Friday, July 27, 2007

உ.. ஊ

அழகிய குளம். ஆழமான நீர். தாமரை இலை தண்ணீர் மேல் பசுமையாக உள்ளது. அதற்கு மேல் அழகிய பூ மலர்ந்துள்ளது. தண்ணீர் இன்னும் 5 அடி உயர்ந்தாலும், தாமரையும் தன்னை உயர்த்தும் அதிசயத்தை பார்க்கிறோம்.
இந்த இயற்கை சொல்லும் வாழ்வியல் தத்துவத்தை கவனிக்கலாம்.

தாமரை வாழ்வின் 'உயர்வை' குறிக்கிறது. பல்வேறு துறைகளில் வெற்றிபெற்ற மனிதர்களை பார்க்கிறோம். அவர்கள் உயர்வை வியக்கிறோம். ஆனால் அந்த உயர்நிலைக்கான ஆதாரத்தை ஆராய்கின்றோமா? தாமரை மலரின் உயர்வுக்கு சேற்றில் புதைந்துள்ள விதையும், நீர்நிலையின் உயரத்துக்கு ஏற்ப மாறுகின்ற தண்டும் காரணமாக அமைகிறது அல்லவா? அதுபோல் வாழ்வின் உயர்விற்கு விதை போன்ற உள்ளமும், வேர் போன்ற உறுதியும், தண்டை போன்ற ஊக்கமும் அமைவதால் தாமரை உயர்ந்துள்ளது.

வெள்ளத் தனைய மலர்நீட்டம் - மாந்தர்தம்
உள்ளத் தனையது உயர்வு
. [ ஊக்கமுடைமை 60 : 5 ]


என் கிராமத்து ஆசிரியர் சிலேட்டில் எழுதப்பழக்கும் போது முதலில் 'உ' என்ற எழுத்தை மேலே எழுதி பிறகு எழுதுவார்.

'' என்பது உயர்வையும், அதற்கு வித்தான உள்ளத்தையும், நிலைநிறுத்தும் உறுதியையும் குறிக்கும்.


உள்ளம்:
இதற்கு 'Intent' என்பதே சரியான மொழிப்பெயர்ப்பாக இருக்கும் என்று நினைக்கிறேன். உள்ளத்தில் ஒன்றை நினைக்கின்றோம் என்றால் அதை நாம் சற்றே குறையாமல் அடைக்காத்தால்(பெண் கோழி முட்டையை காப்பதுபோல், ஆண் பெங்குயின் தன் குஞ்சை வாரக்கணக்காக காப்பதுபோல்) , நாம் நினைப்பது அப்படியே நடக்கும்.

உள்ளியது எய்தல் எளிதுமண் - மற்றும்தான்
உள்ளியது உள்ளப் பெறின். [ பொச்சாவாமை 54 : 10 ]

Achieving what you intented is easy, if you preserve the power of the intention as it was !


உறுதி:

அக்கால போர்களில் ஆண் யானைகளை(களிறு) படையின் முன்னால் அனுப்புவது வழக்கமாம். ஏனென்றால் எதிரியின் அம்புகள் வேகமாக பாய்ந்து ஆழமாக உடம்பில் பதிந்தவிட்டபோதிலும், அந்த யானைகள் வீழாது உறுதியாக நிற்குமாம்.

சிதைவிடத்தும் ஒல்கார் உரவோர் - புதைஅம்பின்
பட்டுப்பாடு ஊன்றும் களிறு
. [ ஊக்கமுடைமை 60 : 7 ]

{உரம் - ஊக்கம் ; சிதைவு - அழிவு ; ஒல்கார்- தளரார் ; ஊன்று - உறுதி ; களிறு - ஆண் யானை }


ஊக்கம்:
உறுதிக்கு யானையை உதாரணம் காட்டும் வள்ளுவம், ஊக்கத்துக்கு எதை உதாரணம் காட்டுகிறது?

யானை பெரியது ; கூர்மையான தந்தங்களை உடையது. இருந்தாலும் புலி தாக்கினால் அந்த பெரிய யானையும் அழியும் !

பரியது கூர்ங்கோட்டது ஆயினும் யானை
வெரூஉம் புலி தாக்குறின்
. [ ஊக்கமுடைமை 60 : 9 ]

{பரியது - பெரியது ; கோட்டு - தந்தம் ; வெரூஉம் - அழியும் }
ஊக்கம் என்பதை உரம் என்றும் சொல்லலாம்.


உ - உள்ளம், உறுதி, உரம், உயர்வு

ஊ - ஊக்கம்

இக்குறள்களை நாம் மந்திரமாக ஓதினால் வாழ்வில் உயர்வு பெறுவது உறுதி.


அன்புடன்,
கரு.மலர்ச் செல்வன்

2 comments:

nayanan said...

//தாமரையும் தன்னை உயர்த்தும் அதிசயத்தை பார்க்கிறோம்.
இந்த இயற்கை சொல்லும் வாழ்வியல் தத்துவத்தை கவனிக்கலாம்.
//

அன்பிற்குரிய நண்பர் மலர்ச்செல்வன்,
இந்தத் தத்துவங்களின் இயற்கையோடு
ஒன்றிய வளமை நம்மை வியக்க வைக்கிறது.

தங்களின் இனிய பரத்தீட்டோடு (Presentation) இந்தத் தொடர்
அழகாகவும், பயனுள்ளதாகவும்
இருக்கின்றது.

தொடர்ந்த பதிவுகளுக்குப் பாராட்டுகள்.

அன்புடன்
நாக.இளங்கோவன்

Anonymous said...

தாமரை மலர் பற்றி உங்களின் விளக்கம் அருமை.