Saturday, December 06, 2008

மாற்றி யோசி !
'இனிமேல் இயற்பியலில் புதிதாக கண்டுபிடிக்க வேண்டியது ஒன்றுமில்லை'  - 1900 ஆம் ஆண்டு கெல்வின் பிரபு என்ற ஆங்கிலேய விஞ்ஞானி ஒரு அறிவியல் மாநாட்டில் அறிவித்தார். ஆனால் சில ஆண்டுகளிலேயே அறிவியல் ஆராய்ச்சியில் விடிவெள்ளியாக ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் குவாண்டம் தத்துவம் பெரியதோர் புரட்சியை ஏற்படுத்தும் யாரும் எதிர்பார்த்திருக்க முடியாதது தான் !

1900 -1905 ஆண்டுகளில் குவாண்டம் தத்துவத்தை  ஐன்ஸ்டீன் வெளியிட்ட போது கல்லூரி படிப்பை மட்டுமே முடித்திருந்தார்.  இதை அடிப்படையாக வைத்து அவர் எவ்வளவு முயன்றும் முனைவர் பட்டத்தை அவரால் பெற முடியவில்லை. குவாண்டம் - முனைவர் பட்ட படிப்புக்கு தகுதியான தலைப்பு இல்லை என்று ஆய்வு குழுவால் நிராகரிக்க பட்டது. என்ன விநோதம் ! முனைவர் பட்டம் பெறாவிட்டால் பல்கலையில் ஆசிரியர் வேலை கிடைக்காது. என்ன செய்வது என்று யோசித்தார் ஐன்ஸ்டீன்.

ஏப்ரல் 1905 -  சூரிக் பல்கலைக் கழகத்தில் 'அணுக்கூட்ட பரிமாணங்களின் புதிய கணிப்பு' ( 'A New Determination of Molecular Dimensions' ) என்ற தலைப்பில் ஆராய்ச்சிக் கட்டுரை சமர்ப்பித்தார்.  அதுவே ஐன்ஸ்டீனுக்கு முனைவர் பட்டத்தை பெற்று தந்தது. 

ஒல்லும் வாயெல்லாம் வினைநன்றே - ஒல்லாக்கால்
செல்லும் வாய்நோக்கிச் செயல்.  [ வினை செயல்வகை 68 : 3 ]

அனைத்து வழிகளிலும் முயன்று செயல்படு.  முடியவில்லை என்றால், மாற்று வழியில் செயல்படுத்து !

Tuesday, August 26, 2008

ஏறும்பும் வெட்டுக்கிளியும்

அழகிய சோலை ஒன்றில் எறும்புகளும் வெட்டுக்கிளிகளும் கூட்டமாக வாழ்ந்து வந்தன.  அப்போது கோடை காலம்.  அந்த வெயிலிலும் வியர்வை சிந்தி தானியங்களை சேகரித்து வந்தன எறும்புகள்.  வெட்டுக்கிளிகளோ ஆட்டமும் பாட்டமும் ஆக மகிழ்ச்சியில் திளைத்திருந்தன.

அப்படி அந்த வழியே தானியத்தை சுமந்து சென்ற எறும்பு ஒன்றிடம், "இந்த கடின உழைப்பால் என்ன பயன்? வந்து எங்களுடன் கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளுங்கள் " என்றது ஒரு வெட்டுக்கிளி.

" வருகின்ற குளிர்காலம் கடுமையாக இருக்கும் என்று நேற்றுக்கூட வானிலை அறிவிப்பில் பார்த்தேன். அதனால் சற்று அதிகமாக நாங்கள் இப்போது உழைக்கிறோம். நண்பர்களே, நீங்களும் எங்களுடன் சேர்ந்து தானியங்களை சேமித்திடுங்கள் " என்றது அந்த எறும்பு.

" குளிர்காலத்தை பற்றி இப்போது என்ன கவலை? தற்போது உண்பதற்கு நிறைய தானியங்கள் உள்ளனவே!" என்றது வெட்டுக்கிளி ஆடியபடியே.

" உன்னிடம் பேசி பயன் இல்லை" என்றபடியே அங்கிருந்து நகர்ந்தது எறும்பு.

கடுமையான குளிர்காலம் வந்தது.  உணவு தட்டுப்பாட்டால் பட்டினிக்கு உள்ளானது வெட்டுக்கிளிகள். அதே நேரத்தில்  சேமித்த தானியங்களை  எறும்புகளை பொறுப்பாக பகிர்ந்து உண்பதை பார்த்த வெட்டுக்கிளிகள்...


வருமுன்னர் காவாதான் வாழ்க்கை, எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும். [ குற்றம் கடிதல் 44 : 5 ]
{ வருமுன்னர் காத்துக் கொள்ளாதான் வாழ்க்கை, தீ முன்னர் வைத்த பஞ்சு போல் அழிந்து விடும் }

முன்னுறக் காவாது இழுக்கியான் தன்பிழை
பின்னூற இரங்கி விடும் [ பொச்சாவாமை 54 : 5 ]
{வருமுன்னர் தீமையை காக்க தவறினால் அதுபின்னர் பன்மடங்காக துன்பம் தரும்}

Friday, August 08, 2008

பழக்கங்கள்

அரசு - நகரத்தில் நிறுவனம் ஒன்றில் வேலை செய்பவன். உடன் வேலை செய்யும் தன் நண்பர்களோடு வாடகை வீட்டில் தங்கி இருந்தான். திருமண வயது வந்ததும் அரசுவிற்கு பெண் பார்க்க ஆரம்பித்தனர் அவன் பெற்றோர். அப்படி பார்த்த ஒரு பெண் வீட்டார், அவனை பற்றி தீர விசாரிக்க ஆரம்பித்தனர். வேலை மற்றும் அவன் சுற்றத்தில்.

அரசுவின் நண்பன் ஒருவனிடம் விசாரிக்கும்போது,

" அரசு நல்ல பையன். என்ன அவனுக்கு நிறைய நண்பர்கள். அவனிடம் ஒரே ஒரு கெட்டப் பழக்கம் உண்டு. நண்பர்களிடம் கொஞ்சம் சண்டை போடுவான்"

" பராவாயில்லை.யார்தான் சண்டை போடுவதில்லை. எப்பப்ப சண்டை போடுவார் ?" - பெண் வீட்டார்.

" கோபம் வரும்போதெல்லாம் சண்டை போடுவார்" - நண்பன்

" எப்பப்ப கோபம் வரும்?" - பெண் வீட்டார்.

" போதை மருந்து உள்ளே போனால் கோபம் வரும்" - நண்பன்

" !! @# எப்பப்ப போதை மருந்து உபயோகிப்பார்? - - பெண் வீட்டார்.

" சூது ஆடும் போதெல்லாம் " - நண்பன்

" %#@# எப்பப்ப சூதாடுவார் ? " - பெண் வீட்டார்

" மது உள்ளே போகும் போதெல்லாம்" - நண்பன்

" !@# எப்பப்ப மது அருந்துவார் ? " - பெண் வீட்டார்

" பெண் உடன் இருக்கும் போதெல்லாம்" - - நண்பன்

" !@#^&&!!@ "

நட்பு என்றால் நண்பர்கள் தான் நினைவிற்கு வருவார்கள். ஆனால் பலவித பழக்க வழக்கங்களுடன் நாம் நட்பாக இருக்கிறோம். அவை நன்மையா தீமையா என்பது அதன் விளைவுகளை வைத்துப் பார்க்க வேண்டும்.

திருவள்ளுவர் 79-95 அதிகாரங்களில் நம்மை பெரும்பாலும் பிணைத்திருக்கும் பழக்கங்களை(நட்புக்களை) பற்றி கூறுகிறார்:
79 - நட்பு
80 - நட்பு ஆராய்தல்
81 - பழைமை ( seasoned friendship)
82- தீ நட்பு
83 - கூடா நட்பு
84 - பேதைமை ( foolishness)
85 - புல் அறிவாண்மை ( அற்ப அறிவு - stupidity)
86 - இகல்( மாறுபாடான எண்ணம்)
87- பகை மாட்சி (பகையின் சிறப்பு)
88 - பகைத் திறம் தெரிதல்
89 - உட்பகை
90 - பெரியாரைப் பிழையாமை
91 - பெண்வழிச் சேறல்
92- வரைவின் மகளிர்( பொது மகளிர் - prostitutes)
93 - கள்ளுண்ணாமை ( கள் - மதுபானம்)
94 - சூது
95 - மருந்து

இந்த 17 அதிகாரங்களில் நம் அனைத்து பழக்கங்களையும்(நட்புகளை) வைத்து விடலாம். இத்தோடு இன்று இணையம்/அலைபேசி/தொ(ல்)லைக்காட்சி/விளையாட்டு(video gaming) போன்ற பழக்கங்களை சேர்க்கலாம். அல்லது மேலே பட்டியலிற்ற ஒன்றில் சேர்க்கலாம்.


உயிர் காப்பது மருந்து. ஆனால் அதுவே மிகுந்தால், போதைக்கு அடிமை.

பயனுள்ளது இணையம். ஆனால் அளவு அதிகமானால் நேரம் வீணாவது மட்டுமன்றி, இதுவும் நம்மை அடிமை படுத்த வல்லது.

ஒருவரின் சிகிச்சைக்கோ, அல்லது மருந்தாகவோ மது பயன் படுகிறது. ஆனால் மதுவின் பயன்பாடு அதிகமானால் அடிமைத்தனம்.

நல்லோர் நட்பு இனியது. தீ நட்பு நம்மை அழிக்க வல்லது.

Friday, July 25, 2008


நட்பின் அளவுகோல்



இது ஒரு பழைய கதை. ஓர் ஊரில் வளவன், கவின் என்ற இரு நண்பர்கள் இருந்தார்கள். பள்ளிக்கூடம் செல்ல ஒரு காட்டைக் கடந்துப் போக வேண்டும். அப்படி ஒரு நாள் காட்டைக் கடக்கும்போது, கரடி தூரமாக வருவதை பார்த்து விட்டனர். இவர்களுக்கு கையும் ஓடவில்லை. காலும் ஓடவில்லை. உடனடியாக வளவன் ஓடிப்போய் அருகில் உள்ள உயர்ந்த மரம் ஒன்றில் ஏறிக்கொண்டான். கவினுக்கோ மரம் ஏறத் தெரியாது. என்ன செய்வதென்று தெரியவில்லை ! பிழைத்துக் கொள்ள ஒரு வழி அவனுக்கு தோன்றியது. அந்த மரத்தின் கீழேயே படுத்துக் கொண்டான். கரடி கிட்டே வர வர, அவன் மூச்சை விடாமல் இறந்தவன் போல் படுத்திருந்தான். கரடியும் கிட்டே வந்தது. கவினை முகர்ந்துப் பார்த்தது. பிறகு சென்று விட்டது. கரடிதான் இறந்தவர்களை உண்ணாதே !

கரடி வெகுதூரம் போனபின், மரத்தின் மேலே இருந்த வளவன் கீழே இறங்கி வந்தான். இருவரும் 'அப்பாடா, தப்பித்தோம்' என்று நிம்மதியுடன் பள்ளிக்கூடத்தை நோக்கி நடந்தனர். அப்போது வளவன், ' கவின், நீ கீழே படுத்திருக்கும் போது கரடி உன் காதருகே ஏதோ சொன்னது போல் இருந்ததே ! என்ன ? " என்று கேட்டான்.

அதற்கு கவின், " கரடி என்னிடம் ஓர் இரகசியம் கூறியது. துன்பத்தில் உன்னை விட்டு போய்விடுபவர்கள் நண்பர்கள் அல்ல. துன்பம் வரும் போது ஒரு நன்மை உறுதியாக கிடைக்கும் - உண்மையான நண்பர்களை கண்டுகொள்ளும் அளவுகோல் ! " . இதை கேட்ட வளவன் வெட்கி, தலைக் குனிந்தான்.

கேட்டினும் உண்டோர் உறுதி ; கிளைஞரை
நீட்டி அளப்பதோர் கோல்.
[ நட்பு ஆராய்தல் 80 : 6]
{ கேடு - துன்பம் ; உறுதி - நன்மை ; கிளைஞர் - நண்பர் ; கோல் - அளவுகோல்}
நண்பரை நீட்டி அளக்கின்ற அளவுகோல், துன்பத்தில் நன்மையாக பெறலாம்.


திருமணம் ஆன மனைவி தன் கணவனிடம் கேட்டாள், " உங்கள் உற்ற தோழர் திருமணத்திற்கு வரவே இல்லையே?"
அவன் கூறினான், " எனக்கு துன்பம் வந்தால், அவன் என்கிட்டே வரவே மாட்டான் !" . இது எப்படி இருக்கிறது ? சென்ற வார விகடனில் படித்தது.

Thursday, July 10, 2008

வீரப் பெண்ணின் கதை

போர் துயரமானது. பல ஆண்டுகளாக விடுதலை போராட்டம் நடந்து வரும் மண். அந்த மண்ணின் பெருமைக்கு பெருமை சேர்க்கும் தாயின் கதை இது. இரண்டு ஆண்டுகளுக்கு முன் நடந்த போரில் அவளின் தந்தை தனது முகாமை நோக்கி வந்த பீரங்கிகளை அழித்து தானும் அழிந்து போனான்.
சென்ற ஆண்டில் அவளின் கணவன் எதிரிகள் வந்த கப்பலை தாக்கி வீர மரணம் எய்தினான்.

அவளின் ஒரே மகன் - திருமணமாகி சில ஆண்டுகளே ஆகிய வீரத் திருமகன். விடுதலை கிடைத்து அமைதி மலராதா என்ற ஏக்கத்தில் தாய் !அமைதியை விரும்பாத எதிரிகள் சூழ்ச்சியும் அடக்குமுறையும் தொடர்ந்து வந்த நிலையில் தன் ஒரே மகனை அழைத்து கையில் வேலை ஒத்த துப்பாக்கியை கொடுத்து தூய ஆடை அணிவித்து, தன் கையாள் உணவு ஊட்டி, தலைக்கு எண்ணெய் தடவி வாரிவிட்டு, " போர்க்களம் நோக்கி செல்" என்று சொல்கிறாள் அந்த தாய் !

கெடுக சிந்தை; கடிது இவள் துணிவே;
மூதில் மகளிராதல் தகுமே;
மேல்நாள் உற்ற செருவிற்கு இவள் தன்னை(தந்தை)
யானை எறிந்து, களத்து ஒழிந்தனனே;

நெருநல் உற்ற செருவிற்கு இவள் கொழுநன்
பெருநிரை விலங்கி, ஆண்டுப் பட்டனனே;

இன்றும், செருப் பறை கேட்டு, விருப்புற்று , மயங்கி,
வேல் கைக்கொடுத்து, வெளிது விரித்து உடீஇ
பாறு மயிர்க் குடுமி எண்ணெய் நீவி,
ஒரு மகன் அல்லது இல்லோள்.
'செருமுகம் நோக்கிச் செல்க' என விடுமே !
{ நெருநல் - நேற்று , செரு- போர் }
[ புறநானூறு 279 ; வாகை திணை ; ஒக்கூர் மாசாத்தியார் என்ற பெண் புலவர் பாடியது]

போரின் போது கைப்பற்ற படுபவர்கள் ஒன்று சிறை போவார்கள். அது பெருமை. ஆனால் எதிரியின் வஞ்சனைக்கு ஆட்பட்டு அவர்களுக்கு துணை போவது , அறை போதல் ஆகும். இது சிறுமையிலும் சிறுமை. அப்படி அறை போகாது, வழி வழியாக வந்த வீர மரபில் வலிமையுற்று திகழ்வர் சிறந்த வீரர்.

அழிவின்று அறை போகாதாகி வழிவந்த
வன்கண் அதுவே படை.
[ படைமாட்சி 77 : 4 ]
{வழிவந்த - பரம்பரையாக ; வன்கண் - வலிமை }

ஜூலை 4 - அமெரிக்க சுதந்திர தினம். பிரிட்டனிடம் இருந்து அமெரிக்க விடுதலைக்கு போராடி இன்னுயிர் நீத்த வீரர்கள் நினைவாக எழுதிய கட்டுரை இது. இன்றும் இன விடுதலைக்காக உலகெங்கும் போராடும் வீரர்களை நினைவு கூர்வோம்.

Monday, June 23, 2008

கிழமை ( Date)

வள்ளி அமெரிக்காவில் வாழும் இரண்டாம் தலைமுறை இளம்பெண். அழகானவர். படிப்பிலும் சுட்டி. கலிபோர்னியாவில் உள்ள அரசுப் பள்ளியில் 12ம் வகுப்பு படிப்பவர். வள்ளியின் பெற்றோர்கள் 1990 களில் வேலைக்காக கலிபோர்னியாவிற்கு வந்தவர்கள். தனது பெண்ணை சுதந்திர உணர்வோடு ஒழுக்கத்தையும் ஊட்டி வளர்த்தார்கள்.

அழகும் அறிவும் ஒன்றே இருந்தால் அவள் மீது அவள் கூட படிக்கும் விடலைப் பையன்களுக்கு என்றும் தனிக் கவனம்தான் ! அதுவும் பாட்ரிக்கு சொல்லவே வேண்டாம். வள்ளி எந்த திட்டத்தில் சிறப்பு பெற்றாலும் சென்று மனம் திறந்து பாராட்டுவான். சென்ற ஆண்டு 'தேசிய அறிவியல் கழகம்' நடத்திய போட்டியில் வள்ளி இரண்டாம் பரிசைப் பெற்றபோது தானே அலங்கரித்த மலர்க் கொத்துடன் வள்ளியின் வீட்டுக்கு சென்று கொடுத்தான்.

ஒருநாள் மாலை பாட்ரிக் வள்ளியிடம் சென்று , " இந்த வாரம் வெள்ளிக் கிழமை என்ன செய்கிறாய்? நாம் இருவரும் ஒன்றாக வேளியே செல்லலாமா? திறந்த வெளி அரங்கில் ஒரு பெரிய இசைநிகழ்ச்சி நடக்கிறது. அங்கு கூட செல்லலாம். உனக்கு விருப்பம் இருந்தால்....." என்றான்.

வள்ளிக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை. நெஞ்சு படபடத்தது. சில முறைகள் நண்பர்கள் குழுவுடன் திரைப்படம், மலையேற்றம் என்று சென்றிருக்கிறாள். ஆனால் தனியாக ஓர் ஆண் நண்பனுடன் சென்றதில்லையே. அம்மா, அப்பா இதை அனுமதிப்பார்களா? என்றெல்லாம் குழம்பினாள்.

" நான் ஒன்றும் தவறாக கேட்கவில்லையே ? வேண்டுமானால் யோசித்து நாளை பதில் சொல், வள்ளி" பேட்ரிக் சொல்லிக் கொண்டே தனது கைப்பேசியில் ஒரு குறுஞ்செய்தி வர, " சரி வள்ளி , நான் அவசரமாக கிளம்ப வேண்டும். இன்றைய கூடைப் பந்து பயிற்சியை பற்றி மறந்தே போனேன். உன்னுடன் பேசும் சுவாரசியத்தில்.. நாளை சந்திப்போம்" என்று பறந்தே போனான் அவனது சறுக்குப் பலகையில்(skate board) .

சற்று யோசித்ததில் வள்ளிக்கும் அந்த இசை நிகழ்ச்சிக்கு போக வேண்டும் என்று ஆசை. அதுவும் பேட்ரிக் நல்ல பையன். அவனை பற்றி தவறாக மற்றவர்கள் பேசி அவள் கேட்டதில்லை. பள்ளிக் கூடத்தில் என்னென்ன கூத்து நடக்கின்றது. சே ! சென்ற வாரம் கூட 11ம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவி பள்ளிக் காவலிடம் புகார் செய்ய வேண்டிய நிலை. அந்த பெண்ணை கிழத்தியவன்(dating) வன்புணர்ந்து விட்டானாம். என்ன கொடுமை ! என்று நினைத்தவாறு தன் மிதிவண்டியில் வீடு வந்து சேர்ந்தாள் வள்ளி. அப்பா இன்னும் வேலையில் இருந்து வரவில்லை. தம்பி தன் அறையில் டி.எஸ் விளையாடிக் கொண்டிருந்தான். அம்மா இணையத்தில் அந்த வார தமிழ்ப் பத்திரிக்கை ஒன்றை படித்துக் கொண்டிருந்தாள். " வாடா கண்ணா. முகம் கழுவி வா. உனக்கு பிடித்த டீ போட்டு வைக்கிறேன்" என்றவாரே அந்த இணைய இதழை மூடினார் அம்மா.


" அம்மா, உன்னிடம் ஒன்று கேட்பேன். இந்த வெள்ளிக் கிழமை பேட்ரிக்குடன் இசை நிகழ்ச்சிக்கு செல்லவா? மாலை 6 மணிக்குத்தான். அதற்குள் படிப்பு வேலையெல்லாம் நிச்சயமாக முடித்து விடுவேன்." என்றாள்.

அம்மா வள்ளியின் கண்களைப் பார்த்தாள். பிறகு " சரி சென்று வா. இரவு 11 மணிக்கெல்லாம் வந்து விட வேண்டும். அப்பாவிடம் ஒரு வார்த்தை கேட்டு விடுகிறேன்" என்றாள். வள்ளிக்கு ஒரே மகிழ்ச்சி. அம்மா அப்பாவிடம் கேட்டால் அவர் இல்லையென்றா சொல்லப் போகிறார் என்று நினைத்துக் கொண்டால் வள்ளி !

வெள்ளிக் கிழமை வந்து சேர ஏதோ மூன்று மாதம் ஆவது போல் இருந்தது வள்ளிக்கு. என்ன சட்டை.. எந்த வாசனை திரவியம்... நகை, செருப்பு என்ற அனைத்தையும் மனதினில் தீட்டி வைக்க ஆரம்பித்தாள்.


வெள்ளிக் கிழமை வள்ளியும் பேட்ரிக்கும் வீட்டருகில் உள்ள சிடார்பக்ஸில்(Starbucks) சந்தித்தனர். இருவருக்கும் பிடித்த மோக்கா வாங்கிக் கொண்டு பொதுப் பேருந்தில் ஏறி அமர்ந்தனர். நிகழ்ச்சி முடிந்தவுடன் வள்ளியை அவள் அப்பா அந்த அரங்கத்திலேயே வந்து அழைத்துக் கொள்வதாக திட்டம்.

ஆயிரக் கணக்கான இளைஞர்கள் அந்த அரங்கில் கூடியிருந்தனர். பள்ளிக் கூடம், கூடைப் பந்து என்று பல பேச்சுக்களினிடையே, " ஒபாமா வெற்றி பெருவாரா" என்று கேட்டாள் வள்ளி. பேட்ரிக்கு அரசியலில் அவ்வளவு ஆர்வம் இல்லை. அவனுக்கு பிடித்ததெல்லாம் விளையாட்டுதான். அதிலும் மலையேற்றம், கூடைபந்து, சறுக்கு என்றால் அவனுக்கு உயிர். மேடையில் உச்சத்தில் பாடிக் கொண்டிருந்தால் அந்த பாடகி. கூட்டம் ஆர்பரித்து அந்த பாடல்களை இரசித்துக் கொண்டிருந்தது. அப்போது பேட்ரிக் நெருங்கி வந்து வள்ளியின் கரங்களை பற்றிக் கொண்டான். வள்ளி இதை சற்றும் எதிர்பார்க்க வில்லை. தனது கைகளை விலக்கிக் கொண்டாள். சில நிமிடங்கள் கழித்து இன்னும் நெருக்கமாக பேட்ரிக் வந்தபோது, " பாட்ரிக், நீ எனது நல்ல நண்பன். பேசலாம். பழகலாம். நெருக்கத்தை தவிர்க்கலாமே. " என்றால் வள்ளி. இதைக் கேட்ட பேட்ரிக்கிற்கு சுருக்கென்று இருந்தது.

புணர்ச்சி பழகுதல் வேண்டா ; உணர்ச்சிதான்
நட்பாம் கிழமை தரும் [ நட்பு 79 : 5]
{ தொட்டுப் பழகுதல் என்பது வேண்டும் என்றில்லை. ஒத்த எண்ணத்தால் பழகுவதே சிறந்த நட்பு ஆகும்}


அமெரிக்காவில் பள்ளிக்கூட மாணவர்கள் குறித்த தகவல் இது. 8வது, 9வது படிக்கும் மாணவர்களில் சுமார் 72 % டேட்டிங்( கிழமைத்தல், அல்லது கிழத்தல் என்று தமிழில் சொல்லலாம்) ஈடுபடுகிறார்கள். இதில் 54% பேர் ஏதோ ஒரு வன்முறைக்கும் ஆளாகிறார்கள். இப்படி வன்முறைக்கு உட்படும் மாணவியர்களில் 80% பேர் தொடர்ந்து அதே நண்பர்களுடன் நட்பை தொடர்கிறார்கள். என்ன கொடுமை !

Monday, May 19, 2008

இவர் இப்படித்தான் !

அமெரிக்க விமான நிலையம் ஒன்றில் இன்னொரு ஊர் செல்வதற்காக ஓர் பெண் காத்திருந்தார். அவர் செல்லும் விமானம் கிளம்ப இன்னும் இரண்டு மணிநேரங்கள் இருந்தன. என்ன செய்வது ? அருகில் உள்ள புத்தக கடைக்கு சென்று இரண்டு புத்தகங்களும், ஒரு பிஸ்கட் பாக்கெட்டும் வாங்கினார். வந்து தன் இருக்கையில் அமர்ந்தார். அவருக்கு அருகில் ஓர் ஆள் அமர்ந்திருந்தார். வாட்ட சாட்டமாக இருந்தார். பார்ப்பதற்கு முரடனாகவும் இருந்தார். கறுப்பர் வேறு.

அந்த பெண் அமர்ந்திருந்த இருக்கைக்கும் அந்த ஆண் அமர்ந்திருந்த இருக்கைக்கும் சற்று இடைவெளி. அந்த இடைவெளியில் பிஸ்கெட் உள்ள பையை வைத்தார். பை திறந்திருந்தது. பெண் தான் வாங்கிய புத்தகம் ஒன்றை திறந்து ஈடுபாட்டுடன் படிக்க ஆரம்பித்தார். சிறிது நேரத்தில் பார்த்தால்… பக்கத்தில் இருந்த பையின் அருகே, திறந்த நிலையில் பிஸ்கட் பாக்கெட் ! அந்த ஆள் ஒன்று.. இரண்டு என்று பிஸ்கெட்டுகளை சாப்பிட்டுக் கொண்டிருந்தார். 'என்ன இந்த மனிதன் ! கருப்பு இன மனிதர்களே இப்படிதான். பண்பே இல்லாமல் , மற்றவர் பிஸ்கட்டுகளை சாப்பிடுவதை என்ன சொல்வது' ' என்று மனதில் நினைத்தவாறு இந்த பெண்ணும் அந்த பிஸ்கட்டுகளை சாப்பிட ஆரம்பித்தார். நாகரிகம் கருதி அவரிடம் எதுவும் சொல்லவில்லை. அந்த ஆணும் சாப்பிட்டுக் கொண்டே இருக்கிறார். இந்த பெண்ணும் சாப்பிட்டுக் கொண்டே இருக்கிறார். இந்த பெண்ணுக்கோ மனதுக்குள் கோபம். எரிச்சல். தான் வாங்கி வந்த உணவுப் பொருளை தன் அனுமதி இல்லாமல் தெரியாத ஒருவன் சாப்பிடுவதா? முன்னை விட சற்று வேகமாக பிஸ்கட்டுகளை சாப்பிட்டார் அந்த பெண்.

கடைசியில் அந்த பாக்கெட்டில் ஒரே ஒரு பிஸ்கட் மட்டும் இருந்தது.
'சரி, இந்த அற்ப மனிதன் என்ன செய்கின்றான் என்று பார்ப்போம்' என்று நினைத்த அந்த பெண் அமைதியாக இருந்தார். அந்த ஆண் அந்த கடைசி பிஸ்கெட்டை கையில் எடுத்து இரண்டாக உடைத்து ஒன்றை சாப்பிட ஆரம்பித்தார். பொறுமை இழந்த அந்த பெண், வெடுக்கென்று அவன் கையிலிருந்த இன்னொரு பாதியை பிடுங்கி சாப்பிட்டார். 'என்ன அநாகரிகமான மனிதன் இவன் !' என்று கரித்துக் கொண்டார்.

சற்று நேரத்திற்கு பிறகு விமானம் கிளம்பும் நேரம் வந்ததும், இந்த பெண் விமானத்தில் சென்று அமர்ந்தார். நல்ல வேளை அந்த ஆள் வேறோரு விமானம் போல! இப்படி முன்பின் தெரியாத ஒரு ஆளிடம் இருந்து தப்பித்து வந்தோமே என்று நிம்மதி பெருமூச்சு விட்டு தனது இருக்கையில் அமர்ந்தார். தன் புத்தகத்தை படிக்கலாமே என்று எண்ணி அவர் பையை திறந்த போது அவருக்கு மிகப்பெரிய அதிர்ச்சி ! அவர் வாங்கிய பிஸ்கெட் பாக்கெட் பிரிக்கப்படாமல் அப்படியே அவர் பையில் இருந்தது ! ‘நாம் புத்தகம் படிக்கின்ற ஆர்வத்தில், அந்த மனிதரை எவ்வளவு தவறாக நினைத்தோம்? தோற்றங்களை வைத்து எவ்வளவு தவறாக மதிப்பீடு செய்து விட்டோம். அவரிடம் அநாகரிகமாக நடந்து கொண்டோம். ஆனால் அவருக்கு எவ்வளவு பெரிய மனம்.’ என்ற எண்ணங்களோடு, அடடா! அவரிடம் மன்னிப்பும் கேட்க முடியாதே என்று தன் செயல் கண்டு அந்த பெண் வருந்தும்போது விமானம் வானத்தை நோக்கி சீறிக் கொண்டி கிளம்பியது.


இந்த கதையை கி.வீரமணி எழுதிய 'வாழ்வியல் சிந்தனைகள்' என்ற புத்தகத்தில் படித்தது. நாம் மனிதர்களை அவர்கள் இனம், நிறம், நாடு, சாதி, மதம், பால், தோற்றம் போன்றவற்றால் ஒருவரை பார்த்தவுடன்
* உயர்ந்தவர் -தாழ்ந்தவர்
* சரியானவர் - தவறானவர்

* அறிவுடையோர் - அறிவிலார்
..... ......
..... ......
முடிவுகளை(Judgement) நம் மனதில் எடுத்துவிடுகிறோம் என்பதை நினைக்கும்போது வியப்பாக உள்ளது.


ஒரு வில்லின் அம்பை பார்க்கிறோம். 'நேராக இருக்கிறதே' என்று வியந்து போற்றினால் நமக்கு கேடாகி விடும். ஆனால் யாழ் கருவியை பார்க்கிறோம்(இன்று இது புழக்கத்தில் இல்லாவிட்டாலும் ஹார்ப் இசைக்கருவி http://etc.usf.edu/clipart/6100/6110/egypt_harp_1_lg.gif போன்று இருக்கும் என்று கற்பனை செய்துகொள்ளலாம்) இது வளைந்துள்ளது. ஆதலால் யாழ்க் கருவி மோசம் ! என்று முடிவு செய்வது எவ்வளவு தவறு !

கணைகொடிது ; யாழ்கோடு செவ்விது ; ஆங்கன்ன
வினைபடு பாலால் கொளல். [ கூடா ஒழுக்கம் 28 : 9 ]


ஒருவரை 'சிறந்தவர், சிறப்பில்லாதவர்' என்று அவசரமாக முடிவெடுத்தால், அது அவரை அமர்த்தும் பணிக்கும் கேடாக அமையும் அல்லவா?

அறிந்தாற்றிச் செய்கிற்பாற்கு அல்லால் வினைதான்
சிறந்தான்என்று ஏவற்பாட்டு அன்று. [ தெரிந்து வினையாடல் 52 : 5]

ஒருவரை அறிந்து , அவர் ஆற்றும் செயலை ஆய்ந்து, அதன் முடிவுகளை வைத்து 'இவன் வினையின் சிறந்தார்' என்று முடிவு செய்தல் எவ்வளவு பயனுள்ளதாக அமையும்.



Tuesday, May 06, 2008

யாருக்கு ஊனம் ?

எனக்கெல்லாம் கால்கள் நன்றாக இருந்தும் சில தூரம் ஓடினால் மேலும் கீழும் மூச்சு வாங்குகிறது. இந்த மனிதரை பாருங்கள். இரண்டு கால்களும் இல்லை. காலில் இறக்கை கட்டி பறக்கிறார்...

http://en.wikipedia.org/wiki/Oscar_Pistorius

சீன ஒலிம்பிக் போட்டியில் இவரை அனுமதிக்கவில்லை. இருப்பினும் விடாப்பிடியாக முயல்கிறார். சென்ற வாரம் டைம் பத்திரிக்கை கூட '100 சிறந்த ஆள்வினையார்கள்' (100 most influencial persons) பட்டியலில் இவரை சேர்த்திருக்கிறது. வாழ்க அவர் ஆள்வினை !

பொறியின்மை யார்க்கும் பழியன்று - அறிவறிந்து
ஆள்வினை இன்மை பழி [ ஆள்வினை உடைமை 62 : 8 ]

(ஊனம் ஒரு குறையன்று. உறுப்பிருந்தும் அறிவுடன் முயற்சியில்லாமல் இருப்பது குறையாகும். ஆள்வினை - முயற்சி )








Monday, April 21, 2008

65 72 73


'65 72 73' என்று என் நண்பர் ஒருவரை அழைத்தேன். அவர் டேல் கார்னகி, டோஸ்ட்மாஸ்டர் என்ற பயிற்சிகளையெல்லாம் எடுத்தவர். திருக்குறளை ஆழ்ந்து படித்தவர். தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் நன்றாக மேடையில் பேசக்கூடியவர்.

உடனே அவர், " நீங்கள் எப்போது தொழிலை மாற்றினீர்கள்? எண் சோதிடமெல்லாம் சொல்கிறீர்" என்றார்.

" அதெல்லாம் இல்லை. திருக்குறளில் 65, 72, 73 ம் அதிகாரங்கள் என்ன ?" என்றேன் நான்.

" 65 - சொல்வன்மை
72 - அவை அறிதல்
73 - அவை அஞ்சாமை " உடனடியாக பதில் கூறினார்.

" இந்த மூன்றும் அமைந்தால் சிறந்த பேச்சாளர் தானே. அதனால்தான் உங்களை இனிமேல் 65 72 73 என்று அழைக்கலாம் என்று உள்ளேன்." என்றேன் !!


முத்தமிழ் அறிஞர் கி. ஆ.பெ.விசுவநாதன் 50 ஆண்டுகளுக்கு முன் திருச்சியில் ஒரு கூட்டத்தில் பேசிய செய்தியாக என் அப்பா சென்ற ஆண்டு என்னிடம் கூறினார். நாம் அன்றாட பேச்சு வழக்கத்தில் திருக்குறள் அதிகார எண்களை கூறி பழக வேண்டும் என்றார். நல்லதோர் கருத்தாக எனக்கு தோன்றியது. வாழ்க்கையின் அனைத்து அனுபவங்களைத் தானே 133 அதிகாரங்களாக வள்ளுவம் நமக்கு தருகிறது.

இதன் அடிப்படையில் எனக்கும் என் பெண்ணுக்கும் நடக்கும் சிறு உரையாடலை இங்கே தருகிறேன்.

" 40, 14 எப்படி ? " நான்.

" 60 !!!! தினமும் இதே 42 ? நான் எப்போதாவது உங்களிடம் 68 எப்படி என்று கேட்டிருக்கேனா ? " அவர்.

"38 ! " என்று நான் நினைத்துக் கொண்டேன்.


சிறு குறிப்பு : மேலே உள்ள எண்களை அதிகார தலைப்புகளாக மாற்றினால்...
40 - கல்வி ; 14 - ஒழுக்கம் ; 60 - ஊக்கமுடைமை ; 42 - கேள்வி ; 68 - வினை செயல்வகை(வேலை) ; 38 - ஊழ் ( விதி) .








"

Tuesday, April 15, 2008

வரி = நேர்த்தி கடன் ?

சித்திரை பிறந்தால் வரி செலுத்தும் தருணம். அமெரிக்காவில் ஏப்ரல் 15ம் தேதி வரி செலுத்த கடைசி தேதி. ஆனாலும் இந்த தேதியில் அனுப்ப முடியவில்லை என்றால் முறையாக நீட்டித்தும் கொள்ளலாம்.

கடந்த 10 ஆண்டுகளாக இத்தேதிக்குள் அனுப்பி வந்தவன், இந்த ஆண்டு நீட்டித்து விண்ணப்பித்தேன். தோராய பணத்தை(advance tax) அனுப்பி வைத்தேன். நிறுவன கணக்குகளை இன்னும் முடிக்கவில்லை. இன்னும் 15 நாட்களுக்குள் முடித்துவிடுவதாக கணக்கர் உறுதி அளித்துள்ளார். அடுத்த ஆண்டிலிருந்து இவற்றையெல்லாம் உரிய காலத்தில் முடிக்க முயல வேண்டும்.


பொறையொருங்கு மேல்வருங்கால் தாங்கி - இறைவற்கு
இறையொருங்கு நேர்வது நாடு. [ நாடு 74 : 3 ]

{ பொறை - சுமை ; ஒருங்கு - ஒன்று, முழுமை ; நேர்வது - செலுத்துவது }
பொருள் : எவ்வளவு சுமை இருந்தாலும், வரியை ஒழுங்காக செலுத்துவது நாட்டு மக்களின் கடமை !



(1) வரியை முறையாக செலுத்தாமல், அரசிடம் இருந்து தரமான சேவையை எதிர்பார்ப்பது முறையன்று.
(2) வரியை குறைக்க முறையான வழிகள் உண்டு. ஓய்வு கால சேமிப்பு(401K, IRA) ஓர் உதாரணம். நல்ல சான்றுபெற்ற பொதுக் கணக்கரை(Certified Public Accountant) அணுகினால் ஆலோசனைகள் வழங்குவர்.

இதை படித்தவுடன் வரி செலுத்துவது மட்டும்தான் நம் கடமையா? வரியை எப்படி பயன்படுத்துவது(செலவிடுவது) என்று இறைக்கு(நாட்டின் தலைமைக்கு) வள்ளுவம் என்ன சொல்கிறது என்று நீங்கள் நினைப்பது எனக்கு புரிகிறது.


நாட்டின் தலைமை(வரியை வைத்து ) என்ன செய்ய வேண்டும்?

நாட்டின் தலைமை பொதுவாக மூன்று வகையான பொருட்களை(Revenue) ஈட்டுகின்றது. விளை பொருள்(Produce), வரி பொருள்(Tax), தண்டப் பொருள்(Penalty,fine).

உறுபொருளும் உலகு பொருளும்தன் ஒன்னார்த்
தெறுபொருளும் வேந்தன் பொருள்.
[ பொருள் செயல்வகை 76 : 6 ]
{ உறுபொருள்- விளைபொருள் ; உலகுபொருள் - வரி ; ஒன்னார் தெறுபொருள் - தண்டனை பொருள் }



இந்த பொருளை எப்படி நிர்வாகம் செய்ய வேண்டும்?

இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்லது அரசு. [ இறை மாட்சி 39 : 5 ]

{ இயற்றல் - வரிக்கு மட்டுமல்லாமல் அனைத்து முறைகளையும் உருவாக்குதல்(Design of Processes,Systems) ; ஈட்டல் - வரியை பெருதல்(Collection) ; காத்தல் - பெற்ற வரியை வீணாகாது காத்தல்(Preservation) ; வகுத்தல் - காத்துவரும் வரியை நாட்டிற்கு பகுத்தளித்தல்(Proper distribution }

வரி முதலான மூன்று பொருள்களுக்கும் இது பொருந்தும். இப்படி முறையாக நிர்வாகம் செய்யாத அரசை என்ன செய்யலாம்? ' ஓட்டு' உள்ளது. ஏனைய சனநாயக முறைகளும் உள்ளன !


அன்புடன்,
கரு.மலர்ச் செல்வன்

Tuesday, April 01, 2008

செல்வத்துள் செல்வம் செவிச் செல்வம்

காலை 6.40
"பாரதி, இறை வாழ்த்து பாடலாம் வாங்க" .

வந்து அமர்ந்தோம்.

பாலும் தெளிதேனும்..
வாக்குண்டாம்..
விழிக்குத் துணை திருமென் மலர் பாதங்கள்...
மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்...
உலகம் யாவையும் தாமுள ஆக்கலும்..
திருக்குறள் கேள்வி அதிகாரம் பாட ஆரம்பித்தார் பாரதி.

"கேள்வி என்றால் என்ன?" நான்.
"Question ! " என் மகள்.
" சரி. கேள்வியின் இன்னொரு பொருள் - கேட்டல், Listening, Following Directions" - நான்.

பத்து குறள்களையும் தெளிவாக படித்தார்.

.......
.............
...........................

பிழைத்துணர்ந்தும் பேதைமை சொல்லார் - இழைத்துணர்ந்து
ஈண்டிய கேள்வி யவர். [ கேள்வி 42 : 7 ]

" கொஞ்சம் நிறுத்துங்க. இன்று உங்களுக்கு தேர்வு. தேர்வின் கேள்விகளை சரியாக புரிந்து கொண்டால், பிழையான பதில்களை சொல்ல மாட்டீர்கள் அல்லவா ?" நான் விளக்கினேன்.
.....
...............
..................

செவியின் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்
அவியினும் வாழினும் ஏன் ? [ கேள்வி 42 : 10] - பாடி முடித்தார் பாரதி.

"மற்றவர்கள் சொல்வதை கேட்காமல், பேச வல்ல மக்கள் விலங்குகள். அவர்கள் மறைந்தால் என்ன? வாழ்ந்தால் என்ன? " நான்.

" நாமும் மனிதனாகும் முன் விலங்காக தானே இருந்தோம்" - மகள்.

" ஆமாம். ஆனால் இப்போது விலங்காக இருக்கிறோமா? மனிதனாக மாறியிருக்கிறோம் அல்லவா? " - நான்

" டால்பின் தொடர்ந்து பேசிக் கொண்டுதானே இருக்கும். ஆனால் அதற்கு நல்ல நுண்ணறிவு இருக்கிறதே" , எங்கோ படித்ததை நினைவுடன் சொன்னார் பாரதி.

" டால்பினுக்கு நல்ல கேட்கும் சக்தி உள்ளதா? " தொடர்ந்து கேட்டார்.

பதில் தெரியவில்லை. இணையத்தில் தேட வேண்டும்.

Tuesday, February 26, 2008

இடுக்கண் வருங்கால் நகுக - 2

இயற்கையான துன்பங்களை எப்படி எதிர்கொள்வது என்று முதல் பாகத்தில் எழுதினேன். அடுத்து பிறரால் உண்டாகும் துன்பங்களை பற்றி இங்கு பார்ப்போம்.

பயணி ஒருவர் அவர் செல்லவேண்டிய விமானம் தாமதமானதால், அங்கிருந்த பணியாளரிடம் கோபமாக கத்திக் கொண்டிருந்தார். ஆனால் என்ன வியப்பு ! அந்த பணியாளரோ மிகவும் பணிவாகவும், நிதானமாகவும் பதில் சொல்லிக் கொண்டிருந்தார். அரை மணிநேரம் கழித்து அப்பயணி செல்லவேண்டிய விமானம் வந்தது. அந்த கோபக்கார பயணியும் சென்று விட்டார். ஆகா! இந்த பணியாளர் ஒரு ஞானியாக இருப்பார். பிறரால் வரும் துன்பத்தை எதிர்கொள்வது எப்படி என்று இவரிடம் தான் கேட்க வேண்டும் என்று அவரிடம் சென்று, " அண்ணே, எனக்கு கூட- இருக்கின்ற குடும்பத்தினர் செய்த துன்பங்களையே பொறுத்துக் கொள்ள முடியவில்லையே. எப்படி தெரியாத இது போன்றவர்கள் தரும் துன்பங்களை பொறுத்துக் கொள்கிறீர்கள் ?" என்றேன். அதற்கு அவர், " அப்படியெல்லாம் ஒன்றில்லை. அந்த பயணி ஐரோப்பாவிற்கு போகிறார். ஆனால் அவருடைய பைகளோ சிங்கப்பூருக்கு போகிறது !" என்றாரே பார்க்கலாம்.

பிறரால் வரும் துன்பங்களை கையாள இரண்டு வழிமுறைகளை திருவள்ளுவர் கூறியுள்ளார்.

(1) இலக்கம் உடம்பிடும்பைக்கு என்று கலக்கத்தைக்
கையாறாக் கொள்ளாதாம் மேல்.
[ இடுக்கண் அழியாமை 63 : 6 ]
[துன்பத்தின் இலக்கு உடம்புதான் அன்றி வேறெதுமில்லை என்று நினைப்பவர்கள் கலக்கத்தை ஒழுக்கநெறியாக கருதி வருந்தார்' ]

தன் நாட்டு மக்களின் விடுதலைக்காக பாடுபட்ட காந்தி, மேண்டெலா, அன்வர் சாதத்(எகிப்தின் முன்னால் தலைவர்) போன்றோர் சிறைத் துன்பங்களை எதிர்கொண்டதெல்லாம் இவ்வழியில் தானே.


(2) திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்து
அறனல்ல செய்யாமை நன்று [ பொறையுடைமை 16 : 7 ]
[தகுதியில்லாததை ஒருவர் செய்யினும், நொந்துபோய் அறன் அல்லாத செயல்களை செய்யாமல் இருப்பது நன்று]

பழிக்குப் பழி என்று நினைத்து அறன் அல்லாத செயல்களில் ஈடுபட்டதால் உலகத்தில் போர்களும், குடும்பத்தில் அமைதியற்ற சூழல்களும் உண்டாகிறது.
பொதுவாக ஒருவர் நமக்கு கொடுக்கும் துன்பத்திற்கு நம்முடைய பதில்
(அ) ஒறுத்தல்(தண்டித்தல்)
(ஆ) பொறுத்தல்
(இ) மறத்தல்
ஆகியவற்றுள் ஒன்றாக இருக்கும்.

கணவன் - மனைவியிடையே ஒரு பிரச்சனை வருகிறது. அப்போது மனைவி ஏதாவது கோபமாக ஏதாவது சொல்லிவிடுகிறார், அடுத்து பாத்திரம் பறக்கிறது ! அப்போது கணவரும் தகுந்த தண்டனை கொடுக்க வேண்டும் என்று நினைத்து செயல்பட்டால் என்னாகும் ? மாறாக பொறுத்து செயல்பட்டால் அந்த உறவு பலப்படும் அல்லவா ? மேலும் சில ஆண்டுகள் கழித்தும், கணவர் அந்த நிகழ்ச்சியை மறக்காமல், தருணம் வரும்போது பழைய தவறுகளைச் சொல்லிக் கொண்டிருந்தால் துன்பம் என்ற உளைச்சலில் உழன்று கொண்டிருக்க வேண்டியதுதான்.


அமைதியான குடும்பம் , வளமான உறவுகளை விரும்புவோர் கடைபிடிக்க வேண்டிய இரண்டு திருக்குறள்கள் இவை. பிறர் தரும் துன்பங்களை இன்பங்களாக மாற்ற விழைவோர் நினைவில் கொள்ள வேண்டிய நெறிமுறைகள் இவை.

அன்புடன்,
கரு.மலர்ச் செல்வன்