Tuesday, October 23, 2012

மெய்ப்பொருள் காண்பது அறிவு !

ஸ்டீவன் ஹாக்கின்ஸ் என்ற புகழ்பெற்ற அறிவியல் அறிஞரிடன் ‘கடவுள் இருக்கிறாரா ? ‘ என்ற கேள்வியை கேட்டார்கள். அவர் ‘ இயற்பியல் நெறிகள்’ தான் கடவுள் என்பதை நம்புகின்றேன். ஆனால் அதற்கும் இன்றைய மதங்கள் போதிக்கும் கடவுள் நெறிகளுக்கும் தொடர்பில்லை. என்றார் . நினைத்துப் பார்த்தால் இந்த பேரண்டத்தில் கோடானுகோடி கோள்களும் விண்மீன்களும் ஒழுங்காக செயல்படுகின்றன. இந்த இயக்கத்தை இன்றைய இயற்பியல் நெறிகளால் மட்டுமே விளக்கமுடியும் . அதுவும் ஓரளவிற்குதான் ! ஹாக்கின்ஸின் எல்லையில்லா , தொடர்ந்து விரிவடைகின்ற பேரண்ட கொள்கை(no-boundary cosmos) ஓர் உதாரணம் . இத்தகைய விளக்கங்களை சமய நெறிகளால் கொடுக்க முடியாது. அதுபோல் இன்னொரு முனையில், அணுத்துகள் இயக்கத்தை விளக்கவும் ஆராய்ச்சிகள் தொடர்கின்றன. பேரண்டத்தின் அனைத்து பொருள்களுக்கும் நிறை(mass)யை தரும் நுண்-துகள் ( Higgs-Boson Particle) கண்டுபிடிப்பு இன்னொரு உதாரணம். இயற்பியல் நெறிகள் முழுமையான தெளிவை தராமல் இருக்கலாம். ஆனால் அறிவியல் ஆராய்ச்சியின் வாயிலாக கடவுள் சார்ந்த கேள்விகளுக்கான விடையை உலகம் அறியும் நாள் வெகுதொலைவில் இல்லை. அதற்கு பிறகு மதம் வெறும் அடையாளமாகவும், கற்பனைக் கதைகளின்(mythology) தூண்களாகவும், சடங்குகளாகவும் மாறிவிடுமா என்பது தெரியவில்லை. குழந்தைகள் ஹாரி பாட்டர் கதைகள் படிப்பது போல் இராமயணக் கதைகளையும், விவிலிய கதைகளையும் படிப்பார்களா அல்லது மதம் தன்னுடைய ஆளுமையை இழந்து விடுமா என்று தெரியவில்லை ?


மெய்ப்பொருள் காண்பது அறிவு !

இந்த வார சனிக்கிழமை நான் பிறந்த கிராமத்தில் , நாம் ஏற்படுத்தியுள்ள அறிவகத்தில்( நூலகம்) நான்காம் ஆண்டு விழா நடைபெறுகிறது. அழைப்பிதழ் இதோ ..இந்த நூலகத்தில் 3000+ நூல்கள் இருக்கின்றன. கணினிகள் உள்ளன. வகுப்பறை, விளையாட்டுத் திடல் உள்ளது. மூட நம்பிக்கை, வாஸ்து, சோதிட வகை நூட்களும், திரைப்பட போதையூட்டுகின்ற பத்திரிக்கைகளுக்கும் இடம் இல்லை. இளைஞர்களும் சிறுவர்களும் மகளிரும் பெரிதும் பயன்பெறுகின்றனர்.