இயற்கையின் அழகே அழகு. இயற்கை என்றாலே என் மனதில் தோன்றுவது பரந்த வானமும், அதில் தோன்றும் அழகிய நட்சத்திரங்களும், காலை ஒளியில் மின்னும் அமைதியான கடலும், பிரமிக்க வைக்கின்ற மலைகளும் ஆகும். இவற்றின் அழகை பாடாத கவிஞர்களே இல்லை.
‘செய்நன்றி அறிதல்’ சிறந்த பண்பு. எல்லா சமூகங்களாலும் போற்றப்படும் பண்பு. சிறிய வயதில், என் கையெழுத்து நன்றாக அமைய உதவிய திரு கந்தசாமி ஆசிரியர். நல்ல வாழ்க்கைக்கு வித்திட்டது அக்கையெழுத்து. உயர்நிலைப் பள்ளியில் உணவிட்டு அறிவும் கொடுத்தவர் என் அன்புக்கு உரிய ஆசிரியர் திரு கே.மேகநாதன். கல்லூரி பருவத்தில் வெற்றிப்பாதைக்கு வித்திட்ட டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தி, கே. பிரேம்குமார். 9 ஆண்டுகளுக்கு முன் நான் அமெரிக்கா வர பெரும் உதவியாக இருந்த நண்பர்கள் இரவீந்தரன் , நாகராஜ். செவ்விசையின் பேரின்பத்தை உணர்த்திய நண்பர் பெ.சந்திரசேகரன். இப்பட்டியலுக்கு ஒரு முடிவு உண்டோ ? இவர்களின் உதவியை நினைத்து பார்த்தாலே மனதை உருக வைக்கும். என் பெற்றோரின் தியாகங்களுக்கும், என் மனைவியின் உறுதுணைக்கும் எழேழுப் பிறப்பிற்கும் நன்றியுடன் இருப்பேன்.
இயற்கையின் அழகுக்கும் செய்நன்றிக்கும் என்ன தொடர்பு ? இரண்டையும் போற்றி உணர்ந்தால்தான் நம்மை நாம் உணரமுடியும். இரண்டும் நம்மை மனமுருக வைப்பன. இரண்டையும் நம் மனத்தில் கொண்டால் அழகான தியான மாக அமையும். இதோ…
வையகம்(Galaxy) நமது அறிவால் உணரமுடியாது. வானகம்(Universe) வையகத்தின் ஓர் அங்கம். அறிவியலால் ஓரளவு உணர முடியும்.
செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது. [ செய்நன்றி – 11: 1 ]
வையகத்தையும் வானகத்தையும் அகத்தில் காட்சிகளாக கொண்டு , நாம் ஏதும் செய்யாமல் நமக்கு உதவி செய்த பெருந்தகைகளை நினைவு கொள்ளுங்கள்…
காலம் அறிந்து செய்த உதவி சிறிய அளவாயினும், இவ்வுலகத்தை விட பெரியது.
காலத்தினால் செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது. [ செய்நன்றி 11:2 ]
இவ்வுலகின் செழுமையையும், பசுமையையும், அழகையையும் மனதில் நினைத்து, காலம் அறிந்து(timely help) உதவி செய்த அன்பர்களை நினைத்துக் கொள்ளுங்கள்…
கடல் அலைகளின் ஓசை இனிமை. அந்த இனிய ஓசையிலும், வண்ணங்கள் படைக்கும் அழகிலும் மனத்தை நிறுத்துங்கள். பயனை எதிர்பாராது நமக்கு உதவி செய்தவர்கள் பலர். அந்த உயர்ந்த மனிதர்களை நினைக்கலாமே !
பயன்தூக்கா செய்த உதவி நயன் தூக்கின்
நன்மை கடலின் பெரிது. [ செய்நன்றி 11: 3 ]
வையகத்தில் வானகம். வானகத்தில் உலகம். உலகத்தில் கடல். இயற்கையின் தொடர்ச்சியையும் வள்ளுவம் நன்றிக்கு உவமையாய் அமைந்த சிறப்பினை வியக்கின்றேன்.
உலகத்தில் இன்னொரு அழகான ‘மலை’ எங்கே ?
Wednesday, November 30, 2005
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment