Thursday, June 11, 2009

அல்லல் பட்டு ஆற்றாது அழுத கண்ணீரை துடைப்போம்...


ஈழத்து தமிழர்கள் பல ஆண்டுகளாக உரிமைப்போர் நடத்து வருகின்றனர்.  அதிலும் கடந்த 6 மாதங்களாக நடைப்பெற்ற துயரங்கள் வாழ்நாளில் மறக்குமா? உலக வரலாற்றில் இல்லாத அளவிற்கு தீக்குளிப்பு, உண்ணாநோன்பு, போராட்டம் என்று பல நடந்தும் , இலங்கை அரசு மிகப்பெரிய வன்முறையை நடத்தி உள்ளது.  தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கை என்ற பெயரில் , ஒரு மிகப்பெரிய நாடகத்தை இலங்கை அரசு அரங்கேற்றி உள்ளது.

300,000க்கும் மேற்ப்பட்ட மக்கள் திறந்தவெளி சிறைச்சாலையில் போதிய உணவு, மருத்துவ, இருப்பிட வசதிகள் இல்லாமல் கைதிகளாக இருக்கின்ற அவலநிலையை நினைக்கும்போது நெஞ்சு பதைக்கிறது. இந்த வடக்குப் பகுதியை தவிர மற்ற இடங்களில் உள்ள தமிழர்கள் முழு உரிமையுடன் இருக்கிறார்களா ? ஊமைகளாகவும், உரிமைகளை இழந்த அடிமைகளாகத் தான் வாழ்கின்றனர். நமது குழந்தைகள் பள்ளிக் கூடங்களுக்கு செல்கையில் - ஈழத்தில் 2 தலைமுறைகள் முறையான கல்வியை பெறாமலே இருக்கின்ற இழிநிலையை என்ன சொல்ல ? நாம் குடும்பத்தோடு வயிறாற உண்ணும்போது ,  பட்டினிக் கொடுமையில் வாடும் எண்ணற்ற குடும்பங்களின் நிலை ?  சுதந்திர சுவாசத்தை நாம் அனுபவிக்கும்போது - அடிமைகளாய் வாழ்வதை தவிர எந்த உரிமையும் இல்லாத ஒரு இனத்தை பற்றி எண்ணும்போது - கொடுங்கோன்மை உருவகமாக இலங்கை அரசு இருப்பதை பார்க்கிறோம்.

சமீபத்தில் ஓய்வு பெறுவதற்கு முன் இலங்கையின் தலைமை நீதிபதி , வன்னியில் உள்ள அவல நிலையை கண்டு 'ஒன்றும் செய்ய முடியாததாக' பேசியுள்ளார். தனது இயலாமையை நினைத்து வருந்தியுள்ளார்.
சரி தீவிரவாதத்தை ஒழித்து வாரங்கள் ஆயிற்று. இலங்கை அரசு பன்னாட்டு தொண்டு நிறுவனங்களை அப்பகுதிக்கு அனுமதிக்க வேண்டியது தானே ? என்ன கொடுமை ?  வெற்றி பெற்ற ஆணவத்தில் சிங்கள அரசினர் திளைக்கலாம். உலக நாடுகளை ஏமாற்றி விட்டதை நினைத்து பெருமை படலாம். ஆனால்....

அல்லல்பட்டு ஆற்றாது அழுதகண்ணீர் அன்றே
செல்வத்தை தேய்க்கும் படை. [ கொடுங்கோன்மை 56 : 5]
(துன்பப் பட்டு அதனை பொறுக்காமால் சிந்தும் கண்ணீர் - எந்தவோர் பேரரசையும் அழிக்கும் படையாகும்)

நாம் என்ன செய்யலாம் ?

1 comment:

Anonymous said...

வேரென்ன,
எப்போதும் போல வேடிக்கை பார்க்க வேண்டியதுதான்..........