Thursday, November 08, 2007

இடுக்கண்(துன்பம்) வருங்கால் நகுக - 1

புத்தர் துறவியாக வாழ்ந்த காலத்தில் நடந்த கதை இது. கிசாக்கோதமி என்ற பெண்ணின் ஒரே குழந்தை இறந்துவிட்டார். குழந்தையை இழந்த சோகம் தாயிற்கு. யாராவது தன் குழந்தையின் உயிரை மீட்டுத் தரமுடியுமா என்று பார்த்தோர் இடத்தெல்லாம் வேண்டினார். அனைவரும் கௌதம புத்தரை சென்று சந்திக்குமாறு கூறினர்.

அந்த தாயும் புத்தரிடம் சென்றார். வணங்கினார். "என் குழந்தையின் உயிரை மீட்கும் மருந்தை எனக்கு தரமுடியுமா?" என்றார் அந்த தாய்.

"உயிரை மீட்டுத் தரும் அருமருந்தை செய்து தருகிறேன். ஆனால் அதை செய்ய ஒரு கையளவு கடுகு வேண்டும். மேலும் குழந்தையோ, துணையோ, பெற்றோரோ, அல்லது அவர்கள் வீட்டு வேலையாளோ இறந்திராத குடும்பத்தில் இருந்து கைப்பிடி கடுகை கொண்டு வாருங்கள் " என்றார் புத்தர்.

கிசாக்கோதமியும் அவ்வாறே கொண்டுவருவதாக கூறி சென்றார். அந்த ஊரில் இருந்த வீடு வீடாக சென்று கேட்டார். இறப்பே இல்லாத ஒரு வீட்டையும் கண்டுபிடிக்க முடியவில்லை. இழப்பு என்ற துன்பம் தனக்கு மட்டுமில்லை என்றுணர்ந்த அந்த தாய் புத்தரிடம் மீண்டும் சென்றார்.

புத்தர், " நிலையாமை என்ற உண்மையை உணர்த்துவது இறப்பு-இழப்பு. அதை உணர்ந்தால் துன்பம் இல்லை" என்றார்.


துன்பத்தை மூன்று வகையாக பிரிக்கலாம்.
(1) இயற்கை அழிவுகள், முதுமை, இறப்பு போல தவிர்க்க முடியாதது ஒருவகை.
(2) பிறரால் உண்டாக்க படுவது. ஓரளவு தவிர்க்க கூடியது.
(3) நம்மால் உண்டாக்க படுப்பது. பெரும்பாலும் தவிர்க்க கூடியது.


இந்த மூன்று வகை துன்பங்களையும் எப்படி எதிர்கொள்வது என்று திருக்குறள் என்ன சொல்கிறது பார்க்கலாம்.

தவிர்க்க முடியாத இயற்கை துன்பங்களை எதிர்கொள்வது எப்படி ?
இறப்பு, முதுமை போன்ற இயற்கையான துன்பங்கள் நம் அனைவருக்கும் நிகழ்பவை. வாழ்க்கை 'நிலையற்றது' என்பதை நமக்கு உணர்த்துபவை. நிலையாமை(அதிகாரம் 34) இந்த பேருண்மையை நமக்கு விளக்குகிறது.

நாளென ஒன்றுபோல் காட்டி உயிர் ஈரும்
வாளது உணர்வார்ப் பெறின். [ நிலையாமை 34: 4 ]

இன்றைய நாள் நேற்றைய போலதான். நாளையும் இன்றுபோல் இருக்கும் என்று நம்மை எண்ண வைப்பது, இயற்கை இழப்புகளை எதிர்கொள்ளும் போது துன்பங்களை உண்டாக்கும். மேற்கத்தய முறைகளில், இறப்பு போன்ற இழப்புகளின் போது மன ஆலோசனைகளை(counselling) வழங்குகிறார்கள். அல்லது ஒருவர் இறக்கப் போகிறார் என்றார் அவருடைய நெருங்கிய உறவினர்களுக்கு அவர்கள் செய்ய வேண்டிய கடமைகளையும் சொல்கிறார்கள். ஆனால் இது மட்டும் இத்தகைய துன்பங்களை எதிர்கொள்ள உதவுமா?

(அ) வாழ்க்கை(உடல், செல்வம், அழகு, ..) நிலையற்றது என்ற உண்மையை உணர்தல்
(ஆ) வாழ்க்கை நிலையற்றது ஆயினும் நல்ல செயல்களை செய்தல்.
நாச்செற்று விக்குள் மேல்வாராமுன் நல்வினை
மேற்சென்று செய்யப் படும். [ நிலையாமை 34 : 5]

நா பேசவராது அடங்கி, சுவை அறிதல் போய், விக்குள் மேலெழுந்து தோன்றுவது போன்ற வாழ்க்கையின் கடைசி கட்ட அறிகுறிகள் தோன்றும் முன் நல்ல செயல்களை மேற்கொள்வோம்.

(இ)செல்வத்தின் பயன் பிறர்க்கு உதவுதல் என்று நினைத்து செயல்படுதல்.
அற்கா இயல்பிற்றுச் செல்வம் - அதுபெற்றால்
அற்குப ஆங்கே செயல். [ நிலையாமை 34 : 3 ]

செல்வம் பெற்றவர்கள் அது நிலை இல்லாதது என்று உணர்ந்து நிலைபெறுகின்ற நல்ல செயல்களை செய்ய வேண்டும்.

வாரன் பஃபட்(Warren Buffett) என்ற உலகின் பெரிய பணக்காரர்களுள் ஒருவராக கருதப்படுபவர் தன்னும் செல்வத்தின் பெரும்பகுதியை (சுமார் 31 பில்லியன் அமெரிக்கன் டாலர்) கொடையாக அளித்துள்ளார் என்பது இவர் நிலையாமையை உணர்ந்து செயல்படுகிறார் என்பதை காட்டுகிறது. வாழ்க வாரன் பஃபட் !

இறப்பு போன்ற இயற்கை அழிவுகளால் வரும் துன்பங்களை எதிர்கொள்ளும் சிறந்த முறையும் இதுதான் !

அடுத்த பதிவில் அடுத்த இரண்டு வகையான துன்பங்களை பற்றியும் பார்ப்போம்.

பேரன்புடன்,
கரு.மலர்ச் செல்வன்













Sunday, September 09, 2007


கலங்கரை விளக்கம்


அந்த துறைமுக நகரத்தின் கலங்கரை விளக்கம்(light house) புகழ் பெற்றது. பழமையானதும் கூட. அங்கு பணிபுரியும் இளங்கோவின் அன்றாட வேலை 12 பேர் கொண்ட குழுவுடன் அந்த விளக்கத்தின் கண்ணாடிகளையும் விளக்குகளையும் துடைத்து வைப்பது தான். கப்பல்களுக்கு சரியான வழிகாட்ட வேண்டுமல்லவா? இளங்கோ தன் குழுவினர்க்கு சொல்வது... ' விளக்கு கண்ணாடியில் சிறு தூசியாக இருந்தாலும் அலட்சியமாக இருக்க கூடாது. கப்பல்களுக்கு ஆபத்தாக முடியும் அல்லவா !'
மேலே சொன்ன உதாரணத்தில் இவற்றை பொருத்திப் பாருங்கள் :
கலங்கரை விளக்கம் --> குடி( Family or Unit of society with family values)
வெளிச்சம் --> குடிமையின் கடமை
மாசு(அழுக்கு) --> சோம்பல்
குடியென்னும் குன்றா விளக்கம் மடியென்னும்
மாசூர மாய்ந்து கெடும் . [ மடியின்மை 61 : 1 ]
சோம்பல் என்னும் மாசு ஏற்பட, குடி என்னும் குன்றா விளக்கம் மாய்ந்து கெட்டு விடும்.
குன்றா களங்கரை விளக்கமாய், நமது குடி ஒளியட்டும் !
அன்புடன்,
கரு.மலர்ச் செல்வன்

Friday, July 27, 2007

உ.. ஊ

அழகிய குளம். ஆழமான நீர். தாமரை இலை தண்ணீர் மேல் பசுமையாக உள்ளது. அதற்கு மேல் அழகிய பூ மலர்ந்துள்ளது. தண்ணீர் இன்னும் 5 அடி உயர்ந்தாலும், தாமரையும் தன்னை உயர்த்தும் அதிசயத்தை பார்க்கிறோம்.
இந்த இயற்கை சொல்லும் வாழ்வியல் தத்துவத்தை கவனிக்கலாம்.

தாமரை வாழ்வின் 'உயர்வை' குறிக்கிறது. பல்வேறு துறைகளில் வெற்றிபெற்ற மனிதர்களை பார்க்கிறோம். அவர்கள் உயர்வை வியக்கிறோம். ஆனால் அந்த உயர்நிலைக்கான ஆதாரத்தை ஆராய்கின்றோமா? தாமரை மலரின் உயர்வுக்கு சேற்றில் புதைந்துள்ள விதையும், நீர்நிலையின் உயரத்துக்கு ஏற்ப மாறுகின்ற தண்டும் காரணமாக அமைகிறது அல்லவா? அதுபோல் வாழ்வின் உயர்விற்கு விதை போன்ற உள்ளமும், வேர் போன்ற உறுதியும், தண்டை போன்ற ஊக்கமும் அமைவதால் தாமரை உயர்ந்துள்ளது.

வெள்ளத் தனைய மலர்நீட்டம் - மாந்தர்தம்
உள்ளத் தனையது உயர்வு
. [ ஊக்கமுடைமை 60 : 5 ]


என் கிராமத்து ஆசிரியர் சிலேட்டில் எழுதப்பழக்கும் போது முதலில் 'உ' என்ற எழுத்தை மேலே எழுதி பிறகு எழுதுவார்.

'' என்பது உயர்வையும், அதற்கு வித்தான உள்ளத்தையும், நிலைநிறுத்தும் உறுதியையும் குறிக்கும்.


உள்ளம்:
இதற்கு 'Intent' என்பதே சரியான மொழிப்பெயர்ப்பாக இருக்கும் என்று நினைக்கிறேன். உள்ளத்தில் ஒன்றை நினைக்கின்றோம் என்றால் அதை நாம் சற்றே குறையாமல் அடைக்காத்தால்(பெண் கோழி முட்டையை காப்பதுபோல், ஆண் பெங்குயின் தன் குஞ்சை வாரக்கணக்காக காப்பதுபோல்) , நாம் நினைப்பது அப்படியே நடக்கும்.

உள்ளியது எய்தல் எளிதுமண் - மற்றும்தான்
உள்ளியது உள்ளப் பெறின். [ பொச்சாவாமை 54 : 10 ]

Achieving what you intented is easy, if you preserve the power of the intention as it was !


உறுதி:

அக்கால போர்களில் ஆண் யானைகளை(களிறு) படையின் முன்னால் அனுப்புவது வழக்கமாம். ஏனென்றால் எதிரியின் அம்புகள் வேகமாக பாய்ந்து ஆழமாக உடம்பில் பதிந்தவிட்டபோதிலும், அந்த யானைகள் வீழாது உறுதியாக நிற்குமாம்.

சிதைவிடத்தும் ஒல்கார் உரவோர் - புதைஅம்பின்
பட்டுப்பாடு ஊன்றும் களிறு
. [ ஊக்கமுடைமை 60 : 7 ]

{உரம் - ஊக்கம் ; சிதைவு - அழிவு ; ஒல்கார்- தளரார் ; ஊன்று - உறுதி ; களிறு - ஆண் யானை }


ஊக்கம்:
உறுதிக்கு யானையை உதாரணம் காட்டும் வள்ளுவம், ஊக்கத்துக்கு எதை உதாரணம் காட்டுகிறது?

யானை பெரியது ; கூர்மையான தந்தங்களை உடையது. இருந்தாலும் புலி தாக்கினால் அந்த பெரிய யானையும் அழியும் !

பரியது கூர்ங்கோட்டது ஆயினும் யானை
வெரூஉம் புலி தாக்குறின்
. [ ஊக்கமுடைமை 60 : 9 ]

{பரியது - பெரியது ; கோட்டு - தந்தம் ; வெரூஉம் - அழியும் }
ஊக்கம் என்பதை உரம் என்றும் சொல்லலாம்.


உ - உள்ளம், உறுதி, உரம், உயர்வு

ஊ - ஊக்கம்

இக்குறள்களை நாம் மந்திரமாக ஓதினால் வாழ்வில் உயர்வு பெறுவது உறுதி.


அன்புடன்,
கரு.மலர்ச் செல்வன்

Tuesday, July 03, 2007

அறிவா ? அழிவா ?

“அய்யா, குழப்பமாக இருக்கிறதே” என்றான் நகுலன்.

“ நல்லது. குழப்பமே தெளிவிற்கு தொடக்கம். என்ன குழப்பம் ?” என்றார் ஆசிரியர் ஞானம்.

நகுலன் அருகில் உள்ள நகரத்தில் மருத்துவம் படிக்கும் மாணவர். வார விடுமுறைகளில் ஆசிரியர் ஞானத்தின் வீட்டிற்கு தவறாக சென்று விடுவான். ஞானம் அவனின் பள்ளிக்கூட ஆசிரியர். அவர் சொல்லும் திருக்குறள் கதைகள் மிகவும் பிரபலம். நடித்து, குரல் ஏற்ற இறக்கத்துடன் கதை சொல்லும் நடையே தனி. ஆசிரியர் ஞானம் நகுலன் அடிக்கடி செல்வதற்கு இன்னொரு காரணமும் உண்டு. அதை பற்றி பிறகு பேசுவோம்.

“அறிவை பற்றி சற்று விளக்கமாக கூறுங்கள் அய்யா. இதுதான் என் குழப்பத்துக்கு காரணம் ” என்று பேச்சை மெல்லமாக ஆரம்பித்தான்.

“அறிவு நம் பிறப்பில் இருந்து இறக்கும் வரை நம்மை பாதுகாக்கும் கருவி. எவ்வித பகையும் அதை அழிக்க முடியாது” என்னும் புதிருடன் திருவள்ளுவரே அறிவை அறிமுகப்படுத்துகிறார்.

அறிவு அற்றம் காக்கும் கருவி; செறுவார்க்கும்
உள் அழிக்கல் ஆகா அரண்.
[ அறிவுடைமை 43 : 1 ]
[ அற்றம் – துன்பம் ; செறுவார் – பகைவர் ; அரண் – பாதுகாப்பு ]

“அத்தகைய அறிவு அனைவருக்கும் பொது என்றால், அறிவுடையோர் அறிவிலாதவர் என்று கூறுவது சரியில்லைதானே?” என்றான் நகுலன்.

“ஆம். அறிவு அனைவருக்கும் பொதுதான். அது இயற்கை. ஆற்றை ஒட்டிய மணற்கேணி உள்ளது. மேலே பார்க்கும் போது தண்ணீர் குழம்பியோ, அல்லது மாசு படிந்தோ இருக்கும். ஆனால் அந்த மணற்கேணியை தோண்ட தோண்ட தெளிந்த நீர் ஊறுகின்றது. தண்ணீர் சுவையாக உள்ளது. அதுபோல் கல்வி என்னும் பகுத்தாய்வு ஆழம் செல்ல செல்ல அறிவு என்னும் ஊற்று பெருகும்”.
தொட்டனைத்து ஊறும் மணற்கேணி – மாந்தர்க்குக்
கற்றனைத்து ஊறும் அறிவு.
[ கல்வி 40 : 6 ]


இத்தகைய அறிவே அழிவாகவும் ஆவதற்கு இரண்டு வழிகள் உள்ளன. ஒன்று சிற்றினத்தோடு சேர்தல். இன்னொன்று தொடர்ந்த வறுமை.

நிலத்தியல்பால் நீர்திரிந்து அற்றாகும் – மாந்தர்க்கு
இனத்தியல் பாகும் அறிவு.
[ சிற்றினம் சேராமை 46 : 2 ]
[ திரிந்து – மாறி ; அற்றாகும் – அந்த தன்மையாகும் ]
“தீயனத்தோடு ஒருவர் சேர்ந்தால் , அறிவே மாறி அழிவாகும் !” என்றார் ஞானம்.


பொச்சாப்பு கொல்லும் புகழை – அறிவினை
நிச்ச நிரப்பு கொன்றாங்கு.
[ பொச்சாவாமை 54 : 2 ]
“கடமையை மறத்தல் புகழைக் கொல்லும். தொடர்ந்த பட்டினி(வறுமை) அறிவினை அழிக்கும்.

நகுலனுக்கு அறிவை பற்றி தெளிவு வந்தவுடன், மின்னல் கீற்று ஒன்று அழகிய பெண் வடிவில் வாசலை கடப்பதை பார்த்தான் ! ஆசிரியர் ஞானம் அறிவு மட்டுமல்ல ஓர் அழகும் 'பெற்றவர்' என்பதை அறிந்தான் நகுலன்.



அன்புடன்,
கரு.மலர்ச் செல்வன்

Saturday, June 16, 2007

"மன்னா, நமது பகைவன் வெல்வது உறுதி" என்றான் அங்கு அவசரமாக வந்த உளவாளி.

" ஏன்? நம் பகைவனின் படை பலமாக உள்ளதா? " கேட்டான் அரசன்.

அதற்கு உளவாளி, " இல்லை மன்னா. படைபலம் குறைவுதான். ஆனால் தாங்களின் பலவீனத்தை அறிந்துகொண்டு அழகிய பெண்களை, படையின் முன்வரிசையில் அனுப்புகிறான், பகைவன்!"

இது ஆனந்த விகடனில் சில மாதங்களுக்கு முன் படித்த துணுக்கு. வரலாற்றில் அரசுகள் வீழ்வதற்கு இதுபோன்ற பலவீனங்கள் முகாந்திரமாக இருந்ததை பார்க்கிறோம்.

இன்றைய அரசுகளிலும், நிறுவனங்களிலும் நினைத்ததை சாதிக்க நினைப்பவர்கள் குறுக்கு வழியாக நினைப்பதும் 'அவரின் பலவீனம் என்ன? எப்படி 'கவனிக்கலாம்' ?' அன்றோ?

காதல காதல் அறியாமை உய்க்கிற்பின்
ஏதில ஏதிலார் நூல். [ குற்றம் கடிதல் - 44 : 10 ]
{ உய்த்தல் - நுகர்தல் ; ஏதிலார் - பகைவர் ; நூல் - சூழ்ச்சி }

ஒருவர் தான் மயங்கி விரும்பும் ஒன்றை தன் பகைவருக்கு தெரியாமல் நுகர்ந்தால் மட்டுமே பகைவனின் சூழ்ச்சியில் இருந்து தப்ப முடியும். அத்தகைய பலவீனங்கள் இல்லாமல் இருப்பதே தலைவனுக்கு அழகு.


அன்புடன்,
கரு.மலர்ச் செல்வன்

Sunday, May 27, 2007

யாரை நினைத்துக் கொள்ள வேண்டும்?



ஆனந்தனை பற்றி உங்களிடம் சொல்லியாக வேண்டும். கல்லூரியில் என்னுடன் ஒன்றாக படித்தவன். வசதியான குடும்பத்து பையன். கோவை பக்கத்தில் உள்ள பொறியியல் நிறுவனம் சொந்தம் அவன் குடும்பத்துக்கு. ஆனாலும் எங்களிடம் இயல்பாக பழகியவன்.

கல்லூரி முடித்து சுமார் 15 ஆண்டுகள் கழித்து, கோவையில் ஆனந்தனை அவனின் நிறுவன தலைமையகத்தில் சந்தித்தேன். 'மேலாண்மை இயக்குநர்' என்று கூறியது நுழைவாயில். பலவற்றை நினைவு கூர்ந்தபின், அந்த அறையில் மாட்டியிருந்த 4 தலைமுறை(முன்னோர்) புகைப்படங்களை பற்றி கேட்டேன். அவன் புன்முறுவலுடன், " என் அப்பா இந்த பொறுப்பை என்னிடம் கொடுக்கும்போது ஆனந்தா, மூன்று தலைமுறைகளுக்கு முன் நாம் நிறைய நூற்பாலைகள், விவசாயத் தோட்டங்கள் என்று செல்வ செழிப்புடன் இருந்தோம். ஆனால் என் தாத்தாவும், அப்பாவும் குடிப் பழக்கத்தாலும், சூதாட்டத்தாலும் பெரும்பான்மையான சொத்துக்களை இழந்தனர். இன்று நம்மிடம் விஞ்சியிருப்பது இந்த தொழிற்சாலை மட்டும். அளவற்ற புற-மகிழ்ச்சியை மனம் நாடும் போது அவ்வாறு கெட்டவர்களை நினைத்துக் கொள் என்றார்.

இகழ்ச்சியின் கெட்டாரை உள்ளுக - தாம்தம்
மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து. [ பொச்சாவாமை 54 : 9 ]
( உள்ளுக - நினைக்க ; மைந்து - விருப்பம் )

உண்மைதானே.செல்வமும் புகழும் வந்தாலே உடனே புற-மகிழ்ச்சியில் ஈடுபட தோன்றும். அப்போது நம்முடைய கடமைகளை மறப்போம். வரலாற்றை புரட்டிப்பார்த்தால் எத்துணை எத்துணை சான்றுகளை பார்க்கலாம்!



அன்புடன்,
கரு.மலர்ச் செல்வன்

Tuesday, May 01, 2007

தலைவனும் வியூகமும் - 1

நாட்டின் தலைவரென்றாலும் தொழில் நிறுவனத்தின் தலைவர் என்றாலும் வியூகம் அமைத்து செயல்படுவது அவசியம். புதிய பொருள் அறிமுகம், ஒரு நாட்டின் மீது போர் தொடுப்பது, புதியதொரு கல்வி திட்டத்தை அறிமுகப் படுத்துவது என்று எத்தகைய செயல்வகை(Strategic Initiative) வெற்றிக்கு நல்ல வியூகம் அவசியமாகிறது.

வியூகம் என்பது வலிமை , காலம், இடம் ஆகியவற்றின் கூட்டுதான். வலிமை என்றதும் எனது நினைவிற்கு வருவது வண்டியின் அச்சு, பெரிய கட்டடத்தின் கட்டுமான தூண்கள். ஒரு வண்டியில் எவ்வளவு பொருளை ஏற்றிச் செல்லலாம், எவ்வளவு வேகமாக செல்லலாம் என்பதெல்லாம் அந்த அச்சின் ஊடே ஓடும் விசைகளை அளவிட்டு சொல்லலாம் அல்லவா?

ஒரு பெரிய வண்டி உள்ளது. மயில் தோகை எவ்வளவு தக்கை - எடையே இல்லாதது. அந்த வண்டியில் 5 டன் மயில் தோகைகள் ஏற்றப்பட்டுள்ளது. வண்டி அதை தாங்கிக் கொண்டுள்ளது. இன்னும் ஒரே ஒரு மயில்தோகைதானே என்று அதில் ஏற்றினால் வண்டியின் அச்சு முறிந்து விடுகிறது.

பீலிப்பெய் சாகாடும் அச்சுஇறும் அப்பண்டம்
சால மிகுத்துப் பெயின். [ வலி அறிதல் 48 : 5 ]
( பீலி - மயில் ; சால - அதிகம் )

வண்டியின் அச்சுக்கு சொல்லும் நியதியை நாட்டிற்கும், நிறுவனத்திற்கும், வீட்டிற்கும் பொருந்தும் அல்லவா?

Saturday, March 10, 2007

செயல் என்பதை task என்று கொள்ளலாம். செய் என்பதே ஜெய் என்று வடமொழி சொல்லாயிருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். ஒன்றுக்கொன்று தொடர்பு உள்ள செயல்களின் தொகுப்பு செயல்வகை. செயல்வகை என்பதின் இணையான சொல் initiative.

தொழில், அரசு மற்றும் இலாப நோக்கமற்ற அமைப்புக்களின் தலைவர்கள் தத்தம் அமைப்புகளை பெருக்கும் நோக்கில் புதிய செயல்வகைகளை மேற்கொள்வது இன்றியமையாதது.

உங்களையெல்லாம் பெரியதோர் நிறுவனத்தின் இயக்குநர்கள் கூட்டத்திற்கு(board meeting) அழைத்து செல்கிறேன். அங்கே 7 இயக்குநர்கள் கூடியுள்ளனர். அந்நிறுவனத்தின் தலைவர்(CEO) புதிய செயல்வகை ஒன்றை அவர்கள் முன் வைக்கின்றார். அந்த முயற்சி குறித்த அவரின் கனவு பற்றியும், அதற்காக எவ்வளவு செலவு செய்ய வேண்டும் என்பதையும் விளக்குகிறார். புதிய வகையை செயல்படுத்த இரண்டு ஆண்டுகள் ஆகும். அதனால் விளையும் பயனோ குறைவு! மேலும் அந்த தலைவரின் அனுமானத்தை வைத்துத்தான் இத்திட்டத்தை அவர் வடிவமைத்திருக்கார் என்பது அதை ஆராயும் போது இயக்குநர்களுக்கு தெரியவருகிறது.

அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும்
ஊதியம் சூழ்ந்து செயல் . [ தெரிந்து செயல்வகை 47 : 1 ]
[ புதிய முயற்சியால் ஆவதையும்(+++), அழிவதையும்(----) ஆய்ந்து, நிகரை(nett) கணக்கிட்டு செயல்பட வேண்டும் ]

அதுமட்டுமா? உங்கள் நிறுவனங்கள் மேற்கொள்ளும் சில செயல்வகைகள் மேலோட்டமாக பார்க்கும் போது இலாபமாகவும் பயன் உள்ளதாகவும் தோன்றும். ஆனால் அவை சிலரை முன்னிருத்தவோ, தான் என்ற அகந்தைக்கு உணவாகவோ அமைவதை பார்க்கிறோம்.

ஆக்கம் கருதி முதலிழக்கும் செய்வினை
ஊக்கார் அறிவு உடையார். [ தெரிந்து செயல்வகை 47 : 3 ]
[வருமானத்தை எண்ணி முதலுக்கு மோசம் செய்யும் செய்வினைகளை அறிவுடையவர்கள் செய்ய மாட்டார்கள் ]

அரசாட்சி செய்வோரும், நிறுவன தலைவர்களும் இதை நினைவில் கொண்டால் நல்லது அல்லவா?


அன்புடன்,
கரு.மலர்ச் செல்வன்