவை கூறவேண்டும் அல்லவா ?

அறத்தின் ஊங்கு ஆக்கமும் இல்லை அதனை
மறத்தலின் ஊங்கு இல்லை உயிர்க்கு. ( 4:2)

நடந்து போகிறோம். அந்த அழகிய வழியில் குப்பை உள்ளது. குனிந்து குப்பையை எடுத்து தொட்டியில் போடுவதில் அறன் உள்ளது. அலுவலகத்தில் தொலைபேசியில் பேசும்போது நமக்கு பக்கத்தில் வேலைசெய்வோர்க்கு தொந்தரவு இல்லாமல் பேசினால் அதுவும் அறனே !. ஊருக்கோ அல்லது வேலைக்கு செல்கிறோம். காரில் சென்றால் வசதி என்று பார்க்காமல் பொது ஊர்தியில் செல்வதும் அறன் தானே ?

ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே
செல்லும் வாயெல்லாம் செயல் ( 4:3)

Thursday, August 25, 2005

அறன் எனப்பட்டது...

கயல்விழி உயர்கல்வி பெற்ற பெண். தனது அறிவுத்திறனால் நிறைய பொருட்செல்வமும் பெற்றார். வாழ்க்கையின் அடுத்த கட்டத்தைத் தேடும்போது அந்த ஊரில் இருந்த பெரியவரை( நீத்தார் பெருமை - அதிகாரம் 3 - அதிகாரத்தை அறன் அதிகாரத்தோடு இணைக்க ) தன் கணவருடன் பார்க்க சென்றார். இருவரும் அப்பெரியவரை வணங்கி "அய்யா, முன்னோர் பயனால் நாங்கள் வேண்டும் பொருள் சேர்த்துள்ளோம். இதை வறியவர்களுக்கு பயன்படுத்த ஆவல். ஆதலால் அறக்கட்டளை தொடங்கிட உங்கள் ஆசி வேண்டுகிறோம்" என்றனர்.

அப்பெரியவர் அவர்களை ஆசிர்வதித்து "அளவில்லா இன்பம் நிறையட்டும். அறக்கட்டளை எளியோருக்கும் வறியோருக்கும் உதவட்டும். ஆனால் நீங்கள் நினைப்பது போல் உதவுவது மட்டுமல்ல அறம் ! " என்றார்.

மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறம்
ஆகுல நீர பிற (4 : 3)

"மனமே ஊற்று. தூய்மையான மனத்தில் எழும் எல்லாம் அறமே. மற்றெல்லாம் அறம் அல்ல. மனதில் அழுக்குடன் எவ்வளவு நன்மை செய்தாலும் அவை அறம் அல்ல" என்றார் அப்பெரியவர்.

மேலும் அந்த பெரியவர் "அறச்சக்கரம் என்று ஒன்றுள்ளது . அச்சக்கரத்தின் கம்பிகள் நான்கு அவை
(1) அழுக்காறாமை
(2) பிறன் பொருளின் மீது ஆசையின்மை
(3) கோபம் இல்லாமை
(4) இனிய சொல்

அழுக்காறு அவா வெகுளி இன்னாசொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம் [ 4 : 5 ]

அறச்சக்கரம் வெற்றிகரமாக சுற்ற இந்த நான்கும் அமைய வேண்டும் .

புகழும் செல்வமும் எப்படி அடைவது ? என்பதுதான் நிறையபேர் கேட்கும் கேள்வி ? அதை பற்றி சொல்கிறேன்.......

Thursday, August 18, 2005

உயிரே...

அ முதல் ஔ வரையான எழுத்துக்களை எப்படி தமிழர்கள் உயிர் என்று அழைத்து வந்துள்ளனர் என்று நினைத்து பார்த்தால் வியப்பாக உள்ளது. உலக மொழிகளில் நிறைய சொற்கள் உயிரில் தொடங்கும். உலகின் மூன்று பெரிய மதங்கள் - கிருத்துவம், இசுலாம்,இந்து புனித சொற்களாக கருதும் 'ஆமென்' , 'அல்லா' , 'ஓம்' உயிரில் தொடங்குவது நமது உயிருக்கும் இறைவனுக்கும் உள்ள தொடர்பை காட்டுகிறது அல்லவா ?

1330 குறள்களில் 479 பாக்கள் உயிர் எழுத்தில் தொடங்குவதாக அமைந்துள்ளது மேற்கூறிய [உயிர் எழுத்துக்களின்] சிறப்பைக் காட்டுகிறது. 'தியானமும் திருக்குறளும்' என்ற தலைப்பில் நமது சொற்களில் உள்ள நெடில் எழுத்துக்கள் எப்படி மனதை ஒருமிகப்படுத்தும் ஆற்றல் உடையன என்பதை பார்த்தோம். அதுபோல் ஒரு சொல்லின் தொடக்கத்தில் உள்ள உயிர் ஒலி சக்தியை கொடுக்கும். உயிரே நெடிலாக(ஆ, ஈ,ஊ,ஏ,ஐ,ஓ ) இருந்தால் ஒலியின் சிறப்பை சொல்லவா வேண்டும் ?



Saturday, August 13, 2005

யார் பெரியோர் ?

வயதானாலே ஒருவர் பெரியவரா ? அல்லது நிறைய கற்றதனால் ஒருவர் பெரியவர் ஆகிவிடுகிறாரா ? இல்லை. 'நீத்தார் பெருமை' என்ற அதிகாரத்தில் பெரியவரை எப்படி அடையாளம் காணலாம் என்று விரிவாக வள்ளுவர் கூறுகிறார். நீத்தார் - நீத்தல் - பிரிதல், துறத்தல் என்று கழகத் தமிழ் அகராதி கூறுகிறது.

துறந்தார் இறைவனை அடையும் பாதையில்(God-in-making) இருப்பதாலும், வான்மழைக்கு காரணமாக இருப்பதாலும் 'நீத்தார் பெருமை' அதிகாரம் அவைக்கு பின்னால் வைக்கப்பட்டுள்ளது. நமது மரபில் நாட்டில் நல்லவர்கள் உள்ளதால் மழை பெய்கிறது என்ற நம்பிக்கை 'வான் சிறப்பு' -->' நீத்தார் பெருமை' தொடர்ச்சியின் காரணத்தை காட்டுகிறது.

இந்த அதிகாரம் நூல்,துறவு,அறம்,ஐம்புலம், செயல் என்ற கருப்பொருட்களை கொண்டுள்ளதை காண்கிறோம். விரிவாக பார்ப்போம்.
* ஒழுக்கத்து நீத்தார் (1) ,
* துறந்தார்(2),
*அறம் பூண்டார்(3) ,
* ஐந்து காப்பான்(4),
* ஐந்து அவித்தான்(5),
* செயற்கரிய செய்வார்(6)
* ஐந்தின் வகை தெரிவான்(7)
* நிறைமொழி மாந்தர்(8)
* குணமென்னும் குன்றேறி நின்றார்(9)
* அறவோர்(10)
என்று பத்து குறட்பாக்களிலும் பெரியோரின் பண்புகள் பட்டியலாக உள்ளதை காண்கிறோம். ஐந்து என்பது நமது ஐந்து புலன்களையும் அதன் உணர்வுகளையும் குறிக்கும்.

ஒழுக்கத்தின் உயர்ந்த நெறிகளை உடைய பெரியோரின் சிறப்பு(விழுப்பம்) அவரின் எழுத்தின் (பனுவல்- நூல்) துணிவை வைத்து சொல்லலாம். பேசுவதை விட எழுதும் போது நிறைய துணிவு வேண்டும். எழுதினால் வரலாற்று பதிவாகிவிடுகிறதே !. [ குறள் 3 : 1 ]

தொடர்ந்து நிறைமொழி மாந்தர் பெருமை உலகத்தில் அவரால் படைக்கப்படும் மறைமொழி(நூல்) காட்டி விடும் [ குறள் 3 : 8 ].

ஐந்து புலன்களை காத்து, அவித்து(ஒடுக்கி),வகை தெரிந்து வாழ்வோர் பற்றி முறையே குறட்பாக்கள் 4,5,7 கூறுவதை பார்க்கிறோம்.

மறைமொழிந்தவர் குணமென்னும் குன்றேறி நின்றாலும், அவருக்கு சினம் உண்டானால் கண(நொடி) நேரமாயினும் காத்தல் அரிதாகும்(குறள் 3:9). முனிவர்களின் சாபத்தை இக்குறள் நினைவூட்டும். இதன் தொடர்ச்சியாக சினம்கொள்ளும் பெரியோருக்கு அறிவுரையை பார்ப்போம். 'எல்லா உயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுகும் அறவோரே அந்தணர்' (குறள் 3:10) என்று எடுத்துரைப்பதில் சினத்தை குளிர்விக்கும் மருந்து இருப்பதை பார்க்கிறோம்.

இப்படி அறம் பூண்ட துறவோரின் பண்புகளையும் அவரின் செயல்களையும் 'நீத்தார் பெருமை' யின் 10 குறட்பாக்கள் சொல்லும் அழகை பார்க்கிறோம். கோலத்தின் புள்ளிகளை இணைப்பது போல் இக்குறட்பாக்களை சேர்த்தால் மனனம் செய்வது எளிதாவதோடு வாழ்வின் உண்மைகளை அறிகிறோம்.





Friday, August 05, 2005

திருக்குறளும் தியானமும்...

கடந்த பத்து ஆண்டுகளாக மேற்கத்திய நாடுகளில்(குறிப்பாக அமெரிக்காவில்) தியானம் புகழ் பெற்றுவருகிறது என்பதை நாம் அறிவோம். சமீபத்தில் நான் படித்து/கேட்டு புத்தகம்/குறுந்தட்டு - Wayne W. Dyer எழுதிய 'Getting in the Gap: Making Conscious Contact with God Through Meditation'. இங்கே இடைவெளி என்பது நாம் பேசும், படிக்கும், பாடும் சொற்களுக்கு நடுவே உள்ள இடைவெளியை குறிக்கிறது.

சொற்களின் பொருள் சொற்களில் இல்லை - அதன் இடைவெளிகளில் இருக்கிறது. இதை நாம் திருக்குறளுக்கு கொண்டு வருவோம். உதாரணமாக

அறன்அறிந்து வெஃகா அறிவுடையார்ச் சேரும்
திறன்அறிந்து ஆங்கே திரு. [ வெஃகாமை 18 : 9 ]

எடுத்துக் கொள்வோம். ' அறன் அறிந்து' என்ற சொல்லுக்கும் 'வெஃகா' என்ற சொல்லுக்கும் உள்ள இடைவெளியை நாம் பாடும்போது கவனிப்பது இல்லை. சொற்களில் கவனம் செலுத்துவோம். அல்லவா ?

அப்படியில்லாமால் கீழ்கண்ட முறையை முயற்சி செய்து பார்ப்போம்...

அமைதியான இடத்தில் அமர்ந்து, கண்களை மூடி மூச்சை(மூக்கால் மட்டும்) சில முறை நன்றாக உள்ளே இழுத்து விடவும். அடிவயிறு மூச்சால் சுருங்கி விரிந்தால் நீங்கள் நன்றாக மூச்சு விடுகிறீர்கள் என்று பொருள் ! சில நிமிடங்களுக்கு பிறகு மன அமைதி அடையும் போது 'அறன் அறிந்து' என்று நிதானமாக சொல்லவும்.... பிறகு சில மணித்துளிகளில் 'வெஃகா...' என்று சொல்லவும் ... இப்படி சொல்லும் போது நெடில் எழுத்துக்கள் வரும்போதெல்லாம் அதன் உயிர்ப் பகுதியை நன்றாக நீட்டவும். வெஃகா... என்று உச்சரிக்கும்போது கா... ஆ..ஆ.. என்று நீட்டிப் பாருங்கள். மனம் ஒன்றுபடுவதை நாம் கவனிக்க முடியும். ஆ.. ஈ.. ஊ.. ஏ.. ஓ ஆகிய நெடில் உச்சரிப்புக்கள் தனியாகவோ அல்லது உயிர்மெய்யாகவோ ( உதாரணம் : கா.. மா.. போ...) மனதை ஒருமைபடுத்தி நமக்கு உயிரூட்டும் தன்மை உடையவை.
மீண்டும் நாம் ஆரம்ப்பித்த திருக்குறளுக்கு வருவோம்...

வெஃகா... என்று உச்சரித்தபின் மெதுவாக பின் நோக்கி நகர்ந்து 'அறன் அறிந்து' என்ற சொல்லுக்கு அடுத்துள்ள இடைவெளியில் கவனம் செல்லுத்துவோம். சில நொடிகள்தான் நம்மால் அந்த இடைவெளியில் கவனம் செலுத்த முடியும் என்றாலும் கூட அந்த இடைவெளியில் கவனம் செலுத்துங்கள் - உங்களால் முடிந்த வரை.

அதேபோல வெஃகா என்று உச்சரித்து அடுத்து அறிவுடையா...ர் என்று உச்சரித்து மெதுவாக பின் நோக்கி நகர்ந்து அந்த இடைவெளியில் கவனம் செலுத்தவும். அதேபோல தொடரவும்...
அறன்அறிந்து வெஃகா
வெஃகா அறிவுடையார்
அறிவுடையார்ச் சேரும்
சேரும் திறன்அறிந்து
திறன்அறிந்து ஆங்கே
ஆங்கே திரு

ஆரம்பத்தில் இடைவெளியில் தங்கி எண்ணங்கள் அற்று 'சும்மா' இருப்பது கடினமானாலும் பழக பழக நம் உணர்வுகளும் மேம்படுவதை பார்க்க முடியும்.

முயற்சி செய்வோம்...




Monday, August 01, 2005

குறள் நடை

பேச்சாளர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும் ஒரு நடை இருக்கும். அழகிப் போட்டியில் கலந்துகொள்ளும் இளையோருக்கும் நடையென்று ஒன்று இருக்கும். எனக்கு? நான் வேலைக்கு சென்றுவர சுமார் 1.5 மைல் நடக்கின்றேன். மேலும் பெரும்பான்மையான மதிய இடைவேளைகளில் வேலை செய்யும் இடத்தருகே ஒரு அழகிய பூங்கா உள்ளது. அதை உத்தேசமாக ஒரு நாளைக்கு 4 முறை சுற்றினால் 1 மைல் நடக்கின்றேன். இப்படி 2.5 மைல் நடக்கும்போது ஏதோ ஒரு சிந்தனையில் மனதை அலையவிடுவதை விட கடந்த ஒரு மாதமாக நான் மனப்பாடம் செய்துள்ள குறட்பாக்களை பாடிக்கொண்டே நடக்கின்றேன். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதத்தில்.. ஒரு நாள் 3-7 அதிகாரங்களில் உள்ள ஒற்றை எண்களாக .. இன்னொரு நாள் இரட்டை எண்களாக .. ஒரு நாள் 140 - 111 கீழிருந்து மேலாக...

நமது குறள் நடை எப்படி இருக்கிறது ?

Wednesday, July 20, 2005

'கடவுள் வாழ்த்து' அதிகாரத்திற்கு அடுத்ததாக 'வான் சிறப்பு' அமைத்திருக்கும் திருவள்ளுவர், இயற்கையின் ஒப்பற்ற பிரதிநிதியாக வான் மழையாக கொள்கிறார் எனலாம்.

இந்த அதிகாரத்துடன் என் கற்பனை இப்படி ஓடுகிறது. வானிலிருந்து மிகப்பெரிய மழைத்துளிகள் 3 பெய்கின்றன. வண்ணத்துடன் ஆரவாரத்துடன் அவை பொழிவதாக கற்பனைக் கொள்ளலாம்.

முதல் துளி.. தனி மனிதனுக்கு பயன் தருகிறது. உயிரினங்களுக்கும் இது பொருந்தும். முதல் 3 குறள்கள் இதை புலப்படுத்துகின்றன. அமிழ்தம் என்றும்(1), மழையே தாகத்தை தீர்க்கவும், உணவாகவும்(2), மழை இல்லையேல், உலகமெங்கும் நீர்நிலையால் அமைந்திருந்தாலும் - பசியை தாங்க முடியாத(3) ஆகிய அடிப்படை தத்துவங்களை தொடராக மனதில் நிறுத்தலாம்.

இரண்டாம் துளி ... உணவுக்கு அடிப்படையான விவசாயத்திற்கு மழை எவ்வளவு இன்றியமையாதது என்பதை அடுத்த 3 பாக்கள் சொல்கின்றன.
பாடி மனனம் செய்யும்போது அநேக குறட்களில் உள்ள எதுகை-மோனை (rhyme ) அமைப்பை உணர்ந்தால் மனனம் இன்னும் எளிதாகிறது !.
உதாரணமாக விசும்பின் என்று முதல் அடியில் வந்தால் அடுத்த அடியில் பசும்புல் என்று அமைந்திருப்பதை பார்க்கிறோம். இது மோனை அமைப்பு.
இத்தோடு இன்னொரு அமைப்பையும் அனைத்து குறட்பாக்களிலும் காணலாம். அதுதான் செப்பலோசை . செப்பல் - பேசுதல்-உரையாடல் . அதாவது இருவருக்கும் நடக்கும் உரையாடல்(dialog) போன்றே அனைத்து குறள்களும் அமைந்திருப்பது ஆராய்ச்சிக்குரியது. விசும்பின் துளிவீழின் அல்லால் ? என்று ஒருவர் கேட்பது போலவும் அதற்கு இன்னொருவர் 'மற்றாங்கே பசும்புல் தலை காண்பது அரிது' என்று பதில் சொல்வது போலவும் அமைந்திருப்பது செப்பலோசை.


மூன்றாம் மழைத் துளி .. வாழ்வின் உயர்ந்த நெறிகளோடு உள்ள மழையின் தொடர்பையும் காட்டுகிறது . நீர் நிலைகளின் சுழற்சியின் முக்கியத்துவத்தையும்(7) , பூசனை, தானம் , தவம், ஒழுக்கம் என்று நாம் முக்கியமாக கருதும் அனைத்தும் மழையை சார்ந்தே உள்ளன(8,9, 10 ) .

இதில் பத்தாவது குறளின் முடிவாக வரும் 'ஒழுக்கு' அடுத்த அதிகாரமான நீத்தார் பெருமையின் முதல் குறளில் ஆரம்பமாகவும் அமைவதை காண்கிறோம் .


நான் பள்ளியில் படிக்கும்போது திருக்குறள் உரையென் பரிமேலழகர், மு.வரதராசனார் ஆகியவற்றை பரவலாக புழங்கியுள்ளோம். ஆனால் சமீபத்தில்தான் தேவநேயப் பாவாணர் எழுதிய உரையை பற்றி கேள்விபட்டு சென்னை சென்றபோது ஹிக்கிம்போதத்தில் 'திருக்குறள் - தமிழ் மரபுரை' வாங்கி வந்தேன்(ஸ்ரீ இந்து பதிப்பகம், 40 உஸ்மான் சாலை, தியாராய நகர், சென்னை - 600 017 ) . இந்த உரையில் தான் அதிகாரங்களின் தொடர்புகளை தெளிவாக எழுதியுள்ளார். உதாரணமாக ஏன் 'நீத்தார் பெருமை' என்ற அதிகாரம் 'வான் சிறப்பு' க்கு பின் திருவள்ளுவர் அமைத்துள்ளார் என்பதை பாவாணர் என்ன சொல்கிறார் என்று கவனிப்போம்..

" இறைவன் திருவருளைப் பெற்றவரும், மழைபெயற்கு ஓரளவு கரணியமாகக் கருதப் பெறுபவரும், பேரரசர்க்கும் பெருந்துணையாகும் அறிவாற்றல் மிக்கவரும், மழைக்கு அடுத்தபடியாக நாட்டு நல்வாழ்விற்கு வேண்டியவருமான, முற்றத்துறந்த முழுமுனிவரின் பெருமை கூறுவதால் "

இப்படி அதிகார தொடர்புகளையும், ஒவ்வொரு அதிகாரத்துள்ளே அமைந்துள்ள இணைப்புகளை கண்டுகொண்டாலே மனன பயிற்சி எளிதாகிறது.. வாழ்க்கையின் உண்மைகளும் தெளிகிறது.







Wednesday, July 13, 2005

கடவுள் வாழ்த்து அதிகாரத்தின் குறள்களில் உள்ள பொதுவான அமைப்புகளை இங்கே பார்ப்போம்...

ஒவ்வொரு மனிதனும் கடவுள் நிலையை அடைய முடியும் . இறைவன் நம்மில் இருக்கின்றான் , நம் அன்றாட வாழ்வில் அவனை காண முடியும் .

கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஆர் எனின்

'கற்றதனால் ஆய பயனென்' என்று நமது 'இயல்பு' நிலையை சொல்லி - இறைவனின் தாளை(திருவடி) வணங்கினால் வால் அறிவனை அடையலாம் என்ற மேன்மை நிலையை சொல்கிறார். வாலறிவன் என்பது infinite intelligence என்று கொள்ளலாம். நாம் கற்பது அளவுடையது. அது நமது இயற்கை. ஆனால் இறையின் பண்பு - வால் அறிவு . அளவுடைய அறிவில் இருந்து வால் அறிவிற்கு நாம் செல்ல அவன் திருவடியை பணிந்தால் போதும்.


இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு

நன்மை- தீமை , இன்பம்- துன்பம் என்று எதிர்மைகளை கொண்டதே நம் வாழ்க்கை. இறைவனின் பொருள்(மெய்ப்பொருள்) மேன்மையானது. நம்முடைய ஒவ்வொரு செயலும்(புகழ் புரிதல்) மெய்ப்பொருளை சார்ந்து அமைந்தால் வாழ்க்கையின் ஏற்ற இறக்கத்திலிருந்து நம்மை பாதிக்காது.
இருள்சேர் இருவினை - நம் வாழ்வின் 'இயல்பு'
இறைவன் பொருள் - மெய்ப்பொருள் - இறையில் பண்பு
இறைவன் பொருள்சேர் புகழ் புரிதல் - நம்மை இவ்வாழ்வின் 'இயல்பிலிருந்து' விடுவித்து இறையில் பண்பை நம்மிடம் வளர்க்கும்.


இதுபோல மற்ற 8 குறள்களையும் பாருங்கள். மூன்று பகுதிகளாக அவற்றையும் பிரித்து பாருங்கள். சிகப்பு பகுதி - நம் இயல்பு நிலை , நீலம் - இறையின் பண்பு , பச்சை - சிகப்பிலிருந்து நீலத்தை அடைய நம் பணி .


இவ்வழியில் கடவுள் வாழ்த்தின் 10 குறட்பாக்களையும் மனனம் செய்யலாம் அல்லவா ? மறந்து விடாதீர்கள் ... ஒலி ஒளி அமைப்பில் படக்கதையாக மனதில் பதிய வைக்கவேண்டும்.


அடுத்தது... வான் சிறப்பு

Sunday, July 10, 2005

திருக்குறள் மாநாடு ... தொடர்ச்சி இதோ..


நேற்று ( ஜூலை 9) மாநாட்டில் பெண் பேச்சாளர்கள் ஒருவரும் இல்லையே என்று யோசனையில் இருந்தேன். ஆனால் இன்று மூன்று பெண்கள் மிக சிறப்பான கருத்துக்களை சுவையாக பாடினார்கள். இதில் முனைவர் விஜயலட்சுமி இராமசாமி திருக்குறள் சொன்ன 21 தலைகள் என்ற தலைப்பில் அழகான பாட்டுகளை பாடி அனைவரையும் மகிழ்வித்தார் ..



மாநாட்டு ஏற்பாட்டாளர்கள் இந்த மூன்று பெண் படைப்பாளர்களையும் நேற்றே பேசினால் பலரும் பயன் அடைந்திருப்பார்கள் என்பது என் கருத்து.
திருக்குறள் மாநாடு...

இடம் : வாசிங்க்டன் பெருநகர், அமெரிக்கா

நாள் : சூலை 8,9,10

நடைபெற்றது.

http://www.thirukkural2005.org

நானும் சென்றிருந்தேன். சுமார் 250 பேர் பங்குகொண்ட இம்மாநாட்டில் நிறைய கருத்துக்கள் பரிமாறப்பட்டன. எனக்கு பிடித்தவை:

- முனைவர் வா.செ.குழந்தைசாமி
- முனைவர். எஸ்.வி.சண்முகம்
- முனைவர். ஜார்ஜ் ஹார்ட்
- ரெக்ஸ் சகாயம் அருள் ( தூக்கு தண்டனை அறவே ஒழிக்க வேண்டும் என்று குறள்வழியில் வாதம் செய்தார் )
- அருளாளர் கெஸ்பர் இராஜ்

மற்றும் நிறைய ஆராய்ச்சி கட்டுரைகள் தமிழக மற்றும் அமெரிக்க தமிழ் அறிஞர்களால் படைக்கப் பெற்றன.

2000 ஆண்டுகளுக்கு பிறகும் சிறப்பாக திருக்குறள் ஆயப்படுவது காலம் கடந்து குறள்நெறி வளர்ந்து வருகிறது என்பதை இம்மாநாடு காட்டுகிறது.

மாநாட்டின் கலைநிகழ்ச்சியாக 'திருக்குறள் பரதம்' திரு தனஞ்சயன் குழுவினரால் வழங்குப்பட்டது. தரமான நினைவு கொள்ளும் கலைநிகழ்ச்சி.
சுமார் 30 குறள்களை தேர்ந்தெடுத்து அவற்றை அடிப்படையாக அமைத்திருந்தனர்.


மாநாட்டில் நிறைய இளைஞர்கள் காண முடிந்தது மகிழ்ச்சி தரும் செய்தி.


வளர்க இதுபோன்ற மாநாடுகள் !

Thursday, June 30, 2005

மனப்பாடம் எவ்வளவு அவசியமோ அதைவிட அவசியம் புரிந்தும், மகிழ்ச்சியுடன் கற்றல். சினிமா பாடல்களை கேட்கும்போது உள்ள துள்ளல் நம் திருக்குறளை பாடும்போது வருமா ? வரும். சுவைத்து இசைக்கும்போது.
இரண்டு ஆண்டுகளுக்கு முன் டி.கே.எஸ்.கலைவாணர் பாடிய 15 அதிகாரத் தொகுப்பை குருந்தட்டு(சீடி)யில் வாங்கினேன். எவ்வளவு அழகாக பாடியுள்ளார். வாகனத்தில் செல்லும்போது குழந்தைகளுடன் குறட்பாக்களை கூடப்பாடும்போது கிடைக்கும் இன்பமே அலாதி!

குறள் அதிகாரங்களின் பெயர்களையும் அதன் எண்களையும் நினைவில் வைத்துக் கொள்வது முதல் படி என்று ஏற்கனவே பார்த்தோம். 133 அதிகாரங்களில்
* முதல் 38 அதிகாரங்கள் - அறம் ( நன்றும் அதை சார்ந்த குணங்களும் )
* அடுத்த 70 அதிகாரங்கள் - பொருள் ( அறம் விளைவிக்கும் பொருளும், புற நெறிகளும் )
* கடைசி 25 அதிகாரங்கள் - காதல் நெறி, இன்பம்

இவை அகத்திலிருந்து புறத்திற்கு நம்மை இட்டுச் செல்லும் பாங்கை பார்க்கிறோம். ஒரு பெரிய பாத்திரம் உள்ளது. கீழேயிருந்து மேலே பல்வேறு வடிவங்களில் அமைந்துள்ளது - குடுவையை போல. அதில் தண்ணீர் ஊற்றினால் கீழே நிரம்பினால் தானே பிறகு மேலே நிரம்பும். அதுபோல் நம் வாழ்க்கை அறப்பண்புகளை நிறைவாக கடைபிடித்தால் தானே புறத்தில்(நிறுவனத்திலும், சமுதாயத்திலும் ) வெற்றிபெற்றிட முடியும். இந்த கருத்தை போன்றே எழுதபெற்று கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக சிறப்பாக விற்பனையாகி கொண்டிருக்கும் ஒரு புத்தகம் Steven Covey - '7 Habits of highly effective people'
http://www.amazon.com/exec/obidos/ASIN/0743272455/102-7999194-0380129

இப்புத்தகத்தில் உட்கருவே inside-out என்பதே !. அதுபோன்று அறம்-பொருள்-இன்பம் குறள் அமைப்பிலும் ஒரு தொடர்ச்சியை காண்பீர்கள் .

சரி... அறத்தின் 38 பாடல்களுக்கும் உள்ள தொடர்ச்சி(pattern ) பார்ப்போம். முதல் 4 அதிகாரங்களில் 3 அதிகாரமான கடவுள் வாழ்த்து, வான் சிறப்பு, நீத்தார்(பெரியோர்) பெருமை ஆகியவை ஒரு கோர்வையாக வரும் . இயற்கையின் மூன்று அடித்தளங்களாக காணலாம். இவற்றை அடித்தளமாக கொண்டு அமைவது 'அறன் வலியுறுத்தல்' .

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார். [ 1 : 10 ]

என்று கடவுள் வாழ்த்து முடிவதின் தொடர்ச்சியாக ..


வானின்று உலகம் வழங்கி வருதலால்
தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று [ 2 : 1 ]

என்று கடலுக்கும் வானுக்கும் தொடர்ச்சியை ( கற்பனையாக) உருவாக்கலாம்.

அதுபோல் ஒழுக்கு என்று முடியும் வான் சிறப்பு அதிகாரத்தில் இருந்து 3ம் அதிகாரமான 'நீத்தார் பெருமை' க்கு தொடர்பு படுத்த முடியும்.

நீரின்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வானின்று அமையாது ஒழுக்கு. [ 2: 10]

ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
வேண்டும் பணுவல் துணிவு. [ 3 : 1 ]


மேலும்,
அந்தணர் என்போர் அறவோர்மற்று எவ்வுயுர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான். [ 3 : 10]

சிறப்பீனும் செல்வமும் ஈனும் அறத்தின் ஊங்கு
ஆக்கம் எவனோ உயிர்க்கு [ 4 : 1]


இந்த தொடர்ச்சிகளை புரிந்துகொண்டால்

1 - கடவுள் வாழ்த்து
2 - வான் சிறப்பு
3 - நீத்தார் பெருமை
4 - அறன் வலியுறுத்தல்

என்று எண்களோடு அதிகாரங்களை நினைவு வைத்துக் கொள்ள முடியுமல்லவா ? இப்போது சென்ற இதழில் சொன்னதுபோல் , ஒவ்வொரு அதிகாரத்திலும் உள்ள குறள்களை ஒலி-ஒளி படமாக மனத்திரையில் பிடிக்க வேண்டும்.

படம் 1 : கடவுள் வாழ்த்து : 1 - 10 காட்சிகள்

படம் 2 : வான் சிறப்பு : 1 - 10 காட்சிகள்

என்று இந்த 4 அதிகாரங்களிலும் உங்கள் நேரத்திற்கு ஏற்ப மனப்பாடம் செய்யலாம். இப்போது ஒவ்வொரு அதிகாரத்தினுள்ளே அமைந்துள்ள கோர்வையை கண்டோமானால் இன்னும் எளிதுதானே !.

'கடவுள் வாழ்த்தில்' நான் அறிந்த கோர்வையை அடுத்த இதழில் சொல்வேன் !..

Tuesday, June 21, 2005

வணக்கம். திருக்குறள் தமிழ் மறை. பல மொழிகளில் பெயர்த்தாயிற்று. பற்பல உரைகளும் உண்டு.

நாம் பள்ளியில் சுமார் 100 - 150 குறள்கள் படித்திருப்போம். அதில் பலவற்றை மறந்திருப்போம். திருக்குறள் மூலம் எப்படி உங்களை கற்பனைத் திறனையும், நினைவாற்றலையும் வளர்த்துக் கொள்வது என்பதை இத்தொடரில் காண்போமா ? மேலும் எப்படி அனைத்து அதிகாரங்களும் அதன் குறள்களும் எப்படி தொடர்புடையதாய் அமைந்துள்ளது என்பதையும் அடியேன் கூற முயற்சிக்கிறேன்..

வாழ்க்கையில் வெற்றிபெற்ற மனிதர்களை பார்க்கிறோம். அவர்கள் அனைவரிடத்தும் பொதுவாக உள்ள இரண்டு குணங்கள் உண்டென்றால் அவை நினைவாற்றலும் கற்பனைத் திறனுமாகும். இந்த இரு திறன்களையும் திருக்குறளை மனனம் செய்வதன் மூலம் வாழ்வில் மகிழ்ச்சியும் வெற்றியும் நிறையும்.

நினைவாற்றலையும் கற்பனைத் திறனையும் வளர்க்க திருக்குறளை தேர்ந்தெடுக்க சில காரணங்கள் இதோ:

(1) 1330 குறள்களும் பத்தின்(10) தொகுப்பாக இருப்பது. மேலும் 133 அதிகாரகங்களும் ஒன்றோடு அன்று தொடர்புடையது.
(2) இரண்டு அடியில் சுருக்கமான அமைப்பு
(3) எல்லா நாட்டினருக்கும், எம்மதத்தினரும் பொதுவானது
(4) அன்றாட வாழ்வின் வழிகாட்டி .

மேலும் இம்முறைய ஆர்வமுள்ள எவரும் ( தமிழ் தெரியாதவர்களும்தான்) கற்றுக் கொள்ளலாம். எப்படி என்று பார்க்கலாமா ?


முதல் அதிகாரத்தில் ஆரம்பித்து கடைசி அதிகாரம் வரை வாரம் ஒன்றாக 10 குறள்களை மனப்பாடம் செய்யலாம். உதாரணமாக 10 வது அதிகாரம்( இனியவை கூறல்) மனப்பாடம் செய்கிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். முதலில் 10 - இனியவை கூறல் என்ற தொடரை ஒரு உயிரோட்டம் உள்ள படமாக கற்பனை செய்ய வேண்டும். என்னுடைய கற்பனை : காய்களும் கனிகளும் நிறைந்திருக்கும் ஒரு அழகிய மரம் . அம்மரத்தின் கீழ் ஒரு சான்றோர் மக்களிடம் இனிய நகைச்சுவையோடு உரையாற்றுகிறார். இன்னொரு பெரியவர் அந்த கூட்டத்தினரிடையே பொருட்களை வாரி வழங்குகிறார். அக்கூட்டத்தில் இருந்து சற்றுவிலகி மூன்றாமவர் கடுஞ்சொல் சொல்கிறார். இந்த கற்பனை முழுவதும் ஒலி-ஒளி வடிவான குறும்படமாக(திருக்குறள் குறும்படம் 10) அமைந்தால் ஞாபகம் வைத்துக் கொள்வது எளிதல்லவா ?

இப்போது இந்த 10 வது அதிகாரத்தில் உள்ள ஒவ்வொரு குறளையும் 91 - 100 என்று வரிசைப்படுத்தாமல் , 1 முதல் 10 வரை உள்ள எண்களாக மனப்பாடம் செய்யவேண்டும். உதாரணமாக 3ம் பாடலை மனப்பாடம் செய்ய..

முகத்தான் அமர்ந்து இனிதுநோக்கி அகத்தானாம்
இன் சொலினிதே அறம்.

என்ற குறளை மேலே சொன்ன குறும்படம் 10 இல் வரும் மூன்றாம் காட்சியாக அமைக்க வேண்டும். நான் அமைத்த காட்சி பேசும் அப்பெரியவரின் முகத்தை கவனிக்கிறோம். நிலாவின் குளிர்ச்சியுடன் ஒளிவீசுவதாக( மனோவியலார் 'Presence ' என்று இதை சொல்கிறார்கள் ) அமைந்துள்ளது. பேசும் போது கூட்டத்தின் ஒவ்வொருவரின் கண்களை இனிது நோக்குகிறார். அவர் பேசவில்லை. அவரின் மனம் பேசுகிறது. அவர் பேச்சை நன்று(அறமென) என்று கூட்டம் ஆமோதிக்கிறது.

இந்த 3ம் காட்சிக்கு முன்னாலும் பின்னாலும் உள்ள காட்சிகள் தொடர்புள்ளதாகவும் - நல்ல திரைப்படம் போல அமைய வேண்டும். இப்படி இந்த அதிகாரத்தில் 1 - 10 பாடல்களை அந்தந்த காட்சி மனதில் ஒட 5 முறை பாடினால் போதும் . " பாட்டா ? எனக்கு பாடத் தெரியாதே ! " என்று நீங்கள் சொல்வது கேட்கிறது.

திருக்குறள் உள்ளிட்ட அனைத்து தமிழ்ப் பாக்களும் பாடும் முறையில்தான் இயற்றியுள்ளார்கள். திருக்குறள் செப்பலோசையில் அமைந்த வெண்பா. தற்போது இராகம் என்றழைக்கப் படும் பண்டைய இசை அமைப்புக்கள் ( பண்கள் ? ) ஒவ்வொரு பாடலுக்கும் உண்டு. அவை என்ன என்பதை நாம் தொலைத்துவிட்டோம் . அவ்வளவே. இயல் வேறு இசை வேறா ???

இப்படி ஒலி - ஒளி அமைப்பில் பொருள் பொதிந்த கற்பனை காட்சியுடன் பாடலாக பாடி பழகினால் ஒரு வாரத்தில் ( நமது பணிகளின் இடையே) எளிதாக ஒரு அதிகாரத்தில் உள்ள 10 பாடல்களை மனனம் செய்யமுடியும் . 2004 ஆண்டு இறுதியில் இருந்து இந்த முறையில் 16 அதிகாரங்களை ( 160 குறள்கள் ) மனப்பாடம் செய்து வந்துள்ளேன்.

136 வது திருக்குறள் என்ன ? என்று நீங்கள் கேட்டால் என் மனம் 14வது குறும்படத்தை தேடும் . 1-2 நொடிகளில் 'ஒழுக்கமுடைமை' என்ற அந்த படம் ஓடத் தயாராகும். அப்படத்தில் 6வது காட்சி என்ன ? 2-3 நொடிகளில்

ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் இழுக்கத்தின்
ஏதம் படுபாக்கு அறிந்து .

என்று பாட முடியும். இப்படி சுமார் 5 நொடிகளில் எண்ணை சொன்னால் அந்த குறளையோ அல்லது குறளை சொன்னால் அந்த எண்ணையோ என்னால் கூறமுடியுமென்றால் உங்களாலும் முடியும் அன்றோ ?

மீண்டும் சந்திப்போம் ...