Saturday, June 26, 2010

குற்றம் புரியும் ஆளுமை..

14 வயதில் குழந்தைப் பெற்ற பள்ளி மாணவி - 2 ஆண்டுகளாக ஆசிரியர் மாணவியுடன் முறைகேடான உறவு ..
உதவியாளருடன் முறைகேடான உறவு.  செனட்டர் குடியரசு தலைவர் தேர்தலில் இருந்து விலகல்...
சிறுவர்களுடன்  ஓரினச் சேர்க்கை . கிருத்துவ பிஷப் மீது ஆதாரங்களோடு குற்றச்சாட்டு !
நடிகையுடன் பிரபல  மடத்தின் சாமியார் உல்லாசம் 

 இப்படிப்பட்ட செய்திகளை நாம் அன்றாடம் படிக்கின்றோம்.  அரசுப் பொறுப்பாளர்கள்,  ஆன்மீக குருக்கள்,  நிறுவன தலைவர்கள் முதல் பள்ளிக் கூட ஆசிரியர்கள் வரை, தன்னுடைய ஆளுமையில் உள்ளவர்கள் மேல் ஒருவித 'மயக்கும் வலிமை'  கொள்கிறார்கள்.   இது ஊக்கமாகவும் வாழ்வில் மேன்மை தரும் வலிமையாக இருந்தால் நலம் பயக்கும்.

ஆனால் அந்த வலிமையே முறைகேடாக வளரும் போது , விளைவுகள் விபரீதமாகும்.  இதையே கூடா ஒழுக்கமாக வள்ளுவம் எச்சரிக்கிறது.

வலியில் நிலைமையான் வல்லுருவம் , பெற்றம்
புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று . [  28 : 3 ]
{ வலிமை இல்லாதவனின் ஆளுமை , பசு(பெற்றம்) புலியின் தோலைப் போர்த்து மேய்வது போலவாகும். }

தவமறைந்து அல்லவை செய்தல் , புதல்மறைந்து
வேட்டுவன் புள்சிமிழ்ந் தற்று. [ 28 : 4 ]
{ ஆளுமை என்ற போர்வையில் மறைந்து தீயவை செய்தல் , புதற்றில் மறைந்து வேடன் , பறவை(புள்)யை பிடிப்பது போன்றதாகும் }


இத்தகைய 'தலைமை' இருக்கத்தான் செய்யும். எப்படி விழிப்புடன் இருப்பது ?

(1) ஒரே நபர் ஆளுமை கொள்ளாமல், அதிகாரப் பகிர்வும்(Balance of power) செயல்பாட்டு கூறுகள் அமைத்தல்(Seggregation of duties ) போன்றவற்றால் ஓரளவு இதை குறைக்கலாம். இது அனைத்துவிதமான அமைப்புகளுக்கும் பொருந்தும்.

(2) தீர்வு நம் கையில் -
கணைகொடிது ; யாழ்கோடு செவ்விது - ஆங்கன்ன
வினைபாடு பாலால் கொளல்.  [ 28 : 9 ]

வில்(கணை) பார்ப்பதற்கு அழகாக இருந்தாலும் செயலால் கொடிது ; யாழ் வளைந்து வளைந்து இருந்தாலும் இசை இன்பம் தர வல்லது . அதுபோல் ஆளுமை உள்ளவர்களையும் அவரவர்களின் செயலால் அறிய வேண்டும்.
அவர்களை  கண்டு மயக்கமோ,  கொண்டாட்டமோ தேவையில்லை !