Tuesday, January 20, 2009

சனவரி 19-20, 2009


திருக்குறள் தோட்ட்த்தில் பூத்த மலர்கள்

அமெரிக்க வரலாற்றில் சனவரி 20, 2009  ஒரு பொன் நாள்.
அரை நூற்றாண்டுக்கு முன்பு வரை கறுப்பின மக்களை அடிமைகளாக கருதிய இந்த நாடு இன்று ஒபாமாவை தனது தலைவனாக எற்றுக் கொண்டுள்ளது. 50 ஆண்டுகளுக்கு முன் ஒபாமா ஓர் உணவகத்திற்கு சென்றிருந்தால்(அவர் அப்போது பிறந்திருக்கவில்லை), மற்றவர்களுடன் சரிசமமாக அமர்ந்து உண்ணும் சமத்துவ நிலை கூட அன்றில்லை.  இந்த சுதந்திர நிலைக்கு வழி அமைத்தவர் மார்ட்டின் லூதர் கிங் . ஆண்டுதோறும் சனவரி 19 , கிங் அவர்களின் நினைவு கூறும் நாளும் கூட.

வரலாற்றை புரட்டிப் பார்த்தால் மார்ட்டின் லூதர் கிங் மற்றும் அவர் ஆசான் ஹாவர்டு ட்ரூமன் (http://en.wikipedia.org/wiki/Howard_Thurman) இருவரும் அண்ணல் காந்தியடிகளின் அகிம்சை கொள்கையால் எவ்வாறு ஈர்க்கப் பட்டு – உந்த பட்டார்கள் என்பதை அறியலாம். இவர்களின் அற போராட்டங்களின் வெற்றிக் கனியாக ஒபாமாவின் தேர்வை கூறலாம்.தென் ஆப்பிரிக்காவிலும் காந்தியடிகளின் தொண்டு நாம் அறிந்ததே . உரிமைகள் எதுவும் இல்லாமல் உழன்று கொண்டிருந்த தென் ஆப்பிரிக்க இந்திய தொழிலாளர்களுக்கான அற போராட்ட்த்தில் 21 ஆண்டுகள் காந்தியடிகள் போராடினார். அதில் குறிப்பாக 1906- 1914 ஆம் ஆண்டுகளில் ‘ டால்ஸ்டாய் பண்ணை’ (Tolstoy Farm) என்று ஒன்றை அமைத்து தமது அறக் கொள்கைகளை நடைமுறை படுத்தும் கள ஆராய்ச்சிகளை அங்கு செய்தார். இந்த பண்ணை ஓர் சமத்துவ புரமாக அமைந்தது. கிருத்துவர்கள், இசுலாமியர்கள், இந்துக்கள் வசித்தார்கள். குஜராத்தி, இந்தி, தமிழ், ஆங்கிலம் பேசிய 80 குடும்பங்கள் இந்த பண்ணை சமத்துவ புரத்தில் குடியிருந்தனர். இந்த பண்ணை அமைக்க காந்தியடிகளுக்கு வித்தாக அமைந்தது இரசியாவின் தத்துவ ஞானி இலியோ டால்ஸ்டாய்(Leo Tolstoy) புத்தகமும்(Kingdom of God is within You)  அவர் தொடர்பும் தான் .
குறிப்பாக 1909 ஆம் ஆண்டில் டால்ஸ்டாய் ‘இந்துக்கு ஓர் கடிதம்’ என்ற தலைப்பில் திருக்குறள் ‘இன்னா செய்யாமை’ அதிகாரத்தில் இருந்து

சிறப்பீனும் செல்வம் பெறினும் பிறர்க்கின்னா

செய்யாமை மாசற்றார் கோள். [ 32 : 1]
{ The aim of the sinless One consists in acting without causing sorrow to others, although he could attain to great power by ignoring their feelings. }


கறுத்தின்னா செய்த அக்கண்ணும் மறுத்தின்னா
செய்யாமை மாசற்றார் கோள். [32 :2 ]
{ The aim of the sinless One lies in not doing evil unto those who have done evil unto him.}செய்யாமல் செற்றார்க்கும் இன்னாத செய்தபின்
உய்யா விழுமம் தரும். [ 32 : 3]
{ If a man causes suffering even to those who hate him without any reason, he will ultimately have grief not to be overcome.}


இன்னா செய்தாரை ஒறுத்தல் – அவர்நாண
நன்னயம் செய்து விடம் [ 32 : 4]
{ The punishment of evil doers consists in making them feel ashamed of themselves by doing them a great kindness.}


அறிவினான் ஆகுவது உண்டோ , பிறிதின்நோய்
தந்நோய்போல் போற்றாக் கடை. [ 32 : 5 ]
{ Of what use is superior knowledge in the one, if he does not endeavour to relieve his neighbour's want as much as his own? }பிறர்க்கு இன்னா முற்பகல் செய்யின், தமக்கின்னா
பிற்பகல் தாமே வரும். [ 32 : 6]
{ If, in the morning, a man wishes to do evil unto another, in the evening the evil will return to him.}

[ அடைப்புக்குள் இருக்கு ஆங்கில மொழிபெயர்ப்பு , டால்ஸ்டாய் கடிதத்தில் இருந்து அப்படியே].  அந்த கடிதத்தின் முழு படிவம் இதோ..காந்தியடிகளின் அகிம்சை போராட்டங்களுக்கு வித்தாக அமைந்தது டால்ஸ்டாயின் கடிதம்.  திருக்குறள் வாழ்வியல் நெறிகளை கற்றுணர்ந்து தென் ஆப்பிரிக்காவிலும், இந்தியாவிலும் வெற்றிக் கண்டார்.

காந்தியடிகளின் ஆப்பிரிக்க போராட்ட்த்தின் பல ஆண்டுகளுக்கு பின் நெல்சன் மண்டேலா தீவிரவாத விடுதலையில் தன்னை ஈடுபடுத்தி கொண்டவர், பின்னர் காந்தியின் அகிம்சை/ஒத்துழையாமை கொள்களை பின்பற்றி பல ஆண்டுகள் அறப் போராட்டங்கள் மூலம் தென்னாப்பிரிக்காவின் இனவிடுதலையை முழுமை செய்தார் என்பது வரலாறு சொல்லும் (http://www.tolstoyfarm.com/mandela_on_gandhi.htm)இப்படி இந்திய, தென் ஆப்பிரிக்கா, மற்றும் அமெரிக்காவில் கடந்த 100 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்ற அறபோராட்ட வெற்றிகளுக்கு வித்திட்டவர் அண்ணல் காந்தியடிகள் என்றால், அத்தகைய வித்தின் கருவாக அமைந்தது திருக்குறள் என சொல்லலாம். 


இன்றும் உலகம் முழுவதும் இன விடுதலைப் போராட்டங்கள் தொடர்கின்றன. தமிழீழ விடுதலைப் போராட்டம் 40க்கும் மேற்பட்ட ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.  அங்கு அமைதி வழியில் தமிழின மக்கள் விடுதலை பெற்றிட வேண்டும்.

அமைதி சூழ்க !

No comments: