Friday, January 27, 2006
சான்றோர் என்று மற்றோரால் அங்கீகரிக்கப்படும் போது 'நமக்கு எல்லாம் தெரியும்' என்ற எண்ணம் வரும். அப்போது பொது மேடைகளிலோ அல்லது தனியாக பேசும்போதோ, சான்றோர் பயனில்லாதவற்றை பேசுவதுண்டு.
ஆடலரசன் சொல்லாற்றலும், அறிவாற்றலும் நிறைந்த அரசியல்வாதி. பொதுமக்களுக்கு இடைவிடாது தொண்டாற்றி வருபவர். நல்லவர். கட்சி தலைமையிடமும் நல்ல பெயரும் இருந்ததால் பாரளுமன்ற தேர்தலில் எளிதாக வெற்றிபெற்று டெல்லி சென்றார். பொதுவாக நேரம் வரம்பு இல்லையென்றால் திறம்பட பேசும் வல்லமையுள்ளவர் அவர். பாராளுமன்றத்தில் தனக்கு கொடுக்க பட்ட குறைவான நேரத்தில் பேசுவதற்கு பழக்கப்படாததால் அவரின் பேச்சுக்கள் பயனில்லாத பேச்சுக்களாகவே அமைந்தது. இதை கவனித்த அக்கட்சியின் தலைவர் ஆடலரசனை தனியாக அழைத்தார்.
" ஆடலரசா, உன்னைப் போன்ற அரசியலார்க்கு நயம் உடைய இனிய சொற்களை பேசும் ஆர்வம் மேலோங்கி இருக்கும். அது அவசியம். ஆனால் நயமில்லாத கசக்கும் சொற்களை பேசினாலும் , எக்காரணத்தை கொண்டும் பயன் இல்லாத சொற்களை பேசாதே ! நயம் உடைய சொல் கேட்பவருக்கு அப்போதுமட்டும் இனிக்கும். ஆனால் பயன் உடைய சொல் கேட்டவருக்கு, பின்னர் கூட அது இனிக்கும். இதை புரிந்துகொண்டால் பாராளுமன்றத்தில் நீ தடம் பதிப்பாய். " என்று வாழ்த்தி வழி அனுப்பி வைத்தார்.
நயனில சொல்லினும் சொல்லுக ! சான்றோர்
பயனில சொல்லாமை நன்று. [ பயனில சொல்லாமை 20 : 7 ]
சான்றோர் நயமில்லாத சொற்களை சொன்னாலும் சொல்லலாம். ஆனால் பயனில்லாத சொற்களை அவர்கள் சொல்லாமல் இருப்பது நலன்.
Tuesday, January 24, 2006
சான்றோரின் அணிகலனையும், வழிகாட்டும் விளக்கையும் பார்த்தோம். சான்றோரின் ஒழுக்கம் எப்படி இருக்க வேண்டும் ?
சாமிநாதன் கல்வியும் புகழும் பெற்றவர் . இவரை போல் அல்லவா நாம் வாழ வேண்டும் என்றும் சொல்லும் அளவிற்கு சான்றோன் என்று அனைவராலும் புகழப்பட்டவர். வயது சுமார் 45 இருக்கும். ஒருமுறை அவருடைய மனைவியும் குழந்தைகளும் ஊருக்கு சென்றிருந்த நேரம். அவர் வீட்டில் வேலை செய்யும் பத்மா, என்றும் போல் அன்று வீட்டை துடைத்துக் கொண்டிருந்தார். பத்மா திருமணமான பெண். தன் வீட்டின் பொருளாதார தேவைகளுக்காக சில வீடுகளில் வேலை செய்து வருபவர். அழகிய பெண் கூட. தனிமையான அந்த சூழலில் பத்மாவை பார்த்த சாமிநாதனின் மனம் தடுமாற பார்த்தது. அடுத்த கணம் சற்றே கண்களை மூடி, தன் மனைவியையும் குழந்தைகளையும் நினைத்து பார்த்தார். ஆசைக்கு அடிமைப்பட்டு இன்னொருவர் மனைவியை அடைய நினைப்பது எவ்வளவு கேவலம் என்று எண்ணியவாறு வீட்டுக்கு வெளியே செல்லலானார். பேராண்மைக்கு இலக்கணம் அல்லவா அது ?
பிறன்மனை நோக்காத பேராண்மை; சான்றோர்க்கு
அறன் ஒன்றோ? ஆன்ற ஒழுக்கு. [ பிறனில் விழையாமை 15 : 8 ]
சான்றோர்க்கு பிறன்மனைவியை பார்க்காத பண்பை போன்று சிறந்த அறமும் ஒழுக்கமும் இல்லை.
Monday, January 23, 2006
சான்றோர்க்கு அணி என்ன என்பதை பார்த்தோம். அவருக்கு வழிகாட்டும் விளக்கு ஒன்று உள்ளது. அதை இங்கே பார்ப்போம்..
வாழ்க்கை என்பது ஒரு அழகிய பயணம். அப்பாதையில் ஒளி, இருள் என்று இரண்டும் உண்டு. அதிலும் இருட்டில் நடக்கவேண்டுமானால் நல்ல விளக்கு ஒன்று இருந்தால் நல்ல துணையாக இருக்குமல்லவா ? சான்றோருக்கு அப்படித்தான். நல்ல வழிகாட்டும் விளக்காக அமைவது அவரின் வாய்மை மட்டுமே ஆகும். மற்றவை(எ-கா: நண்பர்கள், புத்தகங்கள் ... ) வழிகாட்டும் விளக்குகள் போன்று தோன்றினாலும் பொய்யாமையே உண்மையான விளக்காகும்.
எல்லா விளக்கும் விளக்கல்ல - சான்றோர்க்கு
பொய்யா விளக்கே விளக்கு. [ வாய்மை 30 : 9 ]
வாய்மையை உண்மை, மெய் என்றும் அழைக்கலாம். " உள்ளத்தில் இருந்து வருவது உண்மை . வாயினால் சொல்வது வாய்மை. உடலில்(மெய்) ஒன்றர கலந்திருப்பது மெய் " என்று அழகிய பொருளை திருக்குறள் மரபுரையில் தேவநேய பாவாணர் குறிப்பிட்டுள்ளார்.
Friday, January 20, 2006
சான்றோர் எவ்வளவு பொருள் பொதிந்த சொல் என்பதை ஏற்கனவே பார்த்தோம். அத்தகைய சான்றோரின் பண்புகளை வள்ளுவர் பல அதிகாரங்களில் சொல்வதை பார்க்கிறோம்.
ஒருவர் செல்வந்தராக இருக்கும்போது மற்றோருக்கு கொடுப்பது கடினம் அல்ல. நாம் சாதாரண பொருளாதர நிலையில் இருக்கும்போது கொடுப்பது அரிது.
ஒருவன் நல்ல மனைவி, குழந்தைகள் பெற்று இல்லறம் நடத்துவது கடினமன்று. ஆனால் பிறன் மனைவியை அடைய மனதாலும் நினைக்காமல் இருப்பது அரிது.
இன்னும் நடைமுறை வாழ்க்கையில் சொல்வதானால் , ஆச்சாரமான சூழ்நிலையில் ஒருவன் குடிக்கும் பழக்கம் இல்லாமல் இருப்பது கடினமன்று. ஆனால் மதுபான கடையில் வேலை செய்யும் ஒருவன் குடிக்காமல் இருப்பது சிறப்பு. அரிது.
சான்றோருக்கான இலக்கணமும் அப்படிதான். இதோ அப்படி ஒன்று பார்ப்போம்....
வாழ்க்கையில் உயர்வும் தாழ்வும் நிலையானது அல்ல. ஆனால் அத்தகைய உயர்விலும், தாழ்விலும் மனம் மாறாதிருப்பது சான்றோர்க்கு அணியாகும். சின்னசாமி கிராமத்தில் சாதாரண நிலையில் இருந்தபோது அவருக்கு ஆசைத்தம்பி என்ற ஒரு நண்பர் இருந்தார். சின்னசாமிக்கு ஒரு மகன். ஆசைத்தம்பிக்கு ஒரு அழகிய மகள். பள்ளிப்பருவத்திலேயே அவர்கள் நட்புடன் பழகி வந்தார்கள். ஒரு பொங்கல் பண்டிகையின் போது இருவரின் குடும்பத்தினரும் இருக்கும்போது, சின்னசாமி தனது மகனை ஆசைத்தம்பியின் பெண்ணுக்கே மணமுடிப்பதாக வாக்கு கொடுத்தார். சின்னசாமி தனது கடுமையான உழைப்பாலும் மதி நுட்பத்தாலும் தொழில் தொடங்கி கோடீஸ்வரானார். புலம் பெயர்ந்து வெளிநாட்டிற்கு குடும்பத்துடன் சென்றார். அவர் மகனும் கல்வியும் ஒழுக்கமும் நிறைந்து திருமண வயதை எய்தினார். ஆசைத்தம்பியின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் இல்லை. ஆண்டுகள் பல ஓடினாலும் சின்னசாமி தன் நண்பர் ஆசைத்தம்பிக்கு கொடுத்த வாக்கை மறக்கவில்லை. சின்னசாமி தனது குடும்பத்தினருடன் ஆசைத்தம்பியின் வீட்டுற்கு சென்றார். மங்கல பொருட்கள் நிறைந்த தாம்பூல தட்டை கொடுத்து தன் மகனுக்கு பெண் கேட்டார் சின்னசாமி. அங்கிருந்த பெரியோர்களுக்கு ஆச்சரியம். செல்வ செழிப்புடன் வாழும் சின்னசாமி எங்கே ? ஏழை ஆசைத்தம்பி எங்கே ? இருப்பினும் சொன்ன சொல்லை காப்பாற்றி, இளம் உள்ளங்களை இணைத்து வைத்த சின்னசாமியை அனைவரும் வாழ்த்தினர்.
கேடும் பெருக்கமும் இல் அல்ல ; நெஞ்சத்துக்
கோடாமை சான்றோர்க்கு அணி.
[ திருக்குறள் – நடுவு நிலைமை 12 : 5 ]
[இல் – இருப்பது ; கோடாமை – மாறாமை ]
Tuesday, January 10, 2006
நம்மில் பலருக்கு உள்ள பயங்களில் தலையானது மரணம். அடுத்தது 'இப்போது உள்ள நிலையில் இருந்து கெட்டுவிட கூடாது' என்ற அச்சம். செல்வந்தாராக உள்ளவர் தான் ஏழையாகிட கூடாதே என்ற பயம். அதிகாரம் உள்ளவர்களுக்கு அது போய்விடுமோ என்று பயம்.
ஆனால் இவ்வுலகில் வறியோர்க்கு கொடுத்து கொடுத்து, அறவாழ்க்கை வாழும் மக்களுக்கு இந்த இரண்டு அச்சங்களும் இருக்காது.
நத்தம்போல் கேடும், உளதாகும் சாக்காடும்
வித்தகர்க்கு அல்லால் அரிது. [ புகழ் 24 : 5 ]
வாழ்க்கையில் கேடு வரும்போது அதை தாங்கிட ஒரு மெத்தை உண்டென்று கற்பனை செய்துபாருங்கள். மேலும் 'என்றும் வாழ்கிறோம்' என்ற எண்ணம் இருந்தால் மரண பயமும் போகும் அல்லவா ? இவ்விரண்டும் புகழ்புரிந்த வித்தகர்க்கு மட்டுமே முடியும்.
வித்தகர் - ஈகை செயற்களால் புகழுக்கு வித்திட்டவர் .
நத்தம் - நத்தை போன்ற மெத்தை - குஷன்
சாக்காடு - இறப்பு.
அன்புடன்,
கரு.மலர்ச் செல்வன்
Friday, January 06, 2006
சான்றோர் என்றால் பெரியோர் என்று பொருள் கொள்ளலாம் எனினும், அதை விட ஆழமான பொருள் உள்ளதாகவே தோன்றுகிறது.
சான்றோர் , நீத்தார் , பெரியோர் என்பவை வெவ்வேறு பொருள் உடையவை என்பது என் கருத்து.
நீத்தார் என்போர் தன்னை உணர்ந்த ஞானி என கொள்ளலாம். அவர் ஒழுக்கத்து நீத்தார்(3: 1), துறந்தார்(3 : 2 ), இருமை வகை தெரிந்தவர் ( 3 : 3 ) ,உரன் எனும் தோட்டியான்(3:4 ), ஐந்து அவித்தான்(3: 5), செயற்கரிய செய்வார்(3: 6), சுவைகளின் வகை தெரிவார்(3 : 7) , நிறைமொழி மாந்தர்(3 : 8 ), குணம் எனும் குன்றேறி நின்றார்(3:9 ), அறவோர்(3: 10) என்று அவரின் வடிவத்தினை 'நீத்தார் பெருமை' அதிகாரத்தில் பார்த்தோம். இந் நிலையை துறவற பண்புகளை பின்பற்றியிருந்தால் அடைய முடியும்.
சான்றோர் என்போர் ஒருவரின் வெற்றிக்கு உலகம் கொடுக்கும் சான்று(அங்கீகாரம்). சான்று - உதாரணம் - benchmark - example. ஒரு குடும்பத்தில் தீய பழக்கம் உடைய ஒரு பையன் இருக்கிறான். அவனை அவர் தந்தையும் தாயும் கண்டிக்கிறார். அவனுக்கு ஒரு சிறப்பாக வாழும் ஒருவரை உதாரணமாகக் கொடுக்க வேண்டும். நினைத்துப் பார்க்கிறார்கள்.
" இங்கே பார். பூங்கோதையை உனக்கு தெரியும். அவர் நமக்கு தூரத்து சொந்தம் கூட. அந்த அக்கா எவ்வளவும் பெயரும், புகழுடன் இருக்கிறார். ஒரு வருடத்திற்கு முன்பு கூட அவருக்கு குடியரசு தலைவரின் பரிசு ஒன்று கிடைத்தது தெரியும் உனக்கு. அவரை போல அல்லவா நீ வாழ்க்கையில் உயர வேண்டும்" என்று சொல்கிறார்கள்.
அந்த பையன் நினைத்துப் பார்க்கிறான். அப்பா சொல்லும் பூங்கோதை அக்கா உண்மையிலேயே சிறந்த உதாரணமாக இருந்தால் மட்டும் , அவன் மனதில் அப்பெண் உதாரணமாக அமையப் போகிறார். பூங்கோதை அச்சமூகத்தின் சான்றோர் ஆகிறார். சான்றோர் என்பது சமூக அங்கீகாரம். குடும்ப அளவில் உதாரணமாக காட்டக்கூடிய பண்புகளை கொண்டு வாழ்வது.
மக்கட்பேறு அதிகாரத்திலேயே( # 7 ) தாயின் பூரிப்பில் சான்றோர் என்பதற்கான ஊக்கத்தை அளிப்பதை பார்க்கிறோம்.
ஈன்ற பொழுதின் பெரிது உவக்கும் தன்மகனை
சான்றோன் எனக் கேட்ட தாய். [ மக்கட் பேறு 7 : 9 ]
[ குறிப்பு : இங்கு மகன் என்பது பொதுப் பெயர். மகளுக்கும் பொருந்தும் ]
என் இரண்டாம் பெண் பிறக்கும்போது(மார்ச் 28,2002) மகப்பேறு அறையில் இருந்தேன். அந்த காட்சி என் மனதில் பசுமையாக உள்ளது. பிறந்த உடன் செவிலியர் குழந்தையை என் கையில் கொடுக்கின்றர். அப்போது குழந்தையின் கண்கள் இரண்டும் மூடி உள்ளன. என் மனைவி( நானும் தான்), குழந்தையின் கண்கள் மூடியுள்ளதே என்ற அடைந்த பதற்றத்தையும், பின் செவிலியர், குழந்தை இருட்டிலிருந்து மிகவும் பிரகாச வெளிச்சத்திற்கு வருவதால் அப்படி உள்ளது என்று விளக்கியவுடன் என் மனைவி அடைந்த உவகையை நான் அறிவேன். அந்த நேரத்தில் நான் மகிழ்ச்சியில் இருந்தாலும், தாயின் பரவச உணர்ச்சிகளையும், பெரும் மகிழ்ச்சியும் சொல்லில் அடங்காது. அத்தகைய உவகையையும் விட, ஒரு தாய் தன் மகள்/மகன் 'சான்றோர்' என்று மற்றோரால் அழைக்கப்படும்போது அடையும் மகிழ்ச்சியோ பெரிது !
அன்புடன்,
கரு. மலர்ச் செல்வன்
Wednesday, January 04, 2006
கற்பு நெறி ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவானது. மனைத்தக்க மாண்புடையாளாகவும், கற்பு என்னும் உறுதி கொண்டாள், கொழுநன் தொழுதெழுவாள் என்று மனைவிக்கு நெறிகளை காட்டிய(அதிகாரம் 6 - வாழ்க்கைத் துணைநலன் ) திருவள்ளுவர், ஆணுக்கும் அத்தகைய நெறிகளை 'பிறனில் விழையாமை' அதிகாரத்தில் கூறுவதை பார்க்கிறோம்.
கணவன் வெளியூருக்கோ வெளிநாடுக்கோ வேலை செய்யும் நிலையில் பெண்கள் தனியாக வீட்டில் ( அல்லது குழந்தைகளுடன்) வசிப்பதை பார்க்கிறோம். அல்லது ஒன்றாக வாழ்ந்தாலும் கணவன் - மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் வரலாம். இத்தகைய மனநிலையில் மனைவிக்கு ஒரு எதிர்பார்ப்புடன் கூடிய ஏக்கம் வரலாம். இது கற்பு நெறி அல்ல. அத்தகைய நிலையில் வேறோருவன் அப்பெண்ணின் வாழ்க்கையில் புகுவது எளிதாகினும், அப்படி செய்பவனுக்கு எக்காலத்திலும் அழியாத பழி வந்து சேரும்.
எளிதென இல் இறப்பான் எய்தும் எஞ்ஞான்றும்
விளியாது நிற்கும் பழி. [ பிறனில் விழையாமை 15 : 5 ]
அப்படி பிறன் மனைவியை அடைந்தவனுக்கு, பழி தனியாகவா வந்து சேரும் ? இல்லை. பகை, பாவம், அச்சம் ஆகிய மூன்றும் கூடவே வரும்.
பகை பாவம் அச்சம் பழி என நான்கும்
இகவாவாம் இல்இறப்பான் கண். [ பிறனில் விழையாமை 15 : 6 ]
இதை வலியுறுத்தும் கதைகளை நான் படித்திருந்தாலும், சமீபமாக டிவிடியில் 'மெட்டி ஒலி' என்ற திரைதொடரின் ஒருபகுதியில் பார்த்தது....
மாணிக்கம் கடுமையாக உழைக்கும் மனிதர். அதே ஊரில் சரளா என்ற குடும்பப் பெண், கணவர் வெளிநாட்டில் வேலைசெய்ய, தனியாக வசதியாக வாழ்ந்து கொண்டிருப்பார். மாணிக்கதிற்கும் சரளாவிற்கும் கள்ள காதல் . பின்னர் மாணிக்கத்தின் திருமணத்திற்கு பின் , அத்தொடர்பு இல்லாமல் போனாலும் , பழி நிலைத்து மாணிக்கத்திற்கு வேலை போய்விடுகிறது. பின்னர் அவன் வாழ்க்கையில் நடக்கும் சிரமங்களுக்கு அப்பழியோடு வந்த பகை, பாவம், அச்சம் காரணமாகிறது.
அதனால் தான் நம்முன்னோர்கள், ஐம்பெரும் பாதக செயல்களில் ஒன்றாக பிறன் மனைவியை நாடும் குற்றத்தை வைத்துள்ளார்கள்.
அன்புடன்,
கரு. மலர்ச் செல்வன்
Thursday, December 29, 2005

பொன்போன்ற மேனி...
எவ்வித அலங்காரமோ அல்லது அணிகலனோ இல்லாமல் சிலர் பொன்போல் ஒளிவிட்டு திகழ்வதை பார்க்கிறோம். உதாரணத்திற்கு இங்குள்ள சில ஞானிகளை பாருங்கள்.
யோகி இராம்சுரத்குமார். அருள்வடிவானவர்.
மனித தொண்டே மகேசன் தொண்டாக கொண்டு வாழ்ந்த அன்னை தெரசா.

பாமர மக்களுக்கும் பயன்படும் வகையில் எளிய வாழ்வியல், இறை உணர்வு ஊட்டி வரும் வேதத்திரி மகரிஷி அவர்கள்.
சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் - துன்பம்
சுடச்சுட நோற்கிற் பவருக்கு. [ தவம் 27 : 7 ]
பொன்னை சுட்டால் வரும் சுடர்போல், துன்பத்தை நோற்பவர்கள்(தவமிருப்பர்கள்) ஒளிவீசும் தன்மை பெறுவார்கள்.
இத்தகைய நிலையை அடைந்தவர்களை உலகத்தின் உயிர்கள் அனைத்தும் தொழும்.
தன்னுயிர் தான் அறப் பெற்றானை- ஏனைய
மன்னுயிர் எல்லாம் தொழும் [ தவம் 27 : 8 ]
நாம் அனைவரும் உயிர் பெற்றுள்ளோம். ஆனால் அவ்வுயிரை 'முழுமையாக' பெற்றுள்ளோமா என்பது சிந்திக்க வேண்டியது. உயிர் என்றால் என்ன ? அவ்வுயிரை நாம் முழுமையாக பெற சில பயிற்சிகளை மனவளக் கலை மன்றத்தினர் தொகுத்துள்ளனர். அதில் உயிரை நாம் முழுமையாக பெறுவதற்கு உதவுவது காய கல்ப பயிற்சி. ஆர்வமுள்ளோர்
உலகம் முழுவதும் இம்மன்றத்தின் ஆசிரியர்கள் உள்ளனர்.
அன்புடன்,
கரு.மலர்ச் செல்வன்
Tuesday, December 27, 2005
கருமம் என்பது பொருள் பொதிந்த அழகியத் தமிழ்ச் சொல். கருவில் இருக்கும் போதே நம் பாதை(விதி) நிர்ணயிக்கப் படுவதால் கருமம் எனப்பட்டது. அதுவே கர்மா(karma) என்று வடமொழி பேசுபவர்களால் மருவி வழங்கப்படுகிறது. வங்கிக் கணக்கு போல இது. நமது முன்பிறவியில்(முன் பிறவியில் நம்பிக்கை இல்லாதோர் முன்னோர்களின் செயல் என்று எடுத்துக் கொள்ளலாம்) செய்த செயல்களை விளைவே, இப்பிறவியின் ஆரம்ப கணக்கு(opening balance) எனக் கொள்ளலாம். இப்பிறவியில் நாம் செய்யும் செயல்கள்(அறம்) ஆரம்பக் கணக்கை கூட்டுகிறதா(credit) அல்லது குறைக்கிறதா(debit) என்பது அச்செயல்களின் தண்மையை பொருத்தது. புண்ணியம், பாவம் என்பதெல்லாம் இதற்கு நாம் புழங்குகின்ற சொற்கள்.
நம்மின் பழைய தீயவினைகளின் விளைவுகளை குறைத்து, நல் வினைகளின் பாதையில் நம்மை செலுத்த முடியுமா ? விதியின் பாதையை மாற்ற முடியுமா ?
முடியும் !
தவம்செய்வார் தம்கருமம் செய்வார் - மற்றல்லார்
அவம் செய்வார் ஆசை உட்பட்டு. [ தவம் 27 : 6 ]
தவம் செய்வதால்(துன்பம் பொறுத்தல்; உயிர்களுக்கு தீங்கு செய்யாமை - தவம் 27:1) நம் கருமவினைகளை நீக்க முடியும். அப்படி அல்லாமல், புலன்களின் ஆசைக்கு உட்பட்டவர்கள் அவம் செய்பவர்கள்.
அன்புடன்,
கரு.மலர்ச் செல்வன்
Friday, December 23, 2005
எண் என்பது கணித எண்ணையும் குறிக்கும். நமது மனதில் எழும் எண்ணத்தையும் குறிக்கும். இரண்டிற்கும் ஒரே பெயரை வைக்க காரணம் என்ன ? நம் மனதில் ஒரு நாளைக்கு சுமாராக 70,000+ எண்ணங்கள் எழுவதாக படித்திருக்கிறேன். அந்த எண்ணங்களுக்கு நடுவே உள்ள இடைவெளி/அமைதியில் நம்மை உணர்ந்து மெய்ஞானம் பெற முடியும். எண்ணங்கள் தொடர்ச்சியாக வருவதால்தான் எண் என்று காரணப்பெயராக அமைந்துள்ளதாக நினைக்கிறேன். எண்ணங்களை சீராக்க மணிமாலை உபயோகிப்பதும் இதற்குதான்.
அலை அலையாய் எழும் எண்ணங்களின் ‘இடையே’ நாம் அமைதியாக தவமிருப்பதை ‘எண்ணின் தவம்’ என்று கூறலாம். இந்த தவநிலையில்
நான் யார் ?
இந்த பிரபஞ்சத்திற்கும் எனக்கும் என்ன தொடர்பு ?
எனது படைப்பின் காரணம் என்ன ?
ஆகிய கேள்விகளுக்கு விடை கிடைக்கும். அந்நிலையை அடைந்த ஒருவர் ‘இது நடக்க வேண்டும்’ என்று நினைத்தால்(Intent) நடக்கிறது. தீயவற்றை அழிப்பதும், அல்லது புதினங்களை ஆக்குவதும் இந்நிலையில் உள்ள எவராலும் முடியும். மதமோ,மொழியோ, குலப்பிறப்போ, கல்வியோ இதற்கு தடையாக அமைய முடியாது.
ஒன்னார்த் தெறலும், உவந்தாரை ஆக்கலும்
எண்ணின் தவத்தான் வரும். [ தவம் 27 : 4 ]
அன்புடன்,
கரு.மலர்ச் செல்வன்
Thursday, December 22, 2005
தவமும் வெற்றியும்
இந்த நோன்பின் தத்துவமே துன்பத்தை பொறுத்தல். துன்பத்தை பொறுத்தலும், எவ்வுயிர்க்கும் தீங்கு செய்யாமலுமே தவம் என்று வள்ளுவம் சொல்லுவதை (27: 1) பார்த்தோம். ஆனால் இத்தகைய தவத்தை எல்லோராலும் செய்யமுடியுமா ? நீரிழிவு நோய் உள்ள ஒருவர் மருத்துவரிடம் சென்றார். “அய்யா, சர்க்கரையை உணவில் சேர்த்துக்கொள்வதை குறைக்க வேண்டும். எப்படி என்று ஆலோசனை கூறுங்கள்” என்றார். அதற்கு மருத்துவர் “ இன்னும் 3 வாரம் கழித்து வா” என்றார்.
அவரும் 3 வாரம் கழித்து வந்தவுடன் மருத்துவர் உணவில் சக்கரையை குறைத்துக் கொள்வது எப்படி என்று விளக்கி கூறினார். விடைபெறும் போது, வந்தவர் மருத்துவரிடம், “ இந்த ஆலோசனையை அன்றே சொல்லாமல், மூன்று வாரம் கழித்து சொல்கிறீர்களே. ஏன்? “ என்றார். அதற்கு மருத்துவர் சிரித்துக்கொண்டே “ சர்க்கரையை குறைப்பது எப்படி என்று முதலில் கேட்டபோது, என் மனதில் தோன்றிய ஆலோசனையை என்னால் உறுதியுடன் பின்பற்ற முடிகிறதா என்று மூன்று வாரம் முயற்சித்தேன். முடிந்தது. இப்போது உங்களை பின்பற்ற சொல்லுகின்றேன் “ என்றார். மனித பழக்கவழக்கங்களை ஆராய்ந்தவர்கள் எந்த ஒரு புது பழக்கமும் 21 நாள் சவாலை( 21 day challenge) வெல்லுகிறதா என்று பார்க்க சொல்லுகிறார்கள். ஆதலால் தான் தவம் ‘கடினம்’. காலையில் 4.30 மணிக்கு எழுந்து உடல்பயிற்சி செய்யவேண்டும் என்று அலாரம் வைப்பேன். ஆனால் 4.30 மணிக்கு எழுந்து அலாரத்தை அமுக்கிவிட்டு திரும்பித் தூங்கி விடுவேன் !!!.
தவமும் தவமுடையாருக்கு ஆகும் - அவம் அதனை
அஃதிலார் மேற் கொள்வது. [ தவம் 27 : 2 ]
தவத்தின் எதிரி அவம். அவையங்களின் ( ஐந்து புலன்களின்) விருப்பபடி நடப்பது அவம். அப்படி நடக்காமல் உறுதியுடன் தவமிருத்தல் , கொடுப்பினையும் உறுதியும் இருந்தால் மட்டுமே முடியும்.
இலர் பலராகிய காரணம், நோற்பார்
சிலர் பலர் நோலாதவர் [ தவம் 27 : 10 ]
இவ்வுலகத்தில் இல்லை என்போரே பெரும்பாலோர் உள்ளனர். என்ன காரணம் ? நோற்பார்( தவம் செய்வோர், உறுதியுடன் நோன்பு கடைபிடிப்போர் ) சிலராகவும், அவையங்களின் கட்டுப்பாடில் பலராகவும் இருப்பதால் தான். வெற்றிக்கு இதைவிட சிறந்த இரகசியம் உளதா ?
அன்புடன்,
கரு.மலர்ச் செல்வன்
Wednesday, December 21, 2005
தவத்தின் உருவம்
உற்றநோய் நோன்றல், உயிர்க்கு உறுகண் செய்யாமை
அற்றே தவத்திற்கு உரு. [ தவம் 27: 1]
ஆதலால் புற உருவத்தில் மயங்காமல், உண்மையான தவத்தை மேற்கொள்வோரை போற்றி , நாமும் தவமிருக்கலாம் வாருங்கள் !
Sunday, December 11, 2005

தவம் - 1
யோகாசனம் கடந்த 10 ஆண்டுகளாக பயின்று வந்தாலும், அதன் அடுத்த நிலையான தியானத்தை முறையாக பயில வேண்டும் என்றும் சமீப காலமாக ஆசை. என் மனைவிக்கும் இது போன்ற அவா. அப்போதுதான் ஹூஸ்டன் பாரதி கலை மன்றத்தினரின் மின்னஞ்சல் ஒன்று வந்தது. வேதத்திரி மகரிஷி(http://www.vethathiri.org/FrontPage/tamil ) வடிவமைத்த எளியமுறை குண்டலினி பயிற்சியை ஏற்பாடு செய்திருந்தார்கள். சென்னையில் இருந்து வந்திருந்த திரு எம்.ஆர்.சுப்ரமணியன்(படத்தில் நடுவில் அமர்ந்திருப்பவர்) அவர்கள் இப்பயிற்சியை கடந்த இரண்டு வாரங்களாக மிக சிறப்பாக வழங்கினார். நானும் என் துணைவியும் இதனால் பெரும்பயன் அடந்தோம்.
எளியமுறை உடற்பயிற்சி, காயகல்பம், தியானம் என்று மூன்றும் கற்றோம். அதிலும் காயகல்பம் பயிற்சி முறையோ மிக எளிது. பயனோ அளவிட முடியாது. நோயற்ற உடல், நீண்ட ஆயுள், ஒளிவீசும் ஆற்றல் ஆகியவற்றை இதனால் பெறலாம்.
கூற்றம் குதித்தலும் கைக்கூடும் ; நோற்றலின்
ஆற்றல் தலைப் பட்டவர்க்கு. [ தவம் 27 : 9 ]
தவத்தால் வரும் ஆற்றலைப் பெற்றவர்க்கு கூற்றுவனை ( யமன் ) வெல்வது கூடுவதாகும். காயகல்ப தொடர்ந்து செய்துவந்தால் இது முடியும்.
அன்புடன்,
கரு.மலர்ச் செல்வன்
Thursday, December 08, 2005
அடக்கமுள்ள மலை
ஒரு பிரமாண்ட தோற்றத்தை பார்க்கிறோம் அல்லது பெரிய சவாலை எதிர்கொள்கிறோம். மலைப்பாக உள்ளது என்கிறோம். மிகப்பெரிய ஒன்றின் பிரமிப்பை குறித்து நம் உணர்வை ‘மலை’ யாக குறிக்கிறோம். அடக்கம் பற்றி சொல்ல வந்த திருவள்ளுவர் , அதற்கு உருவகமாக ஒன்றை குறிப்பிட வேண்டும். அடக்கம் என்றாலே தோற்றத்தில் உள்ளது அல்ல. வேலைசெய்யும் இடத்தில் இதை பார்க்கலாம். ‘பணிவாக’ தோற்றம் அளிக்கும் மனிதரை பார்க்கிறோம். அவர் திரைமறைவில் குழிதோண்டுவதையும் பார்க்கிறோம். ஆனால், செல்வமும் அதிகாரமும் நிரம்பிய ஒருவரை பார்க்கிறோம். இந்த இரண்டும் இருந்தும் பணிவான தோற்றம் உடைய பெரியவர்களை நாம் பார்க்கிறோம். அத்தகையத் தோற்றம்..
நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம்
மலையினும் மாணப் பெரிது. [ அடக்கம் 13 : 4]
Wednesday, November 30, 2005
இயற்கை அழகு
‘செய்நன்றி அறிதல்’ சிறந்த பண்பு. எல்லா சமூகங்களாலும் போற்றப்படும் பண்பு. சிறிய வயதில், என் கையெழுத்து நன்றாக அமைய உதவிய திரு கந்தசாமி ஆசிரியர். நல்ல வாழ்க்கைக்கு வித்திட்டது அக்கையெழுத்து. உயர்நிலைப் பள்ளியில் உணவிட்டு அறிவும் கொடுத்தவர் என் அன்புக்கு உரிய ஆசிரியர் திரு கே.மேகநாதன். கல்லூரி பருவத்தில் வெற்றிப்பாதைக்கு வித்திட்ட டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தி, கே. பிரேம்குமார். 9 ஆண்டுகளுக்கு முன் நான் அமெரிக்கா வர பெரும் உதவியாக இருந்த நண்பர்கள் இரவீந்தரன் , நாகராஜ். செவ்விசையின் பேரின்பத்தை உணர்த்திய நண்பர் பெ.சந்திரசேகரன். இப்பட்டியலுக்கு ஒரு முடிவு உண்டோ ? இவர்களின் உதவியை நினைத்து பார்த்தாலே மனதை உருக வைக்கும். என் பெற்றோரின் தியாகங்களுக்கும், என் மனைவியின் உறுதுணைக்கும் எழேழுப் பிறப்பிற்கும் நன்றியுடன் இருப்பேன்.
இயற்கையின் அழகுக்கும் செய்நன்றிக்கும் என்ன தொடர்பு ? இரண்டையும் போற்றி உணர்ந்தால்தான் நம்மை நாம் உணரமுடியும். இரண்டும் நம்மை மனமுருக வைப்பன. இரண்டையும் நம் மனத்தில் கொண்டால் அழகான தியான மாக அமையும். இதோ…
வையகம்(Galaxy) நமது அறிவால் உணரமுடியாது. வானகம்(Universe) வையகத்தின் ஓர் அங்கம். அறிவியலால் ஓரளவு உணர முடியும்.
செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது. [ செய்நன்றி – 11: 1 ]
வையகத்தையும் வானகத்தையும் அகத்தில் காட்சிகளாக கொண்டு , நாம் ஏதும் செய்யாமல் நமக்கு உதவி செய்த பெருந்தகைகளை நினைவு கொள்ளுங்கள்…
காலம் அறிந்து செய்த உதவி சிறிய அளவாயினும், இவ்வுலகத்தை விட பெரியது.
காலத்தினால் செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது. [ செய்நன்றி 11:2 ]
இவ்வுலகின் செழுமையையும், பசுமையையும், அழகையையும் மனதில் நினைத்து, காலம் அறிந்து(timely help) உதவி செய்த அன்பர்களை நினைத்துக் கொள்ளுங்கள்…
கடல் அலைகளின் ஓசை இனிமை. அந்த இனிய ஓசையிலும், வண்ணங்கள் படைக்கும் அழகிலும் மனத்தை நிறுத்துங்கள். பயனை எதிர்பாராது நமக்கு உதவி செய்தவர்கள் பலர். அந்த உயர்ந்த மனிதர்களை நினைக்கலாமே !
பயன்தூக்கா செய்த உதவி நயன் தூக்கின்
நன்மை கடலின் பெரிது. [ செய்நன்றி 11: 3 ]
வையகத்தில் வானகம். வானகத்தில் உலகம். உலகத்தில் கடல். இயற்கையின் தொடர்ச்சியையும் வள்ளுவம் நன்றிக்கு உவமையாய் அமைந்த சிறப்பினை வியக்கின்றேன்.
உலகத்தில் இன்னொரு அழகான ‘மலை’ எங்கே ?
Saturday, November 26, 2005
சொக்க தங்கம்
நல்லதொரு குடும்பம். அக்குடும்பத்தை திறம்பட நடத்திச் செல்லும் மனையாள் அக்குடும்பத்தின் சிறப்பாகவும் புகழாகவும் விளங்குபவர். கணவரோடு அறச்செயல்கள் பற்பல ஆற்றுபவர். அவர்களின் மக்கட்செல்வம் பண்பும் அறிவும் நிறைந்த மக்கள். அம்மக்கள் குடும்பத்தின் அணிகலன்களாக விளங்குபவர்கள்.
மங்கலம் என்ப மனைமாட்சி – மற்றதன்
நன் கலம் நன்மக்கட் பேறு. [ இல்வாழ்க்கை 5 : 10 ]
[ மங்கலம் – சிறப்பு/புகழ் ; கலம் – அணிகலன்/நகை ]
நாம் சேர்க்க வேண்டிய சிறந்த ஆபரணங்கள் நல்ல குழந்தைகளே !
மேலே சொன்ன திருக்குறளின் அதிகாரத்தையும்(5) குறளையும்(10) மாற்றி பார்ப்போம்… கிடைப்பது 10 : 5 [ இனியவை கூறல் ( 10: 5 ]
பெரும்பான்மையான நிறுவனங்களில் வரவேற்பாளாராக பெண்கள் பணிபுரிவதை பார்க்கிறோம். அவர்களின் பணிவு கலந்த இன்சொல் வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சி தருகின்றது.
பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு
அணி ; அல்ல மற்றுபிற. [ இனியவை கூறல் 10 : 5 ]
பணிவும் இன்சொல்லும் உடையோர் வேறு நகைகள் அணியத் தேவையில்லை. அவர்களை சார்ந்த குடும்பத்திற்கும் நிறுவனத்திற்கும் ஒளிவீசும் அணிகலனாகவும் அமைவர். நகைகளில் சிறந்தது புன்னகை.
தொடக்கப் பள்ளி(5ம் வகுப்பு வரை) ஆசிரியர்களாக பெண்கள் நியமிக்கப்படுவதற்கும் இதுதான் காரணம் அன்றோ?.
Thursday, November 10, 2005
இதயம் எவ்வளவு முக்கியம் என்பது அது ஒழுங்காக பணி செய்யும் போது நமக்கு புரிவதில்லை. மாரடைப்பு இறப்புக்கு ஒரு முன்னனி காரணம் என்பது நாம் அறிந்ததே. ஆனால் இந்த மாரடைப்பு வார நாட்களில் அதிகமாக எந்த நேரங்களில் வருகிறது என்ற ஆராய்ந்ததில் ..
திங்கள் காலை
என்பது தெரிகிறது. போட்டியும், வேகமும் நிரம்பியுள்ள இவ்வுலகில் இந்த ஆய்வின் முடிவு நமக்கு வியப்பு இல்லை தானே ?
நாம் செய்யும் வேலை நமக்கு பிடித்திருக்கிறதா? நம்மை நாமே இக்கேள்வியை கேட்டால் வேலை 'அழுத்தத்தில்' இருந்து விடுபடலாம்.
அன்போடு இயைந்த வழக்கு என்ப ஆருயிர்க்கு
என்போடு இயைந்த தொடர்பு. [அன்புடைமை- 8 : 3 ]
[ வழக்கு - lifestyle, habit ]
அன்போடு செய்யும் செயல்கள், உயிரும் உடலும் போல இணைபிரியாதது. நம் வாழ்வில் அன்பில்லாத செயல்கள் பெருகினால், உயிர் இந்த உடலை விட்டு பிரிந்துவிடும் எச்சரிக்கையாக இக்குறளை நாம் கொள்ளலாம்.
மேலும் எடுத்த வேலையில் உற்சாகமும் ஈடுபாடும் நிறைந்து பணியாற்றும் நண்பர்களை பார்க்கிறோம். அவர்களின் வெற்றியும் சிறப்பும் நம்மை பிரமிக்க வைக்கிறது. அந்நிலையை 'Passion' அல்லது 'ecstasy' என்று அழைக்கிறோம். இந்நிலையை
அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து
இன்புற்றார் எய்தும் சிறப்பு. [ அன்புடைமை 8 : 5 ]
Monday, November 07, 2005
அகமும் புறமும்
அவர் வெள்ளித் திரையில் புகழ்பெற்ற நடிகை. தனது நடிப்பினாலும் அழகினாலும் இலட்சக் கணக்கான இரசிகர்களின் இதயங்களை கவர்ந்தவர். தமிழ்த் திரை உலகில் உச்சத்தில் இருந்தபோது, அவர் நடித்த திரைப்படம் வெளிவந்து 200 நாட்களை தாண்டி ஓடிக்கொண்டிருந்த நேரம்…
இலண்டன் மாநகரில் 100 பெரிய பணக்காரர்களில் ஒருவர் அந்த தமிழர். அவருடைய பையன், நடிகையின் திரைப்படத்தை பார்த்ததில் இருந்து ‘அடைந்தால் அந்த அழகுதேவதை. இல்லேல் துறவறம்’ என்ற முடிவுக்கு வந்தான். பெற்றோரிடன் தனது ஆசையை கூறியவுடன் , அவர்களும் சரியென்றனர்.
அப்புறம் என்ன கெட்டிமேளம் தான் !. திருமண செலவு மட்டும் சில மில்லியன் பவுண்டுகள் செலவானதாக சொல்கிறார்கள்.
ஓராண்டு கூட நிறைவுராத நிலையில் மணமுறிவு என்று செய்தி. நடிகை தமிழ்த் திரையில் இரண்டாம் சுற்றுக்கு வந்துவிட்டார் என்றும் அந்த பையன் பெங்களூரில் உள்ள மடம் ஒன்றில் சேர்ந்துவிட்டதாகவும் நமக்கு வரும் கடைசித் தகவல்கள் தெரிவிக்கின்றன.
புறத்துறுப்பு எல்லாம் எவன்செய்யும்? யாக்கை
அகத்துறுப்பு அன்பு இலவர்க்கு . [ அன்புடைமை 8 : 9 ]
Saturday, November 05, 2005
சிங்க நடையிட்டு வீரன் ஒருவன் வந்தான்..
ஒருவர் வேலை நிமித்தமாக வெளியூர் சென்றிருந்தார். அப்பயணத்தில் சில நாட்களுக்கு பிறகு இரவு உணவருந்த ஓட்டலுக்கு சென்றார். அங்குள்ள சேவகரை(bearer) அழைத்து “ கருகிப்போன தோசை ஒன்றை உப்பில்லாச் சட்டினியுடன் கொண்டு வா” என்றார். அந்த சேவகரும் வந்தவருக்கு மரை கழண்டுவிட்டதா என்ற ஓசனையுடன் உள்ளே சென்று அவர் கேட்டதையே கொண்டுவந்தார். மேசையில் அதை வைத்தவுடன் அந்த சேவகரை முன்னே உள்ள நாற்காலியில் உட்காரச் சொன்னார். அமர்ந்தவுடன் சேவகரை பார்த்து, வந்தவர் “ நான் சாப்பிட்டு முடிக்கும் வரை நீ நச்சரித்துக் கொண்டே இரு. எனக்கு வீட்டு ஞாபகம் ! “ என்றாரே பார்க்கலாம். இது நாட்டு நடப்பு.
இத்துணுக்கை படித்தவுடன் உங்களைப் போல் நானும்தான் நம் வீட்டு கதையை கேட்ட மகிழ்ச்சியில் சிரிக்கவும் சிந்திக்கவும் செய்தேன். கூட்டுக் குடும்பம் இல்லாத சூழலில் கணவன் – மனைவி இடையே உள்ள உராசல்கள் எத்தனை எத்தனை ! உரசல்கள் சற்று அதிகமாகும் போது விரிசல்-சண்டை-விவாகரத்து என்று பெருகிக் கொண்டே போவதை பார்க்கிறோம்.
புகழ்புரிந்த இல்இலோர்க்கு இல்லை - இகழ்வார்முன்
ஏறுபோல் பீடு நடை.
வீட்டில் பிரச்சனைகள் இல்லாதவர்கள் மட்டுமே சிங்கம் போல் பீடு நடை போட முடியும். ‘இகழ்வார்முன்’ என்பது வலியுறுத்தல் . அதாவது மற்றவர்கள் நம்மை இகழும்போது கூட நம்மால் சிங்கம் போல் பீடு நடையிட்டு தடைகளை நீக்கி வெற்றி பெற முடியும் ! உண்மைதானே ?
Tuesday, November 01, 2005
ஈகையின் அளவுகோல்
நம்மிடம் இந்த குணம் சிறிதாயினும் இருக்கும். நம்மிடம் கேட்கப் படும் உதவியை நம்மால் செய்ய இயலும். இருப்பினும் இரக்கப்படுதலோடு உதவியை மறுத்தோ அல்லது தேவையை விட சற்று குறைத்தோ கொடுக்கும் சூழ்நிலை வரும். இதற்கு ஒரு அளவுகோல் ஒன்றை வகுக்கலாம். நாம் செய்யும் உதவி முழுமையாக இருந்தால்(100%) இரந்தவரிடம் இன்முகத்தை தோற்றுவிக்கும்(100%). மாறாக இரக்கம்(பரிதாபம்) மட்டுமே கொண்டால் ( 0 % ஈகை ) இரந்தவரிடம் இன்முகம் காண முடியுமா ?
இன்னாது இரக்கப் படுதல் - இரந்தவர்
இன்முகம் காணும் அளவு.