Tuesday, October 23, 2012

மெய்ப்பொருள் காண்பது அறிவு !

ஸ்டீவன் ஹாக்கின்ஸ் என்ற புகழ்பெற்ற அறிவியல் அறிஞரிடன் ‘கடவுள் இருக்கிறாரா ? ‘ என்ற கேள்வியை கேட்டார்கள். அவர் ‘ இயற்பியல் நெறிகள்’ தான் கடவுள் என்பதை நம்புகின்றேன். ஆனால் அதற்கும் இன்றைய மதங்கள் போதிக்கும் கடவுள் நெறிகளுக்கும் தொடர்பில்லை. என்றார் . நினைத்துப் பார்த்தால் இந்த பேரண்டத்தில் கோடானுகோடி கோள்களும் விண்மீன்களும் ஒழுங்காக செயல்படுகின்றன. இந்த இயக்கத்தை இன்றைய இயற்பியல் நெறிகளால் மட்டுமே விளக்கமுடியும் . அதுவும் ஓரளவிற்குதான் ! ஹாக்கின்ஸின் எல்லையில்லா , தொடர்ந்து விரிவடைகின்ற பேரண்ட கொள்கை(no-boundary cosmos) ஓர் உதாரணம் . இத்தகைய விளக்கங்களை சமய நெறிகளால் கொடுக்க முடியாது. அதுபோல் இன்னொரு முனையில், அணுத்துகள் இயக்கத்தை விளக்கவும் ஆராய்ச்சிகள் தொடர்கின்றன. பேரண்டத்தின் அனைத்து பொருள்களுக்கும் நிறை(mass)யை தரும் நுண்-துகள் ( Higgs-Boson Particle) கண்டுபிடிப்பு இன்னொரு உதாரணம். இயற்பியல் நெறிகள் முழுமையான தெளிவை தராமல் இருக்கலாம். ஆனால் அறிவியல் ஆராய்ச்சியின் வாயிலாக கடவுள் சார்ந்த கேள்விகளுக்கான விடையை உலகம் அறியும் நாள் வெகுதொலைவில் இல்லை. அதற்கு பிறகு மதம் வெறும் அடையாளமாகவும், கற்பனைக் கதைகளின்(mythology) தூண்களாகவும், சடங்குகளாகவும் மாறிவிடுமா என்பது தெரியவில்லை. குழந்தைகள் ஹாரி பாட்டர் கதைகள் படிப்பது போல் இராமயணக் கதைகளையும், விவிலிய கதைகளையும் படிப்பார்களா அல்லது மதம் தன்னுடைய ஆளுமையை இழந்து விடுமா என்று தெரியவில்லை ?


மெய்ப்பொருள் காண்பது அறிவு !

இந்த வார சனிக்கிழமை நான் பிறந்த கிராமத்தில் , நாம் ஏற்படுத்தியுள்ள அறிவகத்தில்( நூலகம்) நான்காம் ஆண்டு விழா நடைபெறுகிறது. அழைப்பிதழ் இதோ ..இந்த நூலகத்தில் 3000+ நூல்கள் இருக்கின்றன. கணினிகள் உள்ளன. வகுப்பறை, விளையாட்டுத் திடல் உள்ளது. மூட நம்பிக்கை, வாஸ்து, சோதிட வகை நூட்களும், திரைப்பட போதையூட்டுகின்ற பத்திரிக்கைகளுக்கும் இடம் இல்லை. இளைஞர்களும் சிறுவர்களும் மகளிரும் பெரிதும் பயன்பெறுகின்றனர்.

Saturday, June 26, 2010

குற்றம் புரியும் ஆளுமை..

14 வயதில் குழந்தைப் பெற்ற பள்ளி மாணவி - 2 ஆண்டுகளாக ஆசிரியர் மாணவியுடன் முறைகேடான உறவு ..
உதவியாளருடன் முறைகேடான உறவு.  செனட்டர் குடியரசு தலைவர் தேர்தலில் இருந்து விலகல்...
சிறுவர்களுடன்  ஓரினச் சேர்க்கை . கிருத்துவ பிஷப் மீது ஆதாரங்களோடு குற்றச்சாட்டு !
நடிகையுடன் பிரபல  மடத்தின் சாமியார் உல்லாசம் 

 இப்படிப்பட்ட செய்திகளை நாம் அன்றாடம் படிக்கின்றோம்.  அரசுப் பொறுப்பாளர்கள்,  ஆன்மீக குருக்கள்,  நிறுவன தலைவர்கள் முதல் பள்ளிக் கூட ஆசிரியர்கள் வரை, தன்னுடைய ஆளுமையில் உள்ளவர்கள் மேல் ஒருவித 'மயக்கும் வலிமை'  கொள்கிறார்கள்.   இது ஊக்கமாகவும் வாழ்வில் மேன்மை தரும் வலிமையாக இருந்தால் நலம் பயக்கும்.

ஆனால் அந்த வலிமையே முறைகேடாக வளரும் போது , விளைவுகள் விபரீதமாகும்.  இதையே கூடா ஒழுக்கமாக வள்ளுவம் எச்சரிக்கிறது.

வலியில் நிலைமையான் வல்லுருவம் , பெற்றம்
புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று . [  28 : 3 ]
{ வலிமை இல்லாதவனின் ஆளுமை , பசு(பெற்றம்) புலியின் தோலைப் போர்த்து மேய்வது போலவாகும். }

தவமறைந்து அல்லவை செய்தல் , புதல்மறைந்து
வேட்டுவன் புள்சிமிழ்ந் தற்று. [ 28 : 4 ]
{ ஆளுமை என்ற போர்வையில் மறைந்து தீயவை செய்தல் , புதற்றில் மறைந்து வேடன் , பறவை(புள்)யை பிடிப்பது போன்றதாகும் }


இத்தகைய 'தலைமை' இருக்கத்தான் செய்யும். எப்படி விழிப்புடன் இருப்பது ?

(1) ஒரே நபர் ஆளுமை கொள்ளாமல், அதிகாரப் பகிர்வும்(Balance of power) செயல்பாட்டு கூறுகள் அமைத்தல்(Seggregation of duties ) போன்றவற்றால் ஓரளவு இதை குறைக்கலாம். இது அனைத்துவிதமான அமைப்புகளுக்கும் பொருந்தும்.

(2) தீர்வு நம் கையில் -
கணைகொடிது ; யாழ்கோடு செவ்விது - ஆங்கன்ன
வினைபாடு பாலால் கொளல்.  [ 28 : 9 ]

வில்(கணை) பார்ப்பதற்கு அழகாக இருந்தாலும் செயலால் கொடிது ; யாழ் வளைந்து வளைந்து இருந்தாலும் இசை இன்பம் தர வல்லது . அதுபோல் ஆளுமை உள்ளவர்களையும் அவரவர்களின் செயலால் அறிய வேண்டும்.
அவர்களை  கண்டு மயக்கமோ,  கொண்டாட்டமோ தேவையில்லை !

Tuesday, January 05, 2010

பொருள்கோள் - 2

இசைத்துப் பாடவும்,  மனனம் செய்யவும்  ஏற்புடையது  பாக்கள். குறட்பாவும் அப்படித்தான்.  அனைத்து குறள்களும் ஒன்று அல்லது இரண்டு வாக்கியங்கள் உடையன.

உதாரணமாக

எண்ணித் துணிக கருமம் ; துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு.  [ 47 : 7 ]

இதில் இரண்டு வாக்கியங்கள் இருப்பதைப் காண்கிறோம்.

முதல் வாக்கியத்தை அமைக்கலாம்.  முதலில் பயனிலையைக் காண வேண்டும்.

துணிக(தொடங்கு).

யார் ? எது ? என்ன ? போன்ற கேள்விகளை இந்த பயனிலையைக் கொண்டு  கேட்டால்  'எழுவாய்' கிடைக்கும். 

துணிக !
நீ துணிக !

(இங்கு 'நீ' என் தோன்றா எழுவாய் ஆகும்)

'எண்ணி' என்ற அடைமொழியை சேர்த்தால் முதல் வாக்கியத்தை

'நீ எண்ணித் துணிக !' என்று கொள்ளலாம்.

மேலும் 'கருமத்தை' என்ற செயப்படுப் பொருளையும் சேர்த்தால்

நீ கருமத்தை எண்ணித் துணிக ! என்று முழுப் பொருளைக் கொள்ளலாம்.

'துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கு' என்ற அடுத்த வாக்கியம் எளிதானது.


 'இழுக்கு'  என்பது பயனிலை.

'எது இழுக்கு ?'  என்ற கேள்விக்கு விடையாக,  'துணிந்தபின் எண்ணுவம்' என்ற சொற்றொடரே எழுவாயாக அமைந்துள்ளது.

செயப்படுப் பொருள் இல்லை.


பெயர்ச்சொல்லும் சில குறட்களில் பயனிலையாக வரும். உதாரணமாக

கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய் மற்றாங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை.  [ வான் சிறப்பு 2 : 5 ]

இக்குறள் ஒரே வாக்கியமாக அமைந்துள்ளது.

' மழை' என்ற பெயர்ச்சொல் பயனிலையாகும்.

எத்தகையது மழை ? என்ற கேள்வியை கேட்டால் வரும் பதில் ('கெடுப்பதும், கெட்டார்க்குச் சார்வாய் மற்றாங்கே எடுப்பதும்'  )எழுவாயாகும்.


கடந்த சில மாதங்களாக இத்தகைய பொருள்கோள் முறையில் குறள்களை நேரடியாக படித்துக் கொண்டிருக்கின்றேன்.  வழக்கில் இல்லாத சில சொற்களை(உதாரணம் : நெடுநீர் - நீண்ட தூக்கம்) மட்டும் அகராதியின் துணைக் கொண்டு பொருள் கொள்ளலாம்.

அது சரி, வழக்கில் இல்லாத சொற்களாக இருந்தால் பரவாயில்லை. அகராதி துணை.  சில சொற்கள் இன்று வழக்கில் இருக்கும் பொருளை குறிக்காமல், அக்காலப் பொருள் கொண்டிருக்கும்.

நாறா மலர்(நறுமணம் இல்லா மலர்) -    'துர்நாற்றம்' என்ற பொருளில் நாற்றம் இன்று வழங்குகிறோம்.

'சூழ்' - இன்று சூழ்ந்து கொள்ளுதல் ( gather around) என்ற பொருளில் மட்டும் இன்று வழங்குகிறோம். ஆனால் 'சூழ்' என்ற சொல் பல குறட்களில் ' நினை' என்ற பொருளில் வழங்குவதை பார்க்கிறோம்.

நிலையஞ்சி நீத்தாருள் எல்லாம், கொலையஞ்சி
கொல்லாமை சூழ்வான் தலை. [ கொல்லாமை 33 : 5 ]

[ சூழ்வான் - நினைப்பவன் ]

இதுவாவது பரவாயில்லை. 'புலையர்' என்ற சொல் இன்று சாதி சார்ந்த சொல்லாக வழங்குகிறது.  ஆனால் திருக்குறளில் 'புலை வினையர்' என்ற சொல் கீழ்ச் செயலை செய்பவன் என்ற பொருளை குறிப்பதாக மட்டும் அமைந்திருப்பதைக் காணலாம்.

கொலை வினையராகிய மாக்கள் புலைவினையர்
புன்மை தெரிவார் அகத்து.  [ கொல்லாமை 33 : 9 ]

Sunday, December 06, 2009

பொருள்கோள்


'கோனார் உரை', பள்ளி பருவத்தில் திருக்குறளுக்கு பொருள் சொன்னது. பொழிப்புரை, கருத்துரை என்று விரிவாக இருக்கும். வளர்ந்த பின் பாவாணரும், இளங்குமரனாரும், கலைஞரும்  பொருள்வளம் கூட்டினர்.

திருக்குறளை இன்னும் ஆழமாக கற்க ஆரம்பித்தபோது நண்பர் சந்திரசேகர், 'பொருள்கோள்' என்று இதுவரை நான் கேள்வியுறாத ஒன்றை கூறினார்.  திருக்குறள் மற்றுமன்றி எந்தவொரு செய்யுளையும் பொருள்கோள் நடையில் அமைத்து பொருள் கொள்ளலாம். அதாவது வாக்கியம், எழுவாய்(எ), செயப்படு பொருள்(செ), பயனிலை(ப) என்று மூன்று பகுதிகளை கொண்டிருக்கும். இம்முறையை பின்பற்றி எந்த ஒரு திருக்குறளையும் நேரடியாக பொருள் கொள்ளலாம் !

அ.கி.பரந்தாமனார்('நல்ல தமிழ் எழுத வேண்டுமா ?' - அல்லி நிலையம், சென்னை) எ-செ-ப  பற்றி என்ன சொல்கிறார் என்று பார்ப்போம் ?  
'பறவை கூட்டைக் கட்டுகிறது ' என்ற வாக்கியத்தில் பறவை என்பது எழுவாய்(வாக்கியத்திற்கு வாயிலாக இருப்பது. கருத்து, பெயர், இடம் போன்றவை) .  கட்டுகிறது என்பது பயனிலை(எழுவாயின் பயனை தன்னிடத்தே கொண்டிருப்பது. பொதுவாக செயலைக் குறிப்பது).  இந்த வாக்கியத்தில் கூடு என்பது  
செயப்படுப் பொருள்.   


சில உதாரணங்கள் :


வா !  -  பயனிலை மட்டும் .  எழுவாயும், செயப்படுப் பொருளும் சொல்லாமல் உணர்த்தப் படுபவை.


முருகன்(எ) அழகன்(ப)  - செயப்படுப் பொருள் இல்லாத உள்ள ஒரு பொது வாக்கியம்.


பல முதலைகளை ஏரியில் பார்த்தேன் - முதலைகள்(எ) , பார்த்தேன்(ப).  ஏரியில் செயப்படு பொருள் போன்று தோன்றினாலும் அதுவும் எழுவாய்க்கு அடைமொழி தான்.  இவ்வாக்கியத்தின் பொருள் கோள் - (நான்) ஏரியில் பல முதலைகளைப் பார்த்தேன் என்று கொள்ளலாம்.


திருக்குறளுக்கு வருவோம்...


அகர முதல எழுத்தெல்லாம் ; ஆதி
பகவன் முதற்றே உலகு.


இதை எ-செ-ப முறை பொருள்கொண்டால்
எழுத்தெல்லாம்(எ) அகரம்(செ) முதல் ; உலகிற்கு(எ) ஆதி பகவன்(செ) முதற்று (ப).
வேறு சில உதாரணங்களை வைத்து திருக்குறள்களை பொருள் கொள்ள முயற்சிப்போம்.
Thursday, June 25, 2009

நொடி(டிவிட்டர்) திருக்குறள்


திருவள்ளுவர் அவர் வாழ்ந்த காலத்தில் புரட்சிதான் செய்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். வெண்பா இலக்கணத்திற்குள் கட்டுப்படாமல் இரண்டு அடிகளில் சுறுக்கென்று சொல்லி வைத்துள்ளாரே !

டிவிட்டர் - மக்களை இணைக்கும் ஒரு புரட்சி கருவி என்று கூறுகிறார்கள். நான் அங்கு சென்று பதிந்தாலும், இன்னும் அவ்வளவாக பழகவில்லை.

ஒரு செய்திக்கு 140 எழுத்துக்கள்தான் அதிகபடி ! அதற்குமேல் அனுமதியில்லை.

திருக்குறள் ஒவ்வொன்றும்

2 அடி
7 சொற்கள்
அதிகமாக 45 எழுத்துக்கள் இருக்கலாம்.

ஆதலால் திருக்குறளை மைக்ரோ-டிவிட்டர் என்று சொல்லலாமா ?

ஆமாம் டிவிட்டர் என்ற சொல்லின் பொருள் என்ன என்று நிகண்டு( Thesaurus) பார்த்ததில்

நொடி என்பது பொருத்தமாக இருக்கிறது  !!!


Thursday, June 11, 2009

அல்லல் பட்டு ஆற்றாது அழுத கண்ணீரை துடைப்போம்...


ஈழத்து தமிழர்கள் பல ஆண்டுகளாக உரிமைப்போர் நடத்து வருகின்றனர்.  அதிலும் கடந்த 6 மாதங்களாக நடைப்பெற்ற துயரங்கள் வாழ்நாளில் மறக்குமா? உலக வரலாற்றில் இல்லாத அளவிற்கு தீக்குளிப்பு, உண்ணாநோன்பு, போராட்டம் என்று பல நடந்தும் , இலங்கை அரசு மிகப்பெரிய வன்முறையை நடத்தி உள்ளது.  தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கை என்ற பெயரில் , ஒரு மிகப்பெரிய நாடகத்தை இலங்கை அரசு அரங்கேற்றி உள்ளது.

300,000க்கும் மேற்ப்பட்ட மக்கள் திறந்தவெளி சிறைச்சாலையில் போதிய உணவு, மருத்துவ, இருப்பிட வசதிகள் இல்லாமல் கைதிகளாக இருக்கின்ற அவலநிலையை நினைக்கும்போது நெஞ்சு பதைக்கிறது. இந்த வடக்குப் பகுதியை தவிர மற்ற இடங்களில் உள்ள தமிழர்கள் முழு உரிமையுடன் இருக்கிறார்களா ? ஊமைகளாகவும், உரிமைகளை இழந்த அடிமைகளாகத் தான் வாழ்கின்றனர். நமது குழந்தைகள் பள்ளிக் கூடங்களுக்கு செல்கையில் - ஈழத்தில் 2 தலைமுறைகள் முறையான கல்வியை பெறாமலே இருக்கின்ற இழிநிலையை என்ன சொல்ல ? நாம் குடும்பத்தோடு வயிறாற உண்ணும்போது ,  பட்டினிக் கொடுமையில் வாடும் எண்ணற்ற குடும்பங்களின் நிலை ?  சுதந்திர சுவாசத்தை நாம் அனுபவிக்கும்போது - அடிமைகளாய் வாழ்வதை தவிர எந்த உரிமையும் இல்லாத ஒரு இனத்தை பற்றி எண்ணும்போது - கொடுங்கோன்மை உருவகமாக இலங்கை அரசு இருப்பதை பார்க்கிறோம்.

சமீபத்தில் ஓய்வு பெறுவதற்கு முன் இலங்கையின் தலைமை நீதிபதி , வன்னியில் உள்ள அவல நிலையை கண்டு 'ஒன்றும் செய்ய முடியாததாக' பேசியுள்ளார். தனது இயலாமையை நினைத்து வருந்தியுள்ளார்.
சரி தீவிரவாதத்தை ஒழித்து வாரங்கள் ஆயிற்று. இலங்கை அரசு பன்னாட்டு தொண்டு நிறுவனங்களை அப்பகுதிக்கு அனுமதிக்க வேண்டியது தானே ? என்ன கொடுமை ?  வெற்றி பெற்ற ஆணவத்தில் சிங்கள அரசினர் திளைக்கலாம். உலக நாடுகளை ஏமாற்றி விட்டதை நினைத்து பெருமை படலாம். ஆனால்....

அல்லல்பட்டு ஆற்றாது அழுதகண்ணீர் அன்றே
செல்வத்தை தேய்க்கும் படை. [ கொடுங்கோன்மை 56 : 5]
(துன்பப் பட்டு அதனை பொறுக்காமால் சிந்தும் கண்ணீர் - எந்தவோர் பேரரசையும் அழிக்கும் படையாகும்)

நாம் என்ன செய்யலாம் ?

Tuesday, January 20, 2009

சனவரி 19-20, 2009


திருக்குறள் தோட்ட்த்தில் பூத்த மலர்கள்

அமெரிக்க வரலாற்றில் சனவரி 20, 2009  ஒரு பொன் நாள்.
அரை நூற்றாண்டுக்கு முன்பு வரை கறுப்பின மக்களை அடிமைகளாக கருதிய இந்த நாடு இன்று ஒபாமாவை தனது தலைவனாக எற்றுக் கொண்டுள்ளது. 50 ஆண்டுகளுக்கு முன் ஒபாமா ஓர் உணவகத்திற்கு சென்றிருந்தால்(அவர் அப்போது பிறந்திருக்கவில்லை), மற்றவர்களுடன் சரிசமமாக அமர்ந்து உண்ணும் சமத்துவ நிலை கூட அன்றில்லை.  இந்த சுதந்திர நிலைக்கு வழி அமைத்தவர் மார்ட்டின் லூதர் கிங் . ஆண்டுதோறும் சனவரி 19 , கிங் அவர்களின் நினைவு கூறும் நாளும் கூட.

வரலாற்றை புரட்டிப் பார்த்தால் மார்ட்டின் லூதர் கிங் மற்றும் அவர் ஆசான் ஹாவர்டு ட்ரூமன் (http://en.wikipedia.org/wiki/Howard_Thurman) இருவரும் அண்ணல் காந்தியடிகளின் அகிம்சை கொள்கையால் எவ்வாறு ஈர்க்கப் பட்டு – உந்த பட்டார்கள் என்பதை அறியலாம். இவர்களின் அற போராட்டங்களின் வெற்றிக் கனியாக ஒபாமாவின் தேர்வை கூறலாம்.தென் ஆப்பிரிக்காவிலும் காந்தியடிகளின் தொண்டு நாம் அறிந்ததே . உரிமைகள் எதுவும் இல்லாமல் உழன்று கொண்டிருந்த தென் ஆப்பிரிக்க இந்திய தொழிலாளர்களுக்கான அற போராட்ட்த்தில் 21 ஆண்டுகள் காந்தியடிகள் போராடினார். அதில் குறிப்பாக 1906- 1914 ஆம் ஆண்டுகளில் ‘ டால்ஸ்டாய் பண்ணை’ (Tolstoy Farm) என்று ஒன்றை அமைத்து தமது அறக் கொள்கைகளை நடைமுறை படுத்தும் கள ஆராய்ச்சிகளை அங்கு செய்தார். இந்த பண்ணை ஓர் சமத்துவ புரமாக அமைந்தது. கிருத்துவர்கள், இசுலாமியர்கள், இந்துக்கள் வசித்தார்கள். குஜராத்தி, இந்தி, தமிழ், ஆங்கிலம் பேசிய 80 குடும்பங்கள் இந்த பண்ணை சமத்துவ புரத்தில் குடியிருந்தனர். இந்த பண்ணை அமைக்க காந்தியடிகளுக்கு வித்தாக அமைந்தது இரசியாவின் தத்துவ ஞானி இலியோ டால்ஸ்டாய்(Leo Tolstoy) புத்தகமும்(Kingdom of God is within You)  அவர் தொடர்பும் தான் .
குறிப்பாக 1909 ஆம் ஆண்டில் டால்ஸ்டாய் ‘இந்துக்கு ஓர் கடிதம்’ என்ற தலைப்பில் திருக்குறள் ‘இன்னா செய்யாமை’ அதிகாரத்தில் இருந்து

சிறப்பீனும் செல்வம் பெறினும் பிறர்க்கின்னா

செய்யாமை மாசற்றார் கோள். [ 32 : 1]
{ The aim of the sinless One consists in acting without causing sorrow to others, although he could attain to great power by ignoring their feelings. }


கறுத்தின்னா செய்த அக்கண்ணும் மறுத்தின்னா
செய்யாமை மாசற்றார் கோள். [32 :2 ]
{ The aim of the sinless One lies in not doing evil unto those who have done evil unto him.}செய்யாமல் செற்றார்க்கும் இன்னாத செய்தபின்
உய்யா விழுமம் தரும். [ 32 : 3]
{ If a man causes suffering even to those who hate him without any reason, he will ultimately have grief not to be overcome.}


இன்னா செய்தாரை ஒறுத்தல் – அவர்நாண
நன்னயம் செய்து விடம் [ 32 : 4]
{ The punishment of evil doers consists in making them feel ashamed of themselves by doing them a great kindness.}


அறிவினான் ஆகுவது உண்டோ , பிறிதின்நோய்
தந்நோய்போல் போற்றாக் கடை. [ 32 : 5 ]
{ Of what use is superior knowledge in the one, if he does not endeavour to relieve his neighbour's want as much as his own? }பிறர்க்கு இன்னா முற்பகல் செய்யின், தமக்கின்னா
பிற்பகல் தாமே வரும். [ 32 : 6]
{ If, in the morning, a man wishes to do evil unto another, in the evening the evil will return to him.}

[ அடைப்புக்குள் இருக்கு ஆங்கில மொழிபெயர்ப்பு , டால்ஸ்டாய் கடிதத்தில் இருந்து அப்படியே].  அந்த கடிதத்தின் முழு படிவம் இதோ..காந்தியடிகளின் அகிம்சை போராட்டங்களுக்கு வித்தாக அமைந்தது டால்ஸ்டாயின் கடிதம்.  திருக்குறள் வாழ்வியல் நெறிகளை கற்றுணர்ந்து தென் ஆப்பிரிக்காவிலும், இந்தியாவிலும் வெற்றிக் கண்டார்.

காந்தியடிகளின் ஆப்பிரிக்க போராட்ட்த்தின் பல ஆண்டுகளுக்கு பின் நெல்சன் மண்டேலா தீவிரவாத விடுதலையில் தன்னை ஈடுபடுத்தி கொண்டவர், பின்னர் காந்தியின் அகிம்சை/ஒத்துழையாமை கொள்களை பின்பற்றி பல ஆண்டுகள் அறப் போராட்டங்கள் மூலம் தென்னாப்பிரிக்காவின் இனவிடுதலையை முழுமை செய்தார் என்பது வரலாறு சொல்லும் (http://www.tolstoyfarm.com/mandela_on_gandhi.htm)இப்படி இந்திய, தென் ஆப்பிரிக்கா, மற்றும் அமெரிக்காவில் கடந்த 100 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்ற அறபோராட்ட வெற்றிகளுக்கு வித்திட்டவர் அண்ணல் காந்தியடிகள் என்றால், அத்தகைய வித்தின் கருவாக அமைந்தது திருக்குறள் என சொல்லலாம். 


இன்றும் உலகம் முழுவதும் இன விடுதலைப் போராட்டங்கள் தொடர்கின்றன. தமிழீழ விடுதலைப் போராட்டம் 40க்கும் மேற்பட்ட ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.  அங்கு அமைதி வழியில் தமிழின மக்கள் விடுதலை பெற்றிட வேண்டும்.

அமைதி சூழ்க !